2011-12-01 15:36:02

அகழ்வாராய்வுகள் ஆதிகிறிஸ்தவர்களின் விசுவாச வாழ்வை வெளிப்படுத்துகின்றன என்கிறார் திருத்தந்தை


டிச 01, 2011. இளம் கலைஞர்கள், வல்லுனர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் கிறிஸ்தவ மனிதாபிமானத்தை ஊக்குவித்து வரும் பாப்பிறைக்கழகங்களின் அங்கத்தினர்களை பாராட்டுவதாக அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
'சாட்சிகளாக வாழ்வதும் சாட்சி பகர்வதும். விசுவாச வீரர்கள் மற்றும் மறைசாட்சிகள்' என்ற தலைப்பில் இடம்பெறும், பல்வேறு பாப்பிறைக் கழகங்களின் ஒன்றிணைந்த 16வது பொது அமர்வுக் கூட்டத்தில் பங்குபெறுவோரக்கு இப்பதன் மாலை திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில், எவ்வாறு நற்செய்தியும் புனிதத்துவமும் வரலாற்றில் வாழப்பட்டு சாட்சி பகரப்பட்டுள்ளது என்பது குறித்து ஆழமாக சிந்திக்க இத்தலைப்பு ஒரு வாய்ப்பைத் தருவதாக உள்ளது என்றார்.
இன்றைய அகழ்வாராய்வுகளின் வழி நாம் காண்பது கட்டிடங்கள், கோவில்கள் மற்றும் கல்லறைகள் போன்ற பொருட்களே எனினும், அவைகள் சரியான முறையில் படிக்கப்பட்டு புரிந்துகொள்ளப்பட்டால் அங்கு நாம் கடந்தத் தலைமுறைகளின் வாழ்வுக் கூறுகளையும் கிறிஸ்தவ விசுவாசத்தையும் காண முடியும் என மேலும் கூறியுள்ளார் திருத்தந்தை.
இன்றைய நவீனத் தொழில்நுட்பங்கள் குறித்த தன் பாரட்டுக்களையும் வெளியிட்ட பாப்பிறை, அவைகளோடு ஆய்வாளர்களின் உண்மையான திறமைகளும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
புனித பூமியிலும், உரோம் நகரிலும், மற்றும் கிறிஸ்தவர்கள் பரவிய ஏனைய பகுதிகளிலும் நடத்தப்பட்ட அகழ்வாராய்வுகள் வழி கிடைத்த ஆதி கிறிஸ்தவர்களின் சாட்சிய வாழ்வு குறித்தும் தன் செய்தியில் எடுத்துரைத்துள்ளார் பாப்பிறை.








All the contents on this site are copyrighted ©.