2011-11-30 15:54:15

பூனே நகரில், 150 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கிறிஸ்தவக் கோவில் தீக்கிரையானது


நவ.30,2011. இந்தியாவின் பூனே நகரில், 150 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமை வாய்ந்த கிறிஸ்தவக் கோவில் ஒன்று இத்திங்களன்று தீக்கிரையானது.
பழமை வாய்ந்த இக்கோவிலை தான் நேரில் சென்று பார்த்ததாகவும், அக்கோவிலின் பீடம், மறையுரை மேடை, விவிலியம் உட்பட கோவிலின் உட்பகுதி முழுவதும் சாம்பலாகி விட்டதென்று பூனே ஆயர் தாமஸ் தாப்ரே கூறினார்.
ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த மறை பணியாளர்களால் 1860ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கோவில் அழிந்ததோடு, அங்கு பல ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட உருது மொழி விவிலியம் ஒன்றும் தீயில் அழிந்து விட்டதென்று கோவிலின் மறைபோதகர் Sachin Masih கூறினார்.
இத்திங்கள் காலை 8 மணி அளவில் ஆரம்பமான இந்தத் தீ, விரைவில் கோவிலெங்கும் பரவியது என்றும், ஐந்து தீயணைக்கும் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டாலும் கோவிலைக் காக்க முடியவில்லை என்றும் கோவில் நிர்வாகி தாமஸ் இர்வின் கூறினார்.
தீ விபத்தின் முழுக் காரணங்களையும் ஆராய்ந்து வருவதாகக் கூறும் காவல் துறையினர், மின் இணைப்புக்களில் உருவான பழுதுகளே முக்கிய காரணம் என்று தாங்கள் கருதுவதாகத் தெரிவித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.