2011-11-30 15:53:11

புருண்டி நாட்டில் கொலையுண்ட அருள் சகோதரி, தன்னார்வப் பணியாளரின் மரணம் குறித்து திருத்தந்தை அனுப்பியுள்ள தந்திகள்


நவ.30,2011. இஞ்ஞாயிறன்று ஆப்ரிக்காவின் புருண்டி நாட்டில் கொலை செய்யப்பட்ட அருள் சகோதரி, மற்றும் தன்னார்வப் பணியாளரின் மரணம் குறித்து தன் ஆழ்ந்த வருத்தத்தைத் தந்திகள் மூலம் வெளிப்படுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
Brescia வின் பிறரன்பு சகோதரிகள் சபையைச் சார்ந்த அருள்சகோதரி Lukrecija Mamic, மற்றும் தன்னார்வத் தொண்டர் Francesco Bazzani ஆகியோர் கொலையுண்டதையொட்டி, Ngozi மறைமாவட்ட ஆயர் Gervais Banshimiyubusa, அருள்சகோதரி Mamic சார்ந்திருந்த துறவு சபைத் தலைவி, மற்றும் தன்னார்வத் தொண்டர் Bazzaniஇன் குடும்பத்தினர் அனைவருக்கும் திருத்தந்தையின் பெயரால் அனுதாபத் தந்திகளை திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே அனுப்பியுள்ளார்.
இறந்தோர் இருவரையும் இறைவன் தன் அரசில் வரவேற்கவும், இவ்வன்முறையில் படுகாயம் அடைந்துள்ள அருள்சகோதரி Lucia Brienzaவுக்குத் தேவையான வலிமையை இறைவன் தரவும் தான் வேண்டி வருவதாக திருத்தந்தை இத்தந்திகளில் குறிப்பிட்டுள்ளார்.
இத்துயர நிகழ்வால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும், சிறப்பாக, தன்னார்வத் தொண்டர் Bazzaniஇன் குடும்பத்தினர், அருள்சகோதரிகளின் சபையைச் சார்ந்தவர்கள் மற்றும், Ngozi மறைமாவட்ட மக்கள் அனைவருக்கும் தன் ஆழ்ந்த அனுதாபங்களையும், செபங்களையும் இத்தந்திகள் வழியாகத் திருத்தந்தை வெளியிட்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.