2011-11-28 15:37:51

வாரம் ஓர் அலசல் - உன்னால் முடியாதது உண்டா? (International Day of Disabled Persons 2011, Dec.3)


RealAudioMP3 நவ.28,2011. ஒரு நாள் தேனீர்க் கடை ஒன்றில் நெட்டை மனிதர் ஒருவரும் குட்டை மனிதர் ஒருவரும் சந்தித்துக் கொண்டனர். இருவரும் ஒரே மேஜையில் அமர்ந்து தேனீரும் இனிப்பும் சாப்பிட்டனர். பல உலக நடப்புக்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, திடீரெனக் குட்டையர் நெட்டையரிடம், நீ நெட்டையாய், “நெடு நெடுவென நெடுமரம் போல இருக்கிறாயே, உனக்கு வெட்கமாக இல்லையா?” என்று கேட்டார். அதற்கு நெட்டையர், இதிலென்ன வெட்கம், மாடியில் காயப்போட்ட துணியைக் கீழ்வீட்டில் இருந்தபடியே படியேறிப் போகாமலே எடுத்து விடுகிறேன், இது வசதியாக இருக்கிறது என்று பதில் சொன்னர். பின்னர் நெட்டையரும் குட்டையரிடம், “ஆமா, நீ இவ்வளவு குட்டையாய் இருக்கிறாயே, உனக்கு வெட்கமாக இல்லையா? என்று கேட்டார். அதற்கு குட்டையர், இதில் வெட்கப்பட என்னய்யா இருக்கிறது, கீழே காசு விழுந்தால் குனியாமல் எடுத்து விடுகிறேன். இது உன்னால் முடியுமா?” என்று கேட்டுக் கொண்டே காசைக் கீழே போட்டார் குட்டையர்.

இந்த இரண்டு மனிதர் போலவே, சிலர் தங்களிடமுள்ள அங்கவீனங்களை முன்னேற்றத்திற்கானப் படிக்கல்லாகப் பார்க்கிறார்கள். இவர்கள், தங்களைப் பார்த்து, நீ நொண்டி, நீ செவிடு, நீ ஊமை என்று பிறர் கேலி செய்தாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் இருப்பார்கள், அதேநேரம் அந்தக் குறைகளை நிறைவாய் நோக்குகிறார்கள். ஒருசமயம், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் வழுக்கை தலை பற்றிப் பேச்சு வந்ததாம். அவர் அதைப் பற்றிக் கவலைப்படாமல் சட்டென ஒரு பதிலைச் சொன்னாராம். “வழுக்கை என்பது முதுமையின் அடையாளம் அல்ல, அது இளமையின் அடையாளம். எப்படியெனில், தேங்காய்ப் பறிக்கும் போது, இளசா நாலு காய்ப் பறித்துப் போடுப்பா என்பார்கள். அவர் நாலு வழுக்கையைப் பறித்துப் போடுவார். ஆக, வழுக்கை என்பது இளமை. ஆகவே நான் வழுக்கையாய் இருக்கிறேன் என்றால் இளமையாய் இருக்கிறேன் என்று அர்த்தம்” என்று கூறினாராம். அதேபோல் முதுமையில் திருமணம் செய்து கொண்ட நீதிபதி முத்துசாமி ஐயர் அவர்களிடம், “ஏன் நீங்கள் இந்த வயதில் திருமணம் செய்து கொண்டீர்கள்?” என்று ஒருவர் கேட்டாராம். அதற்கு அவர் “நல்ல மனைவியாக இருந்தால் இவ்வளவு நாள் தேடியதற்கு நல்ல பலன் என்று மகிழலாம். மோசமான மனைவியாக இருந்தால் சரி சரி இன்னும் கொஞ்சம் நாள் தானே என்று ஆறுதல் அடையலாம்” என்று சொன்னாராம்.

இவ்வாறு எதிலும் நேர்மறைச் சிந்தனைகளுடன், தன்னம்பிக்கையுடன் வாழும் உயரிய உள்ளங்களை நேரில் பார்க்கிறோம். செய்தித் தாள்களில் வாசிக்கிறோம். ஒரு சிறுவனுக்குப் பிறக்கும் போதே இரண்டு கால்களும் இல்லை. அப்படியிருந்தும் அவன் தன்னம்பிக்கையுடன் செயற்கைக் கால்களில் நடக்கிறான். நடப்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொள்கிறான். இதனை காணொளிப் படத்தில் கண்ட போது நமக்கு வியப்பாக இருந்தது. அதேபோல் பிலிப்பைன்சைப் பூர்வீகமாகக் கொண்டு அமெரிக்காவில் வாழும் Jessica Cox, பிறக்கும் போதே இரண்டு கைகளும் இல்லாமல் பிறந்தவர். ஆனால் இன்று, உலகில் கைகள் இல்லாத முதல் விமான ஓட்டி என்ற பெயரைப் பெற்று கின்னஸ் சாதனைப் படைத்துள்ளார். அரிசோனா மாநிலத்தின் டஸ்கனில் பிறந்த காஸ்க், விமானம் ஓட்டுவதைத் தவிர, தனது சொந்தக் காரையும் ஓட்டுகி்றார். கடந்த 2010ம் ஆண்டு ஜூலையில் வத்திக்கான் வந்து திருத்தந்தையைச் சந்தித்து தனது உலகக் கின்னஸ் சாதனைத் தங்கப் பதக்கத்தையும் அவரிடம் கொடுத்தார் காஸ்க். என்னால் எல்லாம் முடியும் என்று தனது பெற்றோர் தன்னை ஊக்கப்படுத்தியதாகச் சொல்லும் இந்த மாற்றுத்திறனாளி ஜெசிக்கா காஸ்க், ஒருவர் தன்னம்பிக்கையுடன் இருந்தால் அனைத்தையும் சாதிக்கலாம் என்று சொல்கிறார்.

ஹெலன் கெல்லர், அமெரிக்க ஐக்கிய நாட்டு அலபாமா மாநிலத்தில் 1880ம் வருடம் ஜூன் 27ம் நாள் பிறந்தார். அவர் பிறந்து 19 மாதங்களில் ஏற்பட்ட கடும் காய்ச்சல் காரணமாக கண் பார்வை, கேட்கும் சக்தி, பேசும் சக்தி ஆகியவற்றை இழந்தார். ஆன் சல்லிவன் என்ற ஆசிரியரின் முயற்சியால், பார்வையிழந்தோருக்கான பிரெயில் முறையில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மானியம், கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளைக் கற்றார். நியூயார்க் ராட்கிளிஃப் கல்லூரியில் பட்டம் பெற்ற முதல் காது கேளாத, கண்பார்வையற்ற மனிதர் என்ற புகழையும் அடைந்தார் ஹெலன் கெல்லர். அறிவாற்றலிலும் நெஞ்சுரத்திலும் சாதாரண மனிதர்களுக்கு சற்றும் சளைக்காதவரான கெல்லர், சிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் உருவெடுத்தார். உழைப்பாளர் உரிமைகளையும், ஷோசலிசத் தத்துவத்தையும் ஆதரித்து பல கட்டுரைகளும் புத்தகங்களும் எழுதினார். தன் பெயரிலேயே பார்வையற்றோர் நலனுக்காக இலாப நோக்கற்ற அமைப்பை ஏற்படுத்தினார். தனது ஆசிரியர் ஆன் சல்லிவனுடன் 39 நாடுகளுக்குòd சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஹெலன் கெல்லர், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தன் வாழ்நாள் முழுவதும் செலவிட்டார்.

சிதம்பரநாதன் என்பவர், தமிழகத்தின் சமூகத்தளத்தில் மிகவும் அறியப்பட்டவர். இவர் 2 வயதில் போலியோவினால் தாக்கப்பட்ட ஒரு மாற்றுத்திறனாளி. ஊனமுற்றோர் என்ற பெயரையே மாற்றி மாற்றுத்திறனாளிகள் என்று பெயருக்குச் சான்றாக இருப்பவர். மாற்றுத் திறனாளிகள் தன்னம்பிக்கை நிறைந்தவர்கள் என்று நம்பும் அளவுக்கு வாழ்ந்து வருபவர். அவர் தமிழ் இணையதளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் சொல்கிறார் –

மாற்றுத்திறனாளிகள் மதிப்புமிக்க மனிதர்கள். அவர்களிடத்திலும் சாதாரண மனிதனிடம் இருக்கிற எல்லா ஆற்றலும் இருக்கிறது. ஆனால் ஊனம் அல்லாதவர்கள் என்று சொல்லப்படுகிறவர்களிடமும் குறைபாடு இருக்கிறது. அதுபோன்றுதான் மாற்றுத்திறனாளிகளிடமும் குறைபாடுகள் இருக்கின்றன. இது உடல், மனம் சார்ந்த விடயம். உடல் உறுப்புக்களில் ஏற்படும் குறை ஒரு குறை அல்ல. ஒருவருடைய திறமையை அவனுடைய ஆசிரியர்களால், பெற்றோர்களால் கண்டுகொள்ள முடியும். அதுபோல, ஒன்றுமே முடியாது என்று இருப்பவனிடம், அவனுடைய செயல்பாடுகளை வைத்து பராமரிப்பவர்கள் அவனுடைய ஆற்றலைக் கண்டுபிடித்து வளர்க்க முடியும்.

மாற்றுத் திறனாளிகளான தாமஸ் ஆல்வா எடிசன், பீத்தோவன், மில்டனில் போன்றோர் தொடங்கி இன்றைக்கு இருக்கும் ஸ்டீஃபன் ஹாக்கிங் வரை பலரது வாழ்வை எடுத்துக்காட்டாகக் கூறியிருக்கிறார் சிதம்பரநாதன். ஸ்டீஃபன் ஹாக்கிங்கால் நடக்க முடியாது, கை இயங்காது, வாய் பேச முடியாது என எல்லாம் முடங்கப்பட்ட பன்முகப்பட்ட மாற்றுத் திறனாளி. இப்பிரபஞ்சத்தினுடைய இயக்கம் குறித்தான, இன்றைய நவீன அறிவியலில் இவருடைய கண்டுபிடிப்புதான் ஐன்ஸ்டீன், நியூட்டன் ஆகியோருக்குப் பின்னர் முக்கியமானது என்று பேசியிருக்கிறார்.

ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் கூறியுள்ளது போன்று, மானுட வாழ்வில் நிலவிவரும் ஏற்றத்தாழ்வை நீக்குவதே மானுடத்தின் மிகப் பெரிய சாதனையாக இருக்கும். மானுடத்தின் மிகப்பெரிய சாதனை என்பது புதிய, புதிய கண்டுபிடிப்புக்களில் இல்லை. மாறாக, அப்படிப்பட்ட புதிய கண்டுபிடிப்புக்கள், மனித குலத்தில் நிலவி வரும் ஏற்றத் தாழ்வைக் களைய எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதில்தான் உள்ளது. ஏற்றத் தாழ்வை ஒழிக்கத் தேவையான மாற்றம் சாதாரணமானதல்ல, அது மிகவும் சிக்கலானது. அந்தச் சிக்கல்களை வெட்டி வீழ்த்தித் தீர்வு காண நான்கு படி நிலைப் பாதை உள்ளது. ஒன்று, இலக்கை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும், இரண்டு, அதனை அடைய அதிகபட்ச சாத்தியமுடைய அணுகுமுறையைக் கண்டுபிடிக்க வேண்டும், மூன்று, அதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்க வேண்டும், நான்காவது அந்தத் தொழில்நுட்பம் நீங்கள் ஏற்கனவே அறிந்த ஒன்றாக, அதாவது மிக அதிக விலையுள்ள மருந்தாகவோ அல்லது மிகச் சாதாரணமான படுக்கை வலையாகக் கூட இருக்கலாம், அதனையும் கண்டறியுங்கள் என்று பேசியிருக்கிறார்.

அன்பு நெஞ்சங்களே, உலக மக்கள் அனைவரும் மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளைப் புரிந்து கொள்வதுடன், அவர்களுக்கு மேன்மையையும், உரிமைகளையும் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஐக்கிய நாடுகள் நிறுவனம் 1981-ம் ஆண்டை உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டாக அறிவித்தது. 1982ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதியை பன்னாட்டு மாற்றுத்திறானாளிகள் நாளாகவும் ஐ.நா. அறிவித்தது. அன்று முதல் ஒவ்வோர் ஆண்டும் இந்த நாள் சிறப்பிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி வருகிற சனிக்கிழமை அனைத்துலக மாற்றுத்திறனாளிகள் தினம்.

இன்று உலகில் சுமார் 65 கோடிப் பேர் மாற்றுத்திறனாளிகள். உலகின் மிக ஏழைகளில் ஏறக்குறைய இருபது விழுக்காட்டினர் ஏதாவது ஒரு குறைபாட்டுடன் இருக்கின்றனர் என்று உலக வங்கி கூறுகிறது. மேலும், வேலை செய்யும் வயதுடையவர்களில் 38 கோடியே 60 இலட்சம் பேர் ஏதாவது ஒரு குறைபாட்டுடன் இருக்கின்றனர். சில நாடுகளில் இந்த மாற்றுத்திறனாளிகளில் வேலைவாய்ப்பின்மை சுமார் 80 விழுக்காடாக இருக்கின்றது. இவர்களுக்கு எதிரானப் பாகுபாடுகளைக் களையும் சட்டங்களை 45 நாடுகள் கொண்டிருக்கின்றன. இந்தியாவிலுள்ள சுமார் 7 கோடி மாற்றுத்திறனாளிகளில் சுமார் ஒரு இலட்சம் பேருக்கே தொழிற்சாலைகளில் வேலை கிடைத்துள்ளது. இந்த மாற்றுத்திறனாளிகளில் சுமார் 70 விழுக்காட்டினர் கிராமங்களில் வாழ்கின்றனர் என்று உலக தொழில் நிறுவனம் கூறுகிறது.

அன்பர்களே, மாற்றுத்திறனாளிகளில் பலர் தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து வருகிறார்கள். தன்னம்பிக்கையும் ஆர்வமும் உள்ள இவர்கள், தங்களால் முடியாதது உண்டா? என வியக்கும் அளவுக்குச் செயல்பட்டு வருகிறார்கள். உடலில் உறுப்புக் குறைபாடு, குறைபாடே அல்ல என இவர்களது செயல்கள் நிரூபிக்கின்றன. இராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூரை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி சாமுவேல், தொடர்ந்து படிக்க விரும்பி பட்டினி கிடந்து தனது ஏழைப் பெற்றோரைப் பணிய வைத்துள்ளான். படிப்பில் கெட்டிக்காரனாக விளங்கும் சாமுவேல், தனது தம்பிகள் உதவியுடன் 2 கி,மீ. தூரம் சக்கர பிளாஸ்டிக் நாற்காலியில் பள்ளிக்குச் செல்கிறான். மருத்துவர் ஆகி, இலவச சேவை செய்வதே தனது இலட்சியம்,” என்கிறான் சாமுவேல். எப்போதும் சிரித்த முகத்துடன் காணப்படும் சாமுவேல் மற்ற மாணவர்களுக்கும் ஒரு புத்துணர்ச்சியையும் தன்னம்பிக்கையையும் ஏற்படுத்துபவராக இருக்கிறான் என்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள் என தினத்தாளில் வாசித்தோம். இவ்வாறு மாற்றுத்திறனாளிகள் வழக்கறிஞர்களாக, மருத்துவர்களாக, பொறியியல் நிபுணர்களாக, விமான ஓட்டிகளாக எனப் பல துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள்.

இந்த உலக நாளில் இந்த மாற்றுத்திறனாளிகளை வாழ்த்துவதற்கு மனம் விழைகின்றது. “சமூகம் என்னைப் பற்றி என்ன வேண்டுமானாலும் கூறட்டும். நான் கலங்கமாட்டேன். என் தலைவிதியை நிர்ணயிக்கிற எஜமான் நானே. என் வாழ்க்கைக் கப்பலை ஓட்டும் தளபதி நானே” என்ற உணர்வில் மாற்றுத்திறனாளிகளே, நீங்கள் தொடர்ந்து சாதனை படைக்க வேண்டும். எந்த ஓர் உண்மையும் முதலில் கேலி செய்யப்படலாம். கடுமையாக எதிர்க்கப்படலாம். ஆனால் இறுதியில் அது ஏற்றுக் கொள்ளப்படும். எனவே நீங்கள் கொண்டிருக்கும் முயற்சியும் குறிக்கோளும் நேர்மையானவை. அவை உரிய காலத்தில் நிறைவேறும். உங்களால் முடியாதது என்று எதுவும் இல்லை.








All the contents on this site are copyrighted ©.