2011-11-28 15:34:21

லெபனன் நாட்டு பிரதமர் திருத்தந்தையுடன் சந்திப்பு


நவ.28,2011. லெபனன் நாட்டு பிரதமர் Najib Mikati இத்திங்கள் காலை திருப்பீடத்தில் திருத்தந்தையையும், அதன் பின்னர் திருப்பீடச்செயலர் கர்தினால் Tarcisio Bertone மற்றும் நாடுகளுடன் ஆன உறவுகளுக்கான செயலர் பேராயர் Dominique Mambertiயையும் சந்தித்து உரையாடினார்.
மத்தியக் கிழக்குப் பகுதியிலும் உலகிலும் லெபனனின் முக்கிய இடம் குறித்தும், அந்நாட்டின் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் ஒன்றிணைந்த வாழ்வு குறித்தும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.
நாடு எதிர் நோக்கும் சவால்களுக்குத் தீர்வு காண தேவைப்படும் ஒத்துழைப்பு மற்றும் பேச்சுவார்த்தைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறும் திருப்பீட பத்திரிகைத் துறையின் அறிக்கை, நீதி, ஒப்புரவு, மனித மாண்பிற்கான மதிப்பு ஆகியவைகளின் அடிப்படையில் அமைதியான ஒன்றிணைந்த வாழ்வுக்கென அனைவரும் அர்ப்பணத்துடன் சேவையாற்ற வேண்டிய அவசரத் தேவை குறித்தும் வலியுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கின்றது. அந்நாட்டின் கிறிஸ்தவர்கள், அமைதி மற்றும் இணக்க வாழ்வினைக் கட்டியெழுப்புவதற்கு ஆற்றி வரும் பங்களிப்பு குறித்தும் கலந்துரையாடலின்போது உரைக்கப்பட்டது என்கிறது திருப்பீட பத்திரிகைத்துறையின் செய்தி.








All the contents on this site are copyrighted ©.