2011-11-28 15:43:19

நவம்பர் 28 வாழ்ந்தவர் வழியில்.... மட்சுவோ பாஷோ


1644ம் ஆண்டில் ஜப்பானின் Edo மாநிலத்தில் (Ueno அல்லது அதற்கு அருகிலுள்ள ஊர்) பிறந்த மட்சுவோ கின்சாக்கு, இளம் வயதிலேயே கவிதைத் துறைக்கு அறிமுகமானவர். இடோவின் அறிவுசார் சமூகத்துடன் தன்னை இணைத்துக்கொண்ட இவர், விரைவிலேயே ஜப்பான் முழுவதிலும் பெயர் பெற்ற ஒருவரானார். ஆசிரியரான இவர், இலக்கியத் துறையினரின் சமூக, நகர்சார்ந்த வாழ்க்கை முறையைப் புறந்தள்ளினார். ஹைக்கூ கவிதைகளை எழுதுவதற்கான அகத்தூண்டலைப் பெறுவதற்காக மேற்கு, கிழக்கு, வடக்கு என ஜப்பானின் பல பகுதிகளுக்கும் சென்றார். 1672ம் ஆண்டு வசந்த காலத்தில் Uenoவை விட்டுச் சென்ற போது தனது நண்பர் ஒருவருக்கு இவ்வாறு எழுதினார் : “மேகங்கள் பிரியலாம். இரு நண்பர்கள் வேறு இடங்களில் குடியேறிய பின்னர் வன வாத்துப் பிரிவு” என்று. தன்னைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றி அவர் பெற்ற நேரடி அனுபவங்கள் அவரது கவிதைகளில் செல்வாக்குச் செலுத்தின. காட்சிகளின் உணர்வுகளைக் கவிதைகளில் எளிமையான கூறுகளில் அவர் அடக்கினார். தற்போதைய டோக்கியோவான இடோ புறநகர்ப் பகுதியில் இவர் வாழ்ந்த குடிசைக்கருகில் இருந்த வாழை மரத்தில் இவரது ஆன்மீகப் பிணைப்பைக் கண்டதாகச் சிலர் சொல்கிறார்கள். இதனால் இவர் மட்சுவோ பாஷோ (Matsuo Bashō). என அழைக்கப்பட்டார். பாஷோ என்றால் ஜப்பானிய மொழியில் வாழை மரம் என்று அர்த்தமாகும். ஜென் தியான முறைகளையும் கற்றார் பாஷோ. இவர் சிறுவனாக இருந்தபோது டோடோ யஷித்தாடா என்பவருக்குப் பணிபுரிந்தார். யஷித்தாடாவும், பாஷோவைப் போலவே கூட்டு முயற்சியில் எழுதப்படும் ஒருவகைக் கவிதையான ஹைக்காய் நோ ரெங்கா எனப்படும் கவிதையில் பற்றுக் கொண்டிருந்தார். 1662ம் ஆண்டில் பாஷோவின் முதல் கவிதை வெளியிடப்பட்டது. 1665 ம் ஆண்டில், பாஷோவும், யொஷித்தாடாவும் வேறும் சில நண்பர்களுடன் இணைந்து நூறு பாடல்களைக் கொண்ட ரெங்கு கவிதை நூலை ஆக்கினர். 1665 ம் ஆண்டில், யொஷித்தாடாவின் திடீர் இறப்பு, ஒரு வேலையாளாக பாஷோவுக்கு இருந்த நிம்மதியான வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்தது. இவருடைய இக்காலப்பகுதிப் பற்றிய தெளிவான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் இவர் சாமுராய் தரம் பெறக்கூடிய தனது வாய்ப்பை உதறிவிட்டு வீட்டை விட்டுக் கிளம்பினார் என்று நம்பப்படுகின்றது. எனினும் இவரது கவிதைகள் 1667, 1669, 1671 ஆகிய ஆண்டுகளிலும் தொகுப்பு நூல்களில் தொடர்ந்தும் பதிப்பிக்கப்பட்டு வந்தன.
இவரோடு தொடர்புடைய அந்த வாழை மரத்துக்கு ஒரு கதை உள்ளது. 1681ம் ஆண்டின் வசந்த காலத்தில் ஒருநாள், அப்பகுதியில் வாழ்ந்த ஒருவர், தனது கவிதை ஆசிரியரான பாஷோவுக்கு நன்கொடையாக அந்த வாழை மரத்தை அவரது குடிசைக்கருகில் நட்டார். அப்போது 36 வயது நிரம்பியிருந்த பாஷோ இந்த நன்கொடையைப் பார்த்து மிகவும் மகிழ்ந்தார் எனவும் அம்மரம் நிற்கும் பாணி, ஏறக்குறைய தன்னைப் போலவே இருக்கிறதென்று உணர்ந்து அதனை மிகவும் அன்பு செய்தார் எனவும் சொல்லப்படுகிறது. கடற்காற்று அடித்தவுடன் நீண்டு, அகன்று, மென்மையாக இருந்த அம்மரத்தின் இலைகள், எளிதில் கிழிந்ததை அவர் இரசித்துக் கொண்டிருப்பாராம். இவர் இரவிலும் தனிமையாக அமர்ந்து அந்த வாழை இலைகளைத் தடவிச் செல்லும் காற்றை இரசித்துக் கொண்டிருப்பாராம். அப்படியே ஆழ்ந்த அமைதியில் பரவச நிலையில் இருப்பாராம். இந்த வாழைமரம்தான் இவரது பெயர் மாறுவதற்குக் காரணமாக அமைந்தது.
“ஞானிகளின் பாதச்சுவடுகளைப் பின்பற்ற முயற்சிக்காதீர்கள், ஆனால் அவர்கள் தேடியவைகளைத் தேடுங்கள்”;
“ஒவ்வொரு நாளும் ஒரு பயணம்தான். அந்தப் பயணமே வீடாகவும் இருக்கிறது”;
“ஆலயமணி ஒலித்து நின்று விட்டது, ஆயினும் அதன் ஒலி மலர்களிலிருந்து வருவதைக் கேட்கிறேன்” இவ்வாறெல்லாம் சொல்லியிருப்பவர் மட்சுவோ பாஷோ.
இவர் 1694ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதி இறைபதம் அடைந்தார். ஜப்பானில் மட்சுவோ பாஷோவின் கவிதைகள் நினைவுச் சின்னங்களிலும், மரபுசார்ந்த இடங்களிலும் பொறிக்கப்பட்டுள்ளன.








All the contents on this site are copyrighted ©.