2011-11-28 15:33:37

கொழும்பு உயர் மறைமாவட்டத்திற்கு இரு துணை ஆயர்கள் நியமனம்


நவ.28,2011. இலங்கையின் கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயர்களாக குருக்கள் ஃபிதெலிஸ் லியோனெல் எம்மானுவேல் ஃபெர்னாண்டோ மற்றும் சம்பதவடுகே மேக்ஸ்வெல் க்ரென்வில்லே சில்வா (Sampathawaduge Maxwell Grenville Silva) ஆகியோரை இத்திங்களன்று அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
1948ம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பிறந்த புதிய ஆயர் ஃபெர்னாண்டோ, கண்டி தேசியக் குருமடத்திலும் உரோம் நகரிலும் தன் குருத்துவப் படிப்பை முடித்து கொழும்பு உயர்மறைமாவட்டத்திற்கென 1973ம் ஆண்டு வத்திக்கானில் திருத்தந்தை ஆறாம் பாலால் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். கண்டி தேசியக் குருமடத்தில் பேராசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியுள்ள இவர், அண்மைக் காலங்களில் கொழும்பு உயர்குருமடத்தின் தமிழ் விசுவாசிகளுக்கான பொறுப்பாளராகவும் செயலாற்றி வந்துள்ளார்.
புதிய ஆயராக அறிவிக்கப்பட்டுள்ள மற்றொரு குருவான சில்வா, 1953ம் ஆண்டு கொழும்பு உயர்மறைமாவட்டத்தில் பிறந்தவர். 1981ம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட புதிய ஆயர் சில்வா, 2001ம் ஆண்டு முதல் Kotte புனித தாமஸ் கல்லூரியின் முதல்வராகச் செயல்பட்டு வருகிறார்.








All the contents on this site are copyrighted ©.