2011-11-26 15:10:18

நோயுற்றோருக்கு சேவையாற்றுவது என்பது, நற்செய்தி அறிவிப்பு அர்ப்பணம் மற்றும் அக்கறை


நவ.26,2011. உடலளவிலும் ஆன்மீக அளவிலும் நோயுற்றோருக்கு சேவையாற்றுவது என்பது, நற்செய்தி அறிவிப்பு அர்ப்பணம் மற்றும் அக்கறையாகும் என்று திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் கூறிச்சென்றதை மீண்டும் நினைவுறுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
' திருத்தந்தை ஜான் பால் வழங்கிய படிப்பினைகளின் ஒளியில் வாழ்வின் பணிக்கான மேய்ப்பு பணி அக்கறை' என்ற தலைப்பில் நலப்பணிகளுக்கான திருப்பீட அவை உரோம் நகரில் ஏற்பாடு செய்துள்ள 26வது அனைத்துலக மாநாட்டில் பங்குபெறுபவர்களை இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை, 1985ம் ஆண்டில் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் இந்த அவையை உருவாக்கியதையும், 20 ஆண்டுகளுக்கு முன்னர் அவரே உலக நோயாளர் தினத்தை உருவாக்கியதையும் நினைவு கூர்ந்தார்.
நோயாளிகளோடு பணிபுரிவோர் இறைவனின் மீட்புச்செயலை அருகில் இருந்து காணும் பாக்கியம் பெற்றோர் என்பதையும் சுட்டிக்காட்டிய பாப்பிறை, நமக்காக சிலுவையில் துன்பங்களை அனுபவித்த இறைவன், எந்த ஒரு சூழலிலும் மனிதனின் மாண்பு மதிக்கப்படவேண்டும் மற்றும் அவனின் உயிர் பாதுகாக்கப்படவேண்டும் என எதிர்பார்க்கிறார் என மேலும் உரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.