2011-11-26 15:03:09

நவம்பர் 27, வாழ்ந்தவர் வழியில்... அத்தனேசியஸ் கெர்ஷர் (Athanasius Kircher S.J.)


“நூறு கலைகளின் தலைவன்” “master of a hundred arts” என்று புகழ்பெற்றவர் இயேசுசபை குரு அத்தனேசியஸ் கெர்ஷர் (Athanasius Kircher). அறிவாற்றலிலும், கலைத் திறமைகளிலும் இவர் லெயோனார்டோ டாவின்சிக்கு இணையானவர் என்று சொல்லப்படுகிறது.
17ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஜெர்மன் நாட்டில் ஒரு கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்த இவர் தன் 17வது வயதில் இயேசு சபையில் சேர்ந்தார். 27வது வயதில் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட அத்தனேசியஸ், உடனடியாக பேராசிரியராக நியமிக்கப்பட்டார். பன்மொழிப் புலமை, கணிதம், வானியல், புவியியல், உயிரியல், இயற்பியல் என்று பல துறைகளில் வியத்தகு அறிவுத்திறன் பெற்றிருந்தார்.
எகிப்தில் பயன்படுத்தப்பட்ட Hieroglyphs எனப்படும் சித்திர வடிவ எழுத்துக்களில் பொதிந்துள்ள கருத்துக்களை உலகறியச் செய்தவர் இவர். இவர் கூறிய விளக்கங்களில் சில பிற்காலத்தில் மறுக்கப்பட்டன.
இவரது தொழில் நுட்ப அறிவைக் கொண்டு, காந்த சக்தியால் இயங்கும் ஒரு கடிகாரத்தையும், திரைப்படக் கருவிகளின் முன்னோடி என்று எண்ணப்படும் ஒரு கருவியையும் இவர் கண்டுபிடித்ததாகச் சொல்லப்படுகிறது.
கொள்ளை நோய்கள் கடவுளின் சாபம் என்று எண்ணி வந்த மக்களிடையே, அந்நோய்களின் மூலக்காரணம் நுண்ணிய கிருமிகளே என்ற உண்மையை எடுத்துரைத்தவர் அத்தனேசியஸ் கெர்ஷர். பல்வேறு துறைகளில் இவர் கண்டுணர்ந்தவற்றைத் தொகுத்து நூல்கள் வெளியிட்டார்.
தனது 77வது வயது வரை தெளிந்த சிந்தனையுடன் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த இவர், இறுதி ஈராண்டுகள் கேட்கும் திறனையும், ஞாபகச் சக்தியையும் இழந்தார். 1680ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி தனது 79வது வயதில் இவர் இறையடி சேர்ந்தார்.
இவரது உடல் உரோமையில் உள்ள ஜேசு கோவிலில் புதைக்கப்பட்டுள்ளது. பேரரசன் கான்ஸ்டன்டைன் கட்டிய கோவில் ஒன்றின் இடிபாடுகளை அத்தனேசியஸ் கெர்ஷர் தனது மரணத்திற்கு இருபது ஆண்டுகளுக்கு முன் கண்டுபித்தார். பல்வேறு இடங்களில் நிதி திரட்டி அக்கோவிலை மீண்டும் கட்டியெழுப்பினார். இவரது மரணத்திற்குப் பிறகு அந்தக் கோவிலில் இவரது இதயம் புதைக்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.