2011-11-26 15:09:46

இயற்கையைக் காப்பாற்ற வேண்டியது கிறிஸ்தவக் கடமை


நவ.26,2011. இயற்கையைப் பாதுகாத்து இயற்கைப் பேரழிவுகளிலிருந்து சமூகத்தைக் காப்பாற்ற வேண்டியது கிறிஸ்தவக் கடமையாகிறது என வியட்நாமின் ஹோ கி மின்ஹ் உயர்மறைமாவட்ட திருச்சபை அதிகாரிகளின் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஹோ கி மின்ஹ் உயர் மறைமாவட்டத்தின் ஐந்து நாள் உயர்மட்டக் கூட்டத்தில் உரையாற்றிய வியட்நாமின் கோல்பிங் கத்தோலிக்க அமைப்பின் தலைவர் ஆன்ட்ரூ நுகுயென் ஹூ நிகியா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது கிறிஸ்தவ அறநெறியாக நோக்கப்படவேண்டும் என்றார்.
ஒவ்வோர் ஆண்டும் இயற்கைப் பேரழிவுகளால் இவ்வுலகில் எண்ணற்றோர் உயிரிழந்து வருகின்ற போதிலும், சுற்றுச்சூழலை பதுகாக்கவேண்டிய தேவை கருத்தில் கொள்ளப்படுவதில்லை என்றார் நிகியா.
இயற்கை மீது சிறிதும் அக்கறை இன்றி மனிதர்கள் செயல்படும்போது தட்ப வெப்ப நிலை மாற்றம், மற்றும், நீரும் காற்றும் மாசுபடுதல் போன்றவை இடம்பெறுகின்றன என்றார் அவர்.
தலத்திருச்சபையில் இயற்கையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த வகுப்புகள் எடுக்கப்படவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார் நிகியா.
வியட்நாமின் ஹோ கி மின்ஹ் உயர்மறைமாவட்டத்தில் இடம்பெற்ற இந்த ஐந்து நாள் கூட்டத்தில் குருக்கள் துறவியர் மற்றும் பொதுநிலையினர் என 180 பேர் கலந்துகொண்டனர்.








All the contents on this site are copyrighted ©.