2011-11-26 15:09:23

அன்னை திரேசா பிறரன்பு சகோதரிகள் சபை இல்லம் ஒன்றில் சோதனைச் செய்துள்ளனர் இலங்கை காவல்துறையினர்


நவ.26,2011. இலங்கையிலிருந்து குழந்தைகளைக் கடத்துவதாகக் குற்றஞ்சாட்டி கொழும்புவின் அன்னை திரேசா பிறரன்பு சகோதரிகள் சபை இல்லம் ஒன்றில் சோதனைச் செய்துள்ளனர் இலங்கைக் காவல்துறையினர்.
தன் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத ஒருவர் வழங்கிய தகவலையடுத்து மொராடுவா எனுமிடத்திலுள்ள பிரேம் நிவாசா என்ற அனாதைக் குழந்தைகள் இல்லத்தில் நுழைந்த காவல் துறை, அங்குள்ள அருட்சகோதரிகளிடம் விசாரணை நடத்தியதுடன், பல ஆவணங்களையும் எடுத்துச் சென்றுள்ளது.பிரேம் நிவாசா அனாதை இல்லம் குறித்து சில பத்திரிகைகள் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும், எவ்விதத் தவறும் இடம் பெறாத நிலையில், சந்தேகத்தின்பேரில் சோதனை நடத்தப்பட்டுள்ளது கவலை தருவதாகவும் உள்ளது என்றார் இந்த இல்லத்தின் தலைமை அருள்சகோதரி மேரி எலிஷா. எந்தக் குழந்தையையும் கடத்துவதற்கு தாங்கள் உதவவில்லை என்றும் அது தங்கள் விசுவாசத்திற்கு எதிரானது என்றும் மேலும் கூறினார் அவர்.
அன்னை திரேசாவின் பிறரன்பு சகோதரிகள் சபை கொழும்பு உயர் மறைமாவட்டத்தில் நடத்தி வரும் இந்த அநாதை இல்லத்தில் தற்போது 75 குழந்தைகள், 20 கருவுற்ற தாய்மார்கள் மற்றும் 12 இளம்தாய்கள் தங்கியிருந்து உதவிகளைப் பெற்று வருகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.