2011-11-25 14:59:25

நவ 26, 2011. வாழ்ந்தவர் வழியில் .... கத்தரீன் ட்ரெக்ஸல்


கத்தரீன் ட்ரெக்ஸல் (Katharine Drexel) என்பவர் 1858ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஃபிலடெல்ஃபியாவில் மிகப்பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தார். இவர் குடும்பம், வங்கி தொழிலில் ஈடுபட்டு பணம் ஈட்டியது. இவர் தந்தையின் சகோதரர்தான் அமெரிக்க ஐக்கிய நாட்டின் ட்ரெக்ஸல் பல்கலைக்கழகத்தை உருவாக்கியவர். கத்தரீன் ட்ரெக்ஸல் சிறுமியாக இருந்தபோதே அமெரிக்க பூர்வீகக் குடிமக்களுக்கும் அங்கு குடியேற்றப்பட்ட கறுப்பின மக்களுக்கும் முன்னின்று உழைக்க வேண்டிய தேவையை உணர்ந்தார். இன அடிப்படையிலான சகிப்புத் தன்மைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்தார். கறுப்பின மக்கள் மற்றும் பூர்வீகக் குடியினருக்கு உழைப்பதற்கெனவே ஒரு சபையை உருவாக்கினார் ட்ரெக்ஸல். இவர்களின் மேம்பாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் மட்டுமல்ல, அக்காலத்திலேயே தனக்கு குடும்பச் சொத்தாக வந்த 2 கோடி டாலர்களையும் செலவிட்டார். பின்தங்கிய மக்களுக்கென 60 பணித்தளங்களையும் பள்ளிகளையும் நிறுவினார். லூயிசியானாவில் சேவியர் பல்கலைக்கழகத்தை நிறுவினார். அமெரிக்காவில் கறுப்பின மக்களுக்கென ஆரம்பிக்கப்பட்ட ஒரே பல்கலைக்கழகம் இதுதான்.
தானும் பெண்துறவியானதுடன், பூர்வீக மக்கள் மற்றும் கறுப்பினத்தவர்களுக்கென துறவு சபை ஒன்றையும் துவக்கி தன் பணிகளை விரிவு படுத்திய இவர், 1955ம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி இறைபதம் சேர்ந்தார். இறைவன் மீதான நம் அன்பு பிறரன்பில் வெளிப்பட வேண்டும் என்பதில் உறுதியான நம்பிக்கைக் கொண்டிருந்த அருள்சகோதரி கத்தரீன் ட்ரெக்ஸலை 2000மாம் ஆண்டு அக்டோபர் முதல் தேதி புனிதராக அறிவித்தார் திருத்தந்தை இரண்டாம் ஜான் பால்.








All the contents on this site are copyrighted ©.