2011-11-25 15:11:49

திருச்சபைப் பணிகளுக்கு பொதுநிலையினரின் பங்களிப்பு குறித்து திருத்தந்தை


நவ.25,2011. திருச்சபையின் மறைப்பணிகளுக்கு அனைவரின் பங்களிப்பும் இன்றியமையாதது, குறிப்பாக பொதுநிலையினரின் பங்களிப்பு, என இவ்வெள்ளியன்று பொதுநிலையினருக்கான திருப்பீட அவையின் அங்கத்தினர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
பொதுநிலையினர் ஒவ்வொருவரும் தாங்கள் வாழும் இன்றையச் சூழல்களில் தங்கள் திருமுழுக்கை வாழ்ந்து, அதன் வழி சாட்சியம் பகர வேண்டுமென இறைவன் எதிர்பார்க்கிறார் என உரைத்த திருத்தந்தை, கடந்த ஆண்டு தென்கொரியாவின் சியோல் நகரில் இடம்பெற்ற ஆசிய பொதுநிலையினருக்கான திருச்சபை கூட்டம், மத்ரித்தில் இடம்பெற்ற உலக இளையோர் மாநாடு, அடுத்த ஆண்டு இடம்பெற உள்ள புதிய நற்செய்தி அறிவிப்பு குறித்த உலக ஆயர் மாமன்றத்தின் 13வது பொது அவைக் கூட்டம் ஆகியவை பற்றியும் எடுத்துரைத்தார்.
பல்வேறு கலாச்சாரங்களையும் மதங்களையும் கொண்ட ஆசியக்கண்டத்தில் சிறுபான்மையினராக வாழும் கிறிஸ்தவர்கள், துன்பங்களையும் சில வேளைகளில் சித்ரவதைகளையும் தங்களின் விசுவாசத்திற்காக அனுபவித்து வரும் வேளையில், 'இன்றைய ஆசியாவில் இயேசுவை அறிவித்தல்' என்ற தலைப்பிலான சியோல் கூட்டம், பொதுநிலையினருக்கு உறுதிப்பாட்டையும் சக்தியையும் வழங்குவதாக இருந்தது எனப் பாராட்டினார் பாப்பிறை.
ஆசியாவின் பொதுநிலையினருக்கென கடந்த ஆண்டில் ஏற்பாடு செய்த கூட்டம் போல் வரும் ஆண்டில் ஆப்ரிக்க பொதுநிலையினருக்கென அக்கண்டத்தின் கேம்ரூனில் பொதுநிலையினருக்கான திருப்பீட அவை ஏற்பாடு செய்து வருவதையும் சுட்டிக்காட்டினார் பாப்பிறை.
2013ம் ஆண்டு Rio de Janeiroவில் நடைபெறவுள்ள உலக இளையோர் நாளையொட்டிய ஏற்பாடுகள் இடம்பெற்றுவரும் வேளையில், 'இன்று இறைவனைக் குறித்த கேள்வி' என்ற தலைப்பில் திருப்பீட அவையின் நிறையமர்வுக் கூட்டம் நடைபெறுவது பொருத்தமானதே என்று கூறிய திருத்தந்தை, இன்றைய பொருளாதார சமூக நெருக்கடிகள் துவங்குவதற்கு முன்னரே, அர்த்தங்கள் மற்றும் மதிப்பீடுகள் குறித்த நெருக்கடி துவங்கி விட்டது என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டினார். இத்தகைய ஒரு பின்னணியில் கடவுளைக் குறித்தக் கேள்வி என்பது கேள்விகளின் கேள்வியாகிறது எனவும் உரைத்தார் அவர்.
குடும்பத்திலும், பணியிடங்களிலும், அரசியலிலும் பொருளாதாரச்சூழல்களிலும் மாற்றங்கள் இடம்பெறும்போது, கடவுளோடும் கடவுளின்றியும் வாழ்வது எப்படிப்பட்டதென்பதை இக்கால மனிதர்கள் உணரவேண்டியது அவசியம் என்ற விண்ணப்பத்தையும் விடுத்தார் திருத்தந்தை. நம் காலத்தின் பெரும் சவால்களுக்கான நம் அளிக்கும் பதிலுரை ஆழமான மனமாற்றத்திற்கு முதலில் அழைப்புவிடுக்கிறது, ஏனெனில் உலகின் ஒளியாகவும் உப்பாகவும் நம்மை மாற்றிய நம் திருமுழுக்கு, அனைத்தையும் மாற்றியமைக்க வல்லது என மேலும் தன் உரையில் குறிப்பிட்டார் திருத்தந்தை.









All the contents on this site are copyrighted ©.