2011-11-25 15:12:08

இந்திய கத்தோலிக்க அவையின் முதல் அமர்வில் திருச்சபை தலைவர்கள் வழங்கிய செய்திகள்


நவ.25,2011. இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைப்பது, சிறப்பாக, இங்கு வாழும் தலித், பழங்குடியினர் மற்றும் ஏழைகளின் முன்னேற்றத்திற்கு உழைப்பது நம் கடமை என்று கர்தினால் ஆஸ்வல்ட் கிரேசியஸ் கூறினார்.
இவ்வியாழனன்று கேரளாவின் கொச்சியில் ஆரம்பித்த இந்திய கத்தோலிக்க அவையின் முதல் அமர்வில் உரையாற்றிய கர்தினால் கிரேசியஸ், அமைதியின்றி முன்னேற்றமும், மன்னிக்கும் மனமின்றி அமைதியும் உருவாக முடியாது என்று கூறினார்.
இந்திய நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் தடையாக இருப்பது ஊழலே என்றுரைத்த கர்தினால் கிரேசியஸ், இந்த நோயை வேரோடு அழிப்பது இந்திய மக்களின் கடமை என்பதையும் சுட்டிக் காட்டினார்.
இந்த அமர்வில் உரையாற்றிய சீரோ மலபார் ரீதி உயர் பேராயர் ஜார்ஜ் ஆலஞ்சேரி, உலகமயமாக்கல் மற்றும் நுகர்வு கலாச்சாரம் ஏழை செல்வந்தர்களிடையே உள்ள தூரத்தை வெகுவாக அதிகரித்து விட்டது என்று கூறினார்.
தலித் மற்றும் ஏழைகளை அநீதியான முறைகளில் பயன்படுத்தும் வழிகளை நாம் அறவே ஒழித்தால் மட்டுமே இந்தியா முன்னேற முடியும் என்று பேராயர் ஆலஞ்சேரி வலியுறுத்தினார்.
ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்திய கத்தோலிக்க அவையின் கூட்டத்தில் ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் பொதுநிலையினர் கலந்து கொண்டு, இந்திய கத்தோலிக்கத் திருச்சபையின் பல்வேறு பணிகள் பற்றி ஆலோசனைகள் மேற்கொண்டுவருகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.