2011-11-24 14:42:47

மக்களுக்கு வழங்கப்படும் இலவச நல உதவிகள் குறைக்கப்பட்டால், பெரும் பாதிப்புக்கு உள்ளாவது ஏழைகளே - பேராயர் நிக்கோல்ஸ்


நவ.24,2011. பிரித்தானிய பாராளுமன்றத்தில் முடிவுகள் எடுப்பவர்களுக்கும், அம்முடிவுகளை நடைமுறைப்படுத்தும் பணியாளர்களுக்கும் இடையே நலமான உரையாடல் நிகழ வேண்டும் என்று Westminster பேராயர் வின்சென்ட் நிக்கோல்ஸ் கூறினார்.
CSAN என்று அழைக்கப்படும் பிறரன்பு சமுதாயச் செயல்பாடுகளின் ஒருங்கிணைப்பு என்ற அமைப்பைச் சார்ந்தவர்களுக்கு பிரித்தானிய பாராளு மன்றத்தினர் இப்புதனன்று அளித்த வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய பேராயர் நிக்கோல்ஸ் இவ்வாறு கூறினார்.
சமுதாயப் பாதுகாப்பு, நலவாழ்வு, குற்றங்களைக் களைதல் ஆகிய முக்கியமான பணிகளில் ஈடுபட்டிருப்போர் சந்திக்கும் நேரடிப் பிரச்சனைகளை பாராளுமன்ற அங்கத்தினர்கள் புரிந்து கொள்வதற்கு உரையாடல்கள் பெரிதும் உதவியாக இருக்கும் என்றும், இவ்விதம் புரிந்து கொள்வதன் மூலம் பாராளுமன்றத்தில் எடுக்கப்படும் முடிவுகள் சமுதாயத்திற்குப் பயனுள்ளதாக அமையும் என்றும் பேராயர் சுட்டிக் காட்டினார்.
பிறரன்புச் சேவைகளில் ஈடுபட்டிருப்போரின் பணிகளைப் பாராட்டியப் பேராயர் நிக்கோல்ஸ், இவர்கள் பெற்றிருக்கும் நடைமுறை அனுபவங்கள் பாராளு மன்றத்தினருக்கு கிடைத்தற்கரிய ஒரு கருவூலம் என்றும் சுட்டிக் காட்டினார்.
மக்கள் நலவாழ்வுத் திட்டங்களின் சீரமைப்பு குறித்து பிரித்தானிய பாராளுமன்றத்தில் விவாதங்கள் நடைபெற்று வரும் வேளையில், இத்திட்டங்களில் மக்களுக்கு வழங்கப்படும் இலவச நல உதவிகள் குறைக்கப்பட்டால், பெரும் பாதிப்புக்கு உள்ளாவது ஏழைகளே என்று பேராயர் நிக்கோல்ஸ் வலியுறுத்திக் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.