2011-11-24 11:11:37

நவம்பர் 25 வாழ்ந்தவர் வழியில்.... கார்ல் பிரெட்ரிக் பென்ஸ்


ஜெர்மனி நாட்டவரான கார்ல் பிரெட்ரிக் பென்ஸ் (Karl Friedrich Benz), 1844ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி பிறந்தார். இவர் ஒரு வாகனப்பொறியாளர் மற்றும் வாகன வடிவமைப்பாளர். பொதுவாக இவர், பெட்ரோலினால் இயங்கும் வாகனத்தைக் கண்டுபிடித்தவர் என்று அறியப்படுகிறார். இவர், பெர்த்தா பென்ஸ் (Bertha Benz) என்பவருடன் சேர்ந்து Mercedes-Benz என்ற வாகன உற்பத்தித் தொழிற்சாலையை அமைத்தவர். கார்ல் பிரெட்ரிக் பென்ஸ் கண்டுபிடித்த காலத்தில் Gottlieb Daimler, Wilhelm Maybach ஆகிய இருவரும் இதே மாதிரி கண்டுபிடித்தனர். இக்கண்டுபிடிப்புக்கள் ஒருவர் மற்றவருக்குத் தெரியாமலே இருந்தன. எனினும் கார்ல் பிரெட்ரிக் பென்ஸ், இந்த வாகனக் கண்டுபிடிப்புக்கு முதலில் காப்புரிமை பெற்றார். 1886ம் ஆண்டு சனவரி 29ம் தேதி இவர் தனது முதல் வாகனத்துக்குக் காப்புரிமை பெற்றார். முதலில் காப்புரிமை பெற்ற மூன்று சக்கர வாகனம், முதலில் எரிவாயுவிலும் பின்னர் பெட்ரோலிலும் இயங்கியது. 19ம் நூற்றாண்டின் இறுதி ஆண்டுகளில் உலகில் அதிகமான வாகனங்களைத் தயாரித்த பெருமை இவருக்கு உண்டு. 1927ம் ஆண்டில் இவரது வாகன விற்பனையின் அளவு மூன்று மடங்காகியது. இவ்வாண்டில் 7,918 வாகனங்கள் விற்பனையாகின. கார்ல் பென்ஸ் 1929ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி தனது 84 வது வயதில் காலமானார். வாகன உற்பத்தி வரலாற்றில் கார்ல் பென்சும் பெர்த்தா பென்சும் சாதனை படைத்துள்ளனர் என்ற பெருமையைப் பெறுகின்றனர்.







All the contents on this site are copyrighted ©.