2011-11-24 14:40:35

திருத்தந்தை : பசித்திருப்போருக்கு உணவு கொடுப்பது மட்டும் போதாது, மாறாக, அவர்கள் பசித்திருப்பதற்கான காரணத்தை அறிய முற்பட வேண்டும்


நவ.24,2011. நற்செய்தியின் நல்வாழ்வை எடுத்துரைக்கும் பாதை கடினமாகவும் பலன்தராதது போலவும் இருந்தாலும் அந்த நல்வாழ்வைக் கற்பிக்கும் பணியை கைவிட்டு விடாமல் செய்யுமாறு காரித்தாஸ் பணியாளர்களைக் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இத்தாலியத் திருச்சபையின் காரித்தாஸ் அமைப்பு உருவாக்கப்பட்டு நாற்பது ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி அந்தக் காரித்தாஸ் அமைப்பின் சுமார் 12 ஆயிரம் பேரை இவ்வியாழனன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை இயேசுவின் அன்புப்பணி தொடர்ந்து செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொன்னார்.
இன்றைய உலகின் “தன்னலப்பற்று”, தனியாட்களும் சமூகங்களும் மற்றவரின் தேவைகளுக்குத் திறந்த மனம் கொண்டவர்களாய் வாழுமாறு அழைப்பு விடுக்கின்றது என்றும் அவர் கூறினார்.
பிறரன்புப் பணியானது விசுவாசத்திலிருந்து பிறப்பதாகும், இப்பணியானது தேவையில் இருப்போருக்கு உதவும் திருச்சபையின் பணியாக இருக்கின்றது என்றும் கூறிய திருத்தந்தை, பசித்திருப்போருக்கு உணவு கொடுப்பது மட்டும் போதாது, மாறாக, அவர்கள் பசித்திருப்பதற்கான காரணத்தை அறிய முற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இயற்கைப் பேரிடர்களும் போர்களும் அவசரகால நிலையை ஏற்படுத்துகின்றன, அத்துடன் தற்போதைய உலகளாவியப் பொருளாதார நெருக்கடியும் சகோதரத்துவ உணர்வைத் தைரியமுடன் வெளிப்படுத்த அழைப்பு விடுக்கின்றன என்றும் அவர் கூறினார்.
மனித சமுதாயம் நம்பிக்கையின் அடையாளங்களைத் தேடுகின்றது, நமது நம்பிக்கையின் ஊற்று இயேசுவே, இந்த நம்பிக்கையைக் கொடுக்கவே காரித்தாஸ் பணியாளர்கள் தூண்டப்படுகிறார்கள் என்று திருத்தந்தை கூறினார்.








All the contents on this site are copyrighted ©.