2011-11-24 14:43:00

உலகப் பிரச்சனைகளால் வறுமையில் வாடும் நாடுகள் முற்றிலும் சீர்குலையும் நிலைக்குத் தள்ளப்படும்


நவ.24,2011. திட்டமிட்டு நடத்தப்படும் குற்றங்கள், பரவிவரும் நோய்கள், சுற்றுச்சூழல் பிரச்சனைகள் ஆகியவை உலக அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் எதிராக ஒவ்வொரு நாட்டிலும் நிகழும் பிரச்சனைகள் என்றாலும், தற்போது நாடு விட்டு நாடு மக்கள் செல்லும் வழிகள் அதிகரித்திருப்பதால், புதிய வகை சவால்களை நாம் சந்திக்கிறோம் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
ஐ.நா.அவையின் ஓர் அங்கமான பாதுகாப்பு உயர்மட்டக் குழுவின் கூட்டத்தில் இப்புதனன்று பேசிய பான் கி மூன், தனித் தனி நாடுகள் சந்தித்து வந்த பிரச்சனைகள் தற்போது உலகப் பிரச்சனைகளாக மாறிவருவதை இவ்விதம் சுட்டிக் காட்டினார்.
இந்த உலகப் பிரச்சனைகளால் வறுமையில் வாடும் நாடுகள் முற்றிலும் சீர்குலையும் நிலைக்குத் தள்ளப்படுவதையும் ஐ.நா. பொதுச்செயலர் தன் உரையில் எடுத்துரைத்தார்.
ஐ.நா. அவையின் அகதிகள் பாதுகாப்பு மேற்பார்வையாளர் António Guterres பேசுகையில், சுற்றுச்சூழல் மாற்றங்களால் நாடு விட்டு நாடு செல்லும் அகதிகளின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகமாகி வருகிறதென்றும், இது பல நாடுகளில் பிரச்சனைகளாக மாறி வருகிறதென்றும் கூறினார்.
வேளாண்மை நிலங்கள் குறுகி வருதல், தண்ணீர் பற்றாக்குறை, மக்கள் பயன்படுத்தும் சக்திகளின் பற்றாக்குறை ஆகிய பிரச்சனைகள் அகதிகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கச் செய்கின்றன என்று Guterres கூறினார்.








All the contents on this site are copyrighted ©.