2011-11-23 15:10:46

நவம்பர் 24. வாழ்ந்தவர் வழியில்........ இராபர்ட் செசில்


1864ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14ம் தேதி இலண்டனில் பிறந்த இராபர்ட் செசில் (Robert Cecil), ஒரு வழக்குரைஞர், அரசியல்வாதி மற்றும் அரசியல் வல்லுனர். ஐக்கிய நாட்டு நிறுவனம் உருவாக்கப்படுவதற்கு முன் அதேப் பணிகளை ஆற்றி வந்த 'நாடுகளின் கூட்டமைப்பு' என்ற அவை உருவாக்கப்பட காரணமாக இருந்தவர்களுள் இராபர்ட் செசிலும் ஒருவர்.
இங்கிலாந்து பாராளுமன்ற அங்கத்தினராகவும், வெளியுறவுத் துறையின் நேரடிச் செயலராகவும் என பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார் இவர். முதலாம் உலகப்போர் வெடித்த போது இவருக்கு 50 வயதாக இருந்தமையால், இராணுவப் பணிக்குச் செல்லமுடியாமல் செஞ்சிலுவைச் சங்கத்தில் இணைந்து பணியாற்றினார். 1916ம் ஆண்டில் போரைத் தவிர்ப்பதற்கான வழிகள் குறித்து ஆராயும் பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்தார் செசில். இவைகளே, ஐ.நா.விற்கு முன்னோடியான 'நாடுகளின் கூட்டமைப்பு' உருவாவதற்கு உதவியாக இருந்தன. இது மட்டுமல்ல, அனைத்துலக அமைதி பிரச்சாரக்குழு உருவாக்கப்படுவதிலும் முன்னின்று உழைத்ததோடு அதன் தலைவராகவும் செயலாற்றினார். அமைதியின் தேவையை வலியுறுத்தி சில புத்தகங்களையும் எழுதியுள்ளார் செசில். ஐ.நா. அமைப்பு துவக்கப்படுவதற்கு முன் 'நாடுகளின் கூட்டமைப்பு' முடிவுக்கு வந்த கூட்டத்திலும் அவர் உரையாற்றினார். தன் வாழ்நாள் முழுவதும் அமைதி முயற்சிகளைத் தொடர்ந்து ஆதரித்துக் கொண்டேயிருந்தார். 1924ம் ஆண்டில் Woodrow Wilson அமைப்பின் அமைதி விருதைப் பெற்ற இவர், 1937ல் நொபெல் அமைதி விருதையும் பெற்றார். உலகின் 10 பல்கலைக்கழகங்கள் இவருக்கு கௌரவப்பட்டங்களை வழங்கி சிறப்பித்தன. 1958ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் தேதி காலமானார் இராபர்ட் செசில்.








All the contents on this site are copyrighted ©.