2011-11-23 15:09:39

திருத்தந்தையின் புதன் பொது மறைபோதகம்


நவ 23, 2011. திருத்தந்தை 16ம் பெனடிக்டின் இப்புதன் பொது மறைபோதகம் வத்திக்கானிலுள்ள திருத்தந்தை ஆறாம் பவுல் மண்டபத்தில் இடம்பெற்றது. இப்புதன் காலையில் காலநிலை தெளிவாக இருந்த போதிலும், செவ்வாய் முழுவதும் மழை அவ்வப்போது தூறிக்கொண்டேயிருந்தமையால், தூய பேதுரு வளாகத்தில் இப்புதன் மறைபோதகத்திற்கான ஏற்பாடுகள் இடம்பெறவில்லை. மற்றும், கிறிஸ்து பிறப்பு விழா குடிலுக்கான ஏற்பாடுகளும் அவ்வளாகத்தில் இடம்பெற்று வருகின்றன.
இப்புதன் மறைப்போதகத்தின்போது, திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தான் அண்மையில் முடித்துத் திரும்பிய ஆப்ரிக்காவின் பெனின் நாட்டுத் திருப்பயணம் குறித்து எடுத்துரைத்தார்.
கடந்த வாரத்தில் பெனின் நாட்டில் நான் மேற்கொண்ட திருப்பயணம், அந்நாட்டில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 150ம் ஆண்டுக் கொண்டாட்டங்களை உடனிருந்து சிறப்பிக்க உதவியதுடன், அந்நாட்டின் மதிப்புக்குரிய மகனும், உன்னத திருச்சபைப் பணியாளருமான கர்தினால் பெர்நார்டின் கந்தேனின் நினைவுகளைக் கௌரவிக்கவும் உதவியது எனத் தன் புதன் மறைபோதகத்தைத் துவக்கினார் திருத்தந்தை. Cotonou நகர் விளையாட்டரங்கில் கடந்த ஞாயிறன்று நிறைவேற்றிய திருப்பலியில், ஆப்ரிக்காவிற்கான சிறப்பு ஆயர் மாமன்றத்தின் பரிந்துரைகள் அடங்கிய Africae Munus என்ற அப்போஸ்தலிக்க ஏட்டை ஆப்ரிக்கா முழுமையிலும் உள்ள திருச்சபைக்கென சமர்ப்பித்தேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் உரோம் நகரில் இடம்பெற்ற ஆயர்கள் பேரவையின் ஆப்ரிக்காவிற்கான சிறப்பு மாமன்றக் கூட்டத்தின் கனிகளைத் திரட்டிக் கொணரும் இந்த ஏடு, ஆப்ரிக்கக் கண்டத்தின் வருங்காலத் திருச்சபைப் பணிகளுக்கான வழிகாட்டுதல்களை வழங்குகிறது. ஆயர் மாமன்றக்கூட்டத்தின் ஒளியில், அமைதி, நீதி மற்றும் ஒப்புரவிற்கான பணியில் ஆழமான விசுவாசத்துடனும் அர்ப்பணத்துடனும் செயல்படுமாறு ஆப்ரிக்கத் திருச்சபை அழைப்புப் பெறுகிறது.
கிறிஸ்துவைப் பின்பற்றும் அனைத்து ஆப்ரிக்க மக்களையும் ஆப்ரிக்காவின் நம் அன்னைமரியின் பரிந்துரைக்கு முன்வைப்பதில் இணையும்படி உங்களனைவரையும் விண்ணப்பிக்கின்றேன். இறைவார்த்தைக்கு விசுவாசமாக இருந்து வழங்கும் சாட்சியம், நற்செய்தி அறிவிப்பதில் அவர்களின் அர்ப்பணம், ஐக்கிய வாழ்வு, அமைதி மற்றும் ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அவர்களின் முயற்சிகள் ஆகியவைகளின் மூலம், இந்த உன்னத ஆப்ரிக்கக் கண்டத்தின் நம்பிக்கையுடன் கூடிய புதிய காலத்தின் முன்னோடிகளாக ஆப்ரிக்கக் கிறிஸ்தவர்கள் மாறுவார்களாக. இவ்வாறு, புதன் மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.








All the contents on this site are copyrighted ©.