2011-11-23 15:18:52

கோவாவில் புனித பிரான்சிஸ் சேவியர் திருநாட்கள் காலத்தில் திரைப்பட விழா நடப்பதால் இடையூறுகள்


நவ.23,2011. இப்புதன் துவங்கி புனித பிரான்சிஸ் சேவியர் திருநாளான டிசம்பர் 3ம் தேதி வரை கோவாவில் நடைபெறும் அகில உலகத் திரைப்பட விழாவுக்கு எதிராக பழைய கோவாவில் வாழும் கத்தோலிக்கர்கள் இச்செவ்வாயன்று போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
ஒவ்வோர் ஆண்டும் கோவாவில் நடைபெறும் இத்திரைப்பட விழாவை வேறு நாட்களில் மாற்றி அமைக்கும்படி தலத்திருச்சபை அரசிடம் பலமுறை கேட்டுக் கொண்டுள்ளது. இதைக் குறித்து மறுபரிசீலனை செய்வதாக கோவா அரசு 2006ம் ஆண்டு வாக்குறுதி அளித்துள்ளது. இருப்பினும், அரசு எவ்வித முயற்சிகளும் எடுக்காமல் இருப்பதை எதிர்த்து தாங்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளதாக இப்போராட்டத்தை முன்னின்று நடத்திய பீட்டர் வியேகாஸ் கூறினார்.
இவ்வியாழனன்று ஆரம்பமாகும் புனித பிரான்சிஸ் சேவியர் திருநாளின் நவநாட்கள் காலத்தில் இத்திரைப்பட விழா நடப்பதால் பல வகையிலும் இடையூறுகள் உருவாகின்றன என்று புனித சேவியர் பசிலிக்கா அதிபர் அருள்தந்தை சாவியோ பரெட்டோ கூறினார்.
புனிதரின் விழாவையொட்டி கோவிலுக்கு வரும் மக்களுக்கு காவல் துறையினர் அளிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் இத்திரைப்பட விழாவினால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது என்றும், இதனால், தன்னார்வத் தொண்டர்களை ஏற்பாடு செய்யவேண்டிய கட்டாயத்திற்குக் கோவில் நிர்வாகம் தள்ளப்பட்டுள்ளதாகவும் அருள்தந்தை பரெட்டோ சுட்டிக் காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.