2011-11-23 15:16:58

கிறிஸ்தவ முன்னேற்ற அவையில் இந்து அடிப்படைவாத எண்ணங்கள் கொண்டோர் உள்ளனர் - பெங்களூரு பேராயர் முறையீடு


நவ.23,2011. கிறிஸ்தவ முன்னேற்ற அவை என்று கர்நாடகா அரசு உருவாக்கியுள்ள அமைப்பு குறித்து தன் வலுவான விமர்சனத்தையும், கண்டனத்தையும் பெங்களூரு பேராயர் பெர்னார்ட் மொராஸ் வெளியிட்டார்.
2008ம் ஆண்டு முதல் கிறிஸ்தவர்களுக்கு எதிரானத் தாக்குதல்கள் அதிகரித்துள்ள கர்நாடகாவில், கிறிஸ்துவ சமுதாயத்தின் நன்மதிப்பைப் பெரும் நோக்கில் அண்மையில் கிறிஸ்தவ முன்னேற்ற அவை என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தலங்கள கட்டப்படுவதற்கும் இன்னும் கிறிஸ்தவ சமுதாயத்தின் பிற முன்னேற்றப் பணிகளுக்கும் ஒவ்வோர் ஆண்டும் 50 கோடி ரூபாய் நிதி இந்த அவையால் பிரித்துக் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அவையின் உறுப்பினர்கள் பற்றி தன்னிடம் கலந்து பேசிய முதலமைச்சர், தான் அளித்த ஆலோசனைகளைப் புறக்கணித்துவிட்டு, பாரதீய ஜனதா கட்சி உறுப்பினர்களையும், இந்து அடிப்படைவாத எண்ணங்கள் கொண்டவர்களையும் இந்தக் குழுவில் இணைத்துள்ளார் என்று பெங்களூரு பேராயர் முறையிட்டுள்ளார்.
இந்த அவையின் அமைப்பு குறித்து முதலமைச்சரைச் சந்தித்து தான் பேசவிருப்பதாகக் கூறிய பேராயர், 2008ம் ஆண்டு தாக்குதலை எதிர்த்து போராட்டங்கள் மேற்கொண்ட இளையோர் பலரை, தகுந்த காரணங்கள் இன்றி அரசு கைது செய்திருப்பது குறித்தும் முதலமைச்சரிடம் பேசவிருப்பதாகத் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.