2011-11-23 15:17:57

எகிப்து இராணுவம் அப்பாவி மக்கள் மீது வன்முறைகளை அளவுக்கு அதிகமாகக் காட்டுகிறது - காப்டிக் ரீதி கத்தோலிக்க ஆயர்


நவ.23,2011. மக்கள் அனைவரும் அமைதியான வழிகளில் மேற்கொண்டிருக்கும் போராட்டத்தைக் குலைக்க எகிப்து இராணுவம் அப்பாவி மக்கள் மீது வன்முறைகளை அளவுக்கு அதிகமாகக் காட்டுகிறது என்று அந்நாட்டின் காப்டிக் ரீதி கத்தோலிக்க ஆயர் ஒருவர் கூறினார்.
கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் இணைந்து, கடந்த சில நாட்களாக கெய்ரோவின் Tahrir சதுக்கத்தில் மேற்கொண்டு வரும் போராட்டத்தில் எவ்வித தூண்டுதலும் இல்லாமல் இராணுவம் வெளிப்படுத்தும் வன்முறை கண்டனத்திற்கு உரியதென்று ஆயர் அந்தோனியோஸ் அசிஸ் மினா கூறினார்.
அப்பாவி மக்களைச் சுடுகின்ற இராணுவமும், அதற்கு உத்தரவு அளிக்கும் அரசும் இந்த அராஜக நடவடிக்கைக்குப் பதில் சொல்ல வேண்டும் என்று ஆயர் மினா கூறினார்.
போராட்டங்கள் ஒன்றே மக்களிடம் உள்ள ஒரு கருவி. அதையும் சீரிய, அமைதியான வழியில் மக்கள் மேற்கொள்ளும்போது, அரசு வன்முறையைப் பயன்படுத்தினால், மக்களும் வன்முறைகளில் ஈடுபட தூண்டுதலாய் இருக்கும் என்று ஆயர் மினா எச்சரிக்கை கொடுத்தார்.
தற்போது பொறுப்பில் உள்ள இராணுவ ஆட்சி கிறிஸ்தவ கோவில்கள் கட்டக் கூடாது என்பது உட்பட கிறிஸ்தவர்கள் மீது சுமத்தியுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தக் கோரி கிறிஸ்தவர்கள் இந்த போராட்டத்தில் குரல் எழுப்பி வருகின்றனர் என்றும் ஆயர் மினா கூறினார்.
தொடர்ந்து இப்புதனன்று கெய்ரோவில் நடைபெற்று வரும் போராட்டங்களை அடக்க இராணுவம் மேற்கொண்டு வரும் அளவுமீறிய வன்முறைகளையும், இதுவரை 30 பேருக்கும் மேல் கொல்லப்பட்டுள்ளதையும் வன்மையாகக் கண்டனம் செய்துள்ளார் ஐ.நா.வின் மனித உரிமைகள் நிறுவனத்தின் இயக்குனர் Navi Pillay.
இராணுவத்தின் வன்முறைகளைக் குறை கூறியதால், கத்தோலிக்கத் திருச்சபைக்கும் அரசுக்கும் இடையே உள்ள உறவு பாதிக்கப்பட்டுள்ளது என்று ICN என்ற கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.