2011-11-22 15:04:40

விவிலியத்
தேடல் - திருப்பாடல் 91 பாகம் 3


RealAudioMP3 1990களில் வெளிவந்த திரைப்படமொன்றில், பிறக்கும்போது தாயைப் பறிகொடுத்த பிஞ்சுக்குழந்தையை அதன் தந்தை வளர்த்து வருகிறார். ஒரு நாள் குழந்தையைத் தன் மார்பில் அணைத்தபடி, வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்க கடையை நோக்கிப் பேருந்திலே சென்று கொண்டிருக்கிறார். அப்போது ஆட்சி மாற்றத்தால் கோபமடைந்த ஆளும் கட்சியினர், வன்முறை செய்வதாக ஒரு காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இக்குழந்தையும் தந்தையும் சென்று கொண்டிருந்தப் பேருந்தை அடித்து உடைக்கின்றனர். தந்தைக்கு பயமென்றாலும் தந்தையின் மார்பில் சாய்ந்து கொண்டிருந்த குழந்தை சிரித்து கொண்டிருக்கிறது. அவ்விடத்தைச் சுற்றிலும் ஆயிரம் வன்முறைகள் நடந்தாலும், அக்குழந்தையோ, “நான் என் தந்தையின் அரவணைப்பிலிருக்கிறேன் என் தந்தையின் உடனிருப்பில் இருக்கிறேன், எனவே எனக்குக் கவலையில்லை” என்பதைப்போலச் சிரித்துக் கொண்டிருந்த காட்சி என் மனதைத் தொட்டது.
அன்பார்ந்தவர்களே! இன்று நாம், “இறைவனின் உடனிருப்பு நம்மோடு” என்பதைச் சிந்திக்கிறோம். கடந்த இருவாரங்களில் திருப்பாடல் 91ல் இறைவனில் அடைக்கலம் புகுவது மற்றும் இஸ்ரயேல் மக்களின் நம்பிக்கைப் பகிர்வு பற்றிச் சிந்தித்தோம். இன்றும் அதேத் திருப்பாடலில் சொல்லப்படுகின்ற, இறைவனின் உடனிருப்பைப் பற்றிச் சிந்திப்போம். வருகின்ற ஞாயிறு திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு. திருவருகைக் காலத்தைத் துவங்கும் வேளையில், இறைவன் நம்மோடு என்ற இறைவனுடைய உடனிருப்பைப் பற்றிச் சிந்திப்பது பொருத்தமானதெனக் கருதுகிறேன்.

திருப்பாடல் 91: 15
அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்; அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன்; அவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன்.
யாவே இறைவனை ஏதோ தூரமாய் மறைந்திருக்கும் கடவுள் என இஸ்ரயேல் மக்கள் நினைக்கவில்லை. உலகைப் படைத்தார். படைத்த பிறகு மறைந்து விட்டார் என்று நினைக்கவில்லை. மாறாக, யாவே இறைவனை உயிருள்ளவராக, தங்களோடு சேர்ந்து கானான் நாடு நோக்கி பயணிக்கின்றவராக, தங்கள் சுக, துக்கங்களில் பங்கெடுக்கும் தங்கள் சொந்தத் தந்தையாகப் பார்த்தனர். துன்ப வேளைகளில் கூக்குரலிட்டு அவரை அழைத்தனர் அவரும் அவர்களது அழுகுரலைக் கேட்டு, மேகத்தூண் மற்றும் நெருப்புத்தூண்களில் பிரசன்னமாகி, அவர்களோடு இருந்து, தனது வல்ல செயல்களால் அவர்களைக் காப்பாற்றினார்.
அன்பார்ந்தவர்களே! இத்ததைய இறை உடனிருப்பை திருவிவிலியம் முழுவதுமே பார்க்கமுடிகிறது. எனினும், இறைவாக்கினர் எசாயா, இறைவன் தான் தேர்ந்தெடுத்த மக்களோடு இருந்தார் என்பதை அவர்களே உணர்ந்தார்கள் என்று சொல்லும் பகுதி மிகவும் அற்புதமானது. அதன் சுருக்கம் இதோ:
அக்காலத்தில், அசீரிய அரசு பிற அரசுகளை அச்சுறுத்தும் வண்ணம் மிக விரைவாக வளர்ந்து வந்தது. இதைப்பார்த்து சிரியா மற்றும் இஸ்ரயேலின் அரசர்கள், யூதாவின் அரசனோடு சேர்ந்து அசீரியர்களை வளரவிடாமல் அழிக்கத் திட்டம் தீட்டினர். யூதாவின் சம்மதத்திற்காகக் காத்திருந்தனர். ஆனால் யூதாவின் அரசர் ஆகாசு, தயங்கி காலம் தாழ்த்தியமையால் சிரியாவும், இஸ்ரயேலும் கைகோர்த்து யூதாவின் மேல் போர் தொடுக்க முடிவு செய்தன. இதைக்கேள்வியுற்ற அரசர் ஆகாசு, அசீரியர்களுடன் சேர்ந்து சிரியா மற்றும் இஸ்ரயேலை அழிக்கத் திட்டம் தீட்டினார்.
இச்சமயத்தில் எசாயா இறைவாக்கினர் யூதாவின் அரசன் ஆகாசுக்கு இறைவாக்கு உரைக்கிறார்: “கடவுள் உன்னோடு இருக்கிறார். எனவே நீ கலங்க வேண்டாம் அசீரியர்களோடு கைகோர்க்க வேண்டாம். இறைவன் உன்னோடு இருந்து உன்னைக்காப்பார் அதற்கு அடையாளமாக கன்னிப் பெண் கருத்தாங்கி, ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பார். அக்குழந்தை எம்மானுவேல் என்றழைக்கப்படும்” என்று சொன்னார்.
ஆனால் ஆகாசு இதை நம்பவில்லை. யூத மக்களின் பிரதிநிதியான அரசன் இறைவாக்கை நம்பாவிடினும், இறைவன் அவர் சொன்னபடியே குழந்தையைப் பிறக்கச் செய்தார். அரசன் ஆகாசு இறைவனைப் புறக்கணித்தாலும், அம்மக்களின் துன்பதுயரங்களில் இறைவன் அவர்களோடு இருந்து அவர்களைக் காத்தார்.

அன்பார்ந்தவர்களே! பழைய ஏற்பாட்டைத் தொடர்ந்து, புதிய ஏற்பாட்டிலும் இறைவனின் உடனிருப்பு தொடர்ந்தது. பழைய ஏற்பாட்டிலே மேகத்தூண் வழியாகவும், நெருப்புத்தூண் வழியாகவும் பல்வேறு அடையாளங்கள் வழியாகவும் தனது உடனிருப்பைத் தொடர்ந்த யாவே இறைவன், புதிய ஏற்பாட்டிலே மனித உருவிலே தன் மகன் இயேசு வழியாக உடனிருப்பைத் தொடர்ந்தார்.
எபிரேயருக்கு எழுதிய கடிதம் முதல் இரண்டு சொற்றொடர்கள்:
பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள்,
இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார்; இவரை எல்லாவற்றுக்கும் உரிமையாளராக்கினார்; இவர் வழியாக உலகங்களைப் படைத்தார்.

பழைய ஏற்பாட்டிலும், புதிய ஏற்பாட்டிலும் தனது உடனிருப்பைத் தொடர்ந்த இறைவன், இன்றும் நம்முடன் இருக்கிறாரா? தொடர்கின்ற இறைவனின் உடனிருப்பை நாம் உணர்கிறோமா? அன்று இஸ்ரயேல் மக்களின் துன்பத்தில் உடனிருந்த இறைவன் இன்று நம்மோடும் இருக்கிறார் என்பதுதான் கத்தோலிக்க விசுவாசம். கத்தோலிக்கத் திருச்சபை இறைவனின் உடனிருப்பை பல வகைகளில் எடுத்துரைக்கிறது. அவற்றில் நான்கு வகை உடனிருப்பை மட்டும் குறிப்பிட விரும்புகிறேன்.

முதலாவதாக, இறைவனின் உருவிலும் சாயலிலும் உருவாக்கப்பட்ட மனிதர்களின் வழியாக இறைவனின் பிரசன்னம் தொடர்கின்றது. நமது துன்ப வேளைகளில் இக்கட்டான சூழ்நிலைகளில் வந்து உதவி செய்யும் மனிதர்களைப் பார்த்து, “கடவுள்மாதிரி வந்து உதவி செஞ்சீங்க” என்று சொல்லியிருப்போம் அல்லது சொல்லக் கேட்டிருப்போம். இது மனிதர்களின் வழியாகத் தொடரும் இறைவனின் உடனிருப்பிற்கு ஓர் உதாரணம்.
இரண்டாவதாக, நற்கருணை வழியாகத் தொடரும் உடனிருப்பு. தன்னையே மனுக்குலத்திற்காக உடைத்துக் கொடுத்த இயேசுவின் தற்கையளிப்பைக் கொண்டாடும் திருப்பலியிலும், கத்தோலிக்கத் திருச்சபை கொண்டிருக்கும் மாபெரும் கருவூலமான நற்கருணையிலும் இறைவனின் உடனிருப்பு தொடர்கிறது.
மூன்றாவதாக, இறைவார்த்தை வழியாகத் தொடரும் உடனிருப்பு. சிறியவர் முதல் பெரியவர் வரை நமது வாழ்க்கைக்கு வழிகாட்டிகளை எதிர்பார்க்கிறோம், கிறிஸ்தவர்கள் கொண்டிருக்கின்ற மிகப்பெரிய கருவூலம் வாழ்வின் வழிகாட்டியான விவிலியம். திருவிவிலியம் வழியாகப் பேசி, நமக்கு வழிகாட்டியாக இறைவனின் உடனிருப்புத் தொடர்கிறது.

அன்பார்ந்தவர்களே! இறுதியாக, கடவுள் நம்பிக்கையுள்ளவர்களால், வார்த்தைகளால் விவரிக்கமுடியாத, ஆனால் உணரமுடிகின்ற இறைவனின் உடனிருப்பு. உடனிருப்பு என்பது உடலளவிலானது மட்டுமல்ல. உடனிருப்பை மனதளவிலும் உணரமுடியும். வார்த்தைகளால் விவரிக்கமுடியாத ஆனால் மனதால் உணரமுடிகின்ற உடனிருப்பை எப்படி விளக்க முடியும்?
தொலைக்காட்சி நெடுந்தொடர்களின் தாக்கத்திற்குள்ளான சமுதாயத்தில் வாழும் நம்மால் இந்த உடனிருப்பை மிகத்துல்லியமாகப் புரிந்து கொள்ளமுடியும். செல்லமேயில் வரும் செல்லம்மாவும், தங்கத்தில் வரும் ஐயாவும் உண்மையில் வாழும் மனிதர்கள் இல்லை. நெடுந்தொடர் கதாபாத்திரங்கள் தான். ஆனால் தமிழகத்தில் பெண்கள் மனதில் மட்டுமின்றி ஆண்கள் மனதிலும் இவர்கள் உண்மைக் கதாபாத்திரங்களாக வாழ்கிறார்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. சக்திமான், டோரா, டாம் அண்டு ஜெரி, பேட்மேன் ஆகியோர் உண்மை மனிதர்கள் இல்லை கற்பனைக் கதாபாத்திரங்கள் எனச் சொன்னால், பொய் சொல்கிறோம் என்பதைப் போல்தான் குழந்தைகள் நம்மைப் பார்ப்பார்கள். இவ்வகையான கற்பனைக் கதாபாத்திரங்களே உண்மை மனிதர்களாக நம் மனதில் வாழும் போது, கண்ணின் மணி போல நம்மை காத்து வழிநடத்தும் இறைவனின் உடனிருப்பை நாம் உணர்வதில் எந்தத் தடையும் இருக்க வாய்ப்பில்லை.

என் சிறுவயதில் கேட்ட சிந்தனை ஒன்று நினைவுக்கு வருகிறது. ஒரு நாட்டினுடைய விடுதலைக்காகப் போராடிய இருவரை அந்நாட்டை ஆண்டுகொண்டிருந்த சர்வாதிகார அரசு தூக்கிலிட ஆணை பிறப்பித்தது. அவர்களில் ஒருவர் கடவுள் நம்பிக்கையுள்ளவர் மற்றொருவர் கடவுள் நம்பிக்கையில்லாதவர். அப்போது கடவுள் நம்பிக்கையில்லாதவர், கடவுள் நம்பிக்கையுள்ளவரைப் பார்த்து, “எப்போதும் கடவுள்! கடவுள்! என்று சொல்வாயே? உன் கடவுள் எங்கே சென்றார்? நம்மை அல்லது உன்னைக் காப்பாற்ற வரவில்லையே” என்று கேட்டாராம். அதற்கு கடவுள் நம்பிக்கையுள்ளவர், “கடவுள் வேறெங்கும் இல்லை துன்பப்படுகிற நம்மோடு சேர்ந்து அவரும் துன்பப்படுகிறார்” என்று சொன்னாராம்.
கடவுள் நம் துன்பத்தில் பங்கேற்கிறார் என்பதற்கு இயேசுவின் வாழ்வே சான்று. அக்காலத்திலே சிலுவை என்பது அவமானச்சின்னம். அவமானச்சின்னமாகிய சிலுவையை சுமந்து அடிக்கப்பட்டு உடல் மற்றும் மனம் வருத்தப்பட்டு இறைமகன் இயேசு நமக்காக உயிர் துறந்தார். இதுவே, கடவுள் நம் துன்பத்திலே பங்கெடுக்கிறார் என்பதற்கு சிறந்த உதாரணம்.

திருப்பாடல் 91: 15
அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்; அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன்; அவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன்.
எனவே அன்பார்ந்தவர்களே! விவிலியம் வழியாகவும், நற்கருணை வழியாகவும், பிற மனிதர்கள் வழியாகவும் உடனிருக்கும் இறைவனை உணர்வோம். நம்முடன் இருக்கும் இறைவனைப் பிறமனிதர்களும் உணரச் செய்வோம். இதுவே இத்திருப்பாடல் நமக்குச் சொல்லித் தருகின்ற பாடம்.








All the contents on this site are copyrighted ©.