2011-11-22 15:04:11

நவம்பர் 23, வாழ்ந்தவர் வழியில்... மிகுவேல் அகுஸ்தின் ப்ரோ


1891ம் ஆண்டு சனவரி 13ம் தேதி மெக்சிகோ நாட்டின் குவாதலுபே என்ற ஊரில் பிறந்தவர் மிகுவேல் அகுஸ்தின் ப்ரோ (Miguel Agustín Pro Juárez). சிறு வயது முதல் ஆன்மீகத்தில் ஆர்வம் கொண்டிருந்த ப்ரோ, குறும்புகள் செய்வதிலும் வல்லவர். இவரது மூத்த சகோதரி துறவு மடத்தில் சேர்ந்தபின், ப்ரோ தன் இறை அழைத்தலை உணர்ந்தார்.
1911ம் ஆண்டு தனது 20வது வயதில் இவர் இயேசுசபையில் சேர்ந்தார். அவ்வேளையில் மெக்சிகோ நாட்டில் கத்தோலிக்கத் திருச்சபைக்கு எதிரான வெறுப்புணர்வு வெகுவாக வளர்ந்திருந்தது. எனவே, மிகுவேல் ப்ரோ தன் இயேசுசபை பயிற்சிகளை அமெரிக்காவிலும், ஸ்பெயின் நாட்டிலும் தொடர வேண்டியிருந்தது.
1925ம் ஆண்டு குருப்பட்டம் பெற்ற இவர், திருச்சபைக்கு எதிரான உணர்வுகள் மெக்சிகோவில் அதிகம் இருந்தாலும், தன் சொந்த நாட்டில் குருத்துவப் பணி புரியத் திரும்பினார். அங்கு ஈராண்டுகள் அரசுக்குத் தெரியாமல் பல்வேறு வேடங்கள் அணிந்து மக்களுக்குத் திருப்பலிகள் ஆற்றுதல், அருள்சாதனங்களை வழங்குதல் ஆகிய குருத்துவப் பணிகளைத் தொடர்ந்தார். ஏழைகளுக்கு தன்னால் இயன்ற அளவு உதவிகள் செய்து வந்தார். ஓர் அரசு அதிகாரி போல வேடமணிந்து சிறைச்சாலைகளில் இருந்த கத்தோலிக்கர்களுக்குத் திருநற்கருணை கொண்டு சென்றார். இவரது நடவடிக்கைகளைத் தெரிந்து கொண்ட அரசு, இவர் மீது பொய் குற்றம் சுமத்தி, தகுந்த விசாரணைகள் ஏதுமின்றி, இவருக்கு மரண தண்டனை அளித்தது.
மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாளன்று, 36 வயதே நிரம்பிய இளங்குரு மிகுவேல் ப்ரோ கருணை காட்டும்படி தன்னிடம் கெஞ்சுவார் என்று எண்ணிய மெக்சிகோ அரசுத் தலைவர் Plutarco Calles, இந்தக் காட்சியை ஊடங்கள் காண வேண்டுமென்று அவர்களையும் அழைத்திருந்தார். ஆனால், மரண தண்டனைக்கு முன் மிகுவேல் ப்ரோ முழந்தாள் படியிட்டு செபித்தார். தன் கையில் வைத்திருந்த சிலுவையை முத்தமிட்டார். எழுந்து நின்ற அவரது கண்களை கட்ட அதிகாரி வந்தபோது, தனக்கு மரணத்தைக் கண்டு பயமில்லை என்று கூறினார் அருள்தந்தை ப்ரோ, 'கிறிஸ்து அரசர் என்றென்றும் வாழ்க' என்று சொல்லியபடி கரங்களை விரித்து நின்ற அவர் மீது அதிகாரிகள் சுட்டனர். இதை ஊடகங்கள் அனைத்தும் படம் பிடித்தன.
1927ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி கிறிஸ்துவுக்காக வீர மரணம் அடைந்த இயேசு சபை குரு மிகுவேல் ப்ரோவை ஒரு மறை சாட்சி என்று அறிவித்து, திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் 1988ம் ஆண்டு அவரை அருளாளராக உயர்த்தினார். அருளாளர் மிகுவேல் ப்ரோவின் திருநாள் நவம்பர் 23 அன்று கொண்டாடப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.