2011-11-22 15:07:11

எகிப்திய ஆர்ப்பாட்டங்களில், இளையோர் முக்கிய அங்கம் வகிக்கின்றனர் - கொம்போனி சபை குரு


நவ.22,2011. எகிப்தில் இராணுவ ஆட்சியை எதிர்த்து நடத்தப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தில், இளையோர் முக்கிய அங்கம் வகித்துப் போராடுகின்றனர் என்று கெய்ரோவில் மறைப்பணியாற்றும் கொம்போனி சபை குரு Luciano Verdoscia தெரிவித்தார்.
பாதுகாப்புப் படையினருக்கும் பொது மக்களுக்கும் இடையே நடக்கும் மோதல்கள் இரவு நேரங்களிலும் தொடருகின்றன என்றுரைத்த குரு Verdoscia, இந்த மோதல்கள் இடம் பெறுவதற்கு இரண்டு விவகாரங்கள் முக்கியமானவை என்று கூறினார்.
எகிப்தில் அண்மை மாதங்களில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டங்களில் கைது செய்யப்பட்டு இராணுவ நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தற்போதைய ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன என்று அக்கரு கூறினார்.
கடந்த 3 நாள்களாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் குறைந்தது 20 பேர் இறந்தனர் மற்றும் சுமார் 400 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும், இச்செவ்வாய்க்கிழமையும் இராணுவ ஆட்சியை எதிர்த்து இலட்சக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எகிப்தில், அதிபராக இருந்த ஹோஸ்னி முபாரக், மக்களால் விரட்டப்பட்ட பின், தற்காலிக ஆட்சிப் பொறுப்பேற்ற இராணுவ உயர்மட்ட அவை, ஆறு மாதங்களுக்குள், நாடாளுமன்றத் தேர்தல் நடத்துவதாக வாக்களித்தது. ஆனால், இத்தேர்தல் உட்பட அந்த அவை சொன்ன எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மேலும், அண்மையில், புதிய அரசியல் அமைப்பின் வழிகாட்டு நெறிகள் அடங்கிய ஆவணம் ஒன்றையும் இராணுவ அவை சமர்ப்பித்தது. அதில், இராணுவத்துக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது. இந்த ஆவணத்தை முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்தன. ஆர்ப்பாட்டங்களும் தொடருகின்றன.








All the contents on this site are copyrighted ©.