2011-11-21 15:23:30

வாரம் ஓர் அலசல் - நில் கவனி செல்


நவ.21,2011. இறப்பு என்ற செய்தி எவரும் கேட்க விரும்பாத ஒன்று. உறங்குவது போலும் சாக்காடு உறங்கி, விழிப்பது போலும் பிறப்பு என்கிற குறள் வரிகளைக் கேட்டிருந்தாலும் இந்தச் செய்தி இனிப்பான செய்தியாக இருப்பதில்லை. மரணம், ஆதிசங்கரரை 32 வயதில் முத்தமிட்டது. இயேசு கிறிஸ்துவை 33 வயதில் முடித்து விட்டது. பாரதியை 39 வயதில் பதம் பார்த்தது. விவேகானந்தரை 40 வயது நடப்பதற்குள் அனைத்துக்கொண்டது. எனவே இறப்புக்கு வயது வரம்பு கிடையாது. நாளும் நேரமும் கிடையாது. ஒருவர் எங்கிருந்தாலும் அது வரும், எந்த உறுதியானக் கோட்டைகளில் வாழ்ந்தாலும் அது வந்தே தீரும். சாலை விபத்துக்களால், நோய்களால், சண்டைகளால் என ஒவ்வொரு நாளும் எத்தனை எத்தனை இறப்புக்கள்!. நவம்பர் மூன்றாம் ஞாயிறு சாலை விபத்துக்களில் இறந்தவர்களை நினைவுகூரும் அனைத்துலக நாளாக ஆண்டு தோறும் கடைபிடிக்கப்படுகிறது. இவ்வாண்டு இஞ்ஞாயிறன்று இத்தினம் அனுசரிக்கப்பட்டது. சாலை விபத்துக்களால் உலகில் தினமும் சுமார் 3,500 பேர் வீதமும், ஆண்டுக்கு சுமார் 13 இலட்சம் பேர் வீதமும் இறக்கின்றனர். சுமார் ஐந்து கோடிப்பேர் காயமடைகின்றனர் அல்லது ஊனமடைகின்றனர். இவ்விபத்துக்களுக்கு அதிகம் பலியாகுவோர் 10 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று இவ்வுலக நாளையொட்டி ஐ.நா.வெளியிட்ட செய்தி கூறுகிறது. இந்தியாவில் 2010ம் ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்துக்களில் 3 இலட்சத்து 84 ஆயிரத்து 649 பேர் பலியாகியுள்ளனர் என்று ஒரு தகவல் வெளியாகியது.
கிறிஸ்தவர்கள் நவம்பர் மாதத்தில் இறந்தவர்களுக்காக அதிகம் செபிக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் வெளியாகும் இறப்புச் செய்திகளில் சில பலரின் உள்ளத்தை உருக்குகின்றன. இறந்தவரோடு எந்தவித உறவுகளும் தொடர்புகளுமே இல்லாதிருந்தாலும்கூட அந்த நபரின் இறப்புச் செய்தி துயரத்தைத் தருகிறது. இயேசுமரி பிறரன்பு சபையைச் சேர்ந்த அருள்சகோதரி வல்சா ஜான் கடந்த வாரத்தில் இறந்த செய்தியை, அதுவும் அவர்கள் எப்படி இறந்தார்கள் என்று கேட்ட போது ஈரமுள்ள எந்த நெஞ்சும் பதறாமல் இருந்திருக்காது. கேரளாவைச் சேர்ந்த 53 வயது நிரம்பிய இச்சகோதரி ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுரங்க மாஃபியாவால் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நடந்த கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, தனது வீட்டை சுமார் 50 பேர் சூழ்ந்துள்ளதை அறிந்த அருள்சகோதரி வல்சா, காவல்துறையின் உதவியை நாடியதாகவும் ஆனால் காவல்துறையிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை என்றும், கொல்லப்பட்ட வல்சாவுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்ததாக இஞ்ஞாயிறு வெளியான செய்திகள் கூறுகின்றன. சமூக சேவகியான வல்சா, பாகூர் பகுதியில் நடந்த நில ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடியவர். ஜார்க்கண்டில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர் மத்தியில் கடந்த 12 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். இச்சகோதரி கொல்லப்பட்டதற்கான காரணத்தை விளக்குகிறார் திருவாளர் அந்தோணி அருள்ராஜ். இவர், புது டெல்லியிலுள்ள இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் நீதி, வளர்ச்சி, அமைதி ஆணைக்குழுவில் மனித உரிமை ஆர்வலராகப் பணியாற்றி வருகிறார்.
RealAudioMP3 மார்ட்டின் லூத்தர் கிங் சொன்னார் எந்த இடத்தில் அநீதி இருந்தாலும் அது எல்லா இடங்களிலும் நீதிக்கு ஓர் அச்சுறுத்தல் என்று. இதுதான் அருள்சகோதரி வல்சா விடயத்திலும் நடந்துள்ளது. இவர் ஒடுக்கப்பட்டு நசுக்கப்படும் ஏழை எளிய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுத்தார். இவரது நீதிக்கான குரல் முற்றிலுமாகப் பொசுக்கப்பட்டு விட்டது என்று அவரைக் கொலை செய்தவர்கள் நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. இவரின் இறப்பு பல மனித உரிமைப் போராளிகளை உருவாக்கும். இச்சகோதரியை தொலைக்க நினைத்தவர்கள் தொலைந்து போவார்கள். ஆனால் எப்படித் தொலைந்து போவார்கள்?. காலம் பதில் சொல்லும்.
அப்படித்தான் அந்த வீட்டுச் செல்ல நாயினால் அந்த வீட்டுக்கு கெட்ட பெயர் வந்தது. எப்படியாவது அந்த நாயைத் தொலைத்துக் கட்ட விரும்பிய வீட்டுக்காரர் அதனை 25 கிலோ மீட்டரில் கொண்டு போய் விட்டார். அது உடனடியாகத் திரும்பி வந்து விட்டது. பின்னர் 50 கிலோ மீட்டர் தூரம் சென்று அதை விட்டு வந்தார். ஆனால் அது ஒரு நாளில் திரும்பி வந்து விட்டது. குழம்பிப்போன அவர், அடுத்த நாள் அதிகாலையில் புறப்பட்டு இரண்டு சக்கர வாகனத்தில் அதை வைத்து அந்த நாய் வழி கண்டுபிடிக்க முடியாத அளவுக்குத் தாறுமாறாய் வண்டியை ஓட்டினார். இவருக்கே எங்கே இருக்கிறோம் என்று தெரியாத அளவுக்கு சந்து பொந்தெல்லாம் ஓட்டிச் சென்றார். ஒரு வழியாய் நாயை விட்டு விட்டு வீடு திரும்பினார். இருட்டி விட்டது. வழி அவருக்கே தெரியவில்லை. இரவு மணி 12 ஆகிவிட்டது. அப்போது அவரது மனைவி வீட்டிலிருந்து கைபேசியில் அழைத்தார். எங்கே இருக்கிறீர்கள், நாய் உங்களுக்கு முன்னர் வீடு வந்து சேர்ந்து விட்டது என்று.
இன்று உலகின் பல இடங்களில் நீதிக்கும் மனித உரிமைக்கும் சமாதி கட்ட நினைத்து மனித உரிமை ஆர்வலர்கள் கொடூரமாய்க் கொல்லப்படுகிறார்கள். ஆனால் அவர்களது இறப்பு புதிய புதிய ஆர்வலர்களை உருவாக்கிக் கொண்டே இருக்கின்றது. தொலைக்க நினைத்தவர்கள் தொலைந்து போவதற்கு அச்சுறுத்தல் வந்து கொண்டே இருக்கின்றது. எனவே, மனிதா, நீ பயணிக்கும் உனது வாழ்க்கையை சற்று இடைமறித்து நின்று அது எப்படிச் செல்கின்றது என்று நிதானமாய்ச் சிந்தித்து பின் அதனைத் தொடர். ஏனெனில் நீ ஒருவரை எந்தக் கல்லறைக்கு அனுப்புகிறாயோ அதே கல்லறை உனக்காகக் காத்திருக்கிறது. நீ மலை உச்சியில் கோட்டை கட்டி வாழ்ந்தாலும் அல்லது பாதாளத்தில் பதுங்கிக் குழிகளில் வாழ்ந்தாலும் உனக்கும் ஒரு கல்லறை இருக்கின்றது. எனவே நில், கவனி, பின் செல்.







All the contents on this site are copyrighted ©.