2011-11-21 15:44:05

பெனின் நாட்டில் திருத்தந்தை வழங்கிய பிரியாவிடை உரை


நவ.21,2011. ஆப்ரிக்க நாடு நம்பிக்கை தரும் ஒரு நாடு. இங்கு காணப்படும் பல்வேறு மதிப்பீடுகள் உலகிற்கு நல்ல பல பாடங்களை வழங்கவல்லது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
கடந்த மூன்று நாட்கள் ஆப்ரிக்கக் கண்டத்தின் பெனின் நாட்டில் தனது திருப்பயணத்தை மேற்கொண்ட திருத்தந்தை இஞ்ஞாயிறு மாலை Cotonou விமான நிலையத்தில் அம்மக்களிடமிருந்து பிரியாவிடை பெற்றபோது இவ்விதம் கூறினார்.
இத்திருப்பயணத்தின் இறுதி நிகழ்ச்சியாக Cotonou நகரில் அமைந்துள்ள கர்தினால் Bernardin Gantin விமான நிலையத்தில் பெனின் நாட்டு அரசுத் தலைவர் தாமஸ் போனி யாயி திருத்தந்தைக்கு பிரியாவிடை வாழ்த்துக்களைக் கூறினார்.
அரசுத் தலைவரின் வாழ்த்துக்களுக்குப் பதிலிறுத்த திருத்தந்தை, அந்நாடு பல்வேறு கலாச்சாரங்களையும், மதங்களையும் கொண்டுள்ளது, மற்றும் அரசுக்கும் திருச்சபைக்கும் இடையே நல்லுறவு உள்ளது என்பவைகளைச் சுட்டிக் காட்டி, பல்வேறு குழுக்கள் நாட்டில் இருந்தாலும், அங்கு நிலவும் கலந்துரையாடல் அந்நாட்டை இதுவரை அமைதியிலும் முன்னேற்றத்திலும் வளர்த்திருப்பது மற்ற நாடுகளுக்கு ஓர் எடுத்துகாட்டு என்று கூறினார்.
தான் ஆப்ரிக்க ஆயர்கள் வழியாக மக்களுக்கு வழங்கியுள்ள Africae Munus என்ற அப்போஸ்தலிக்க ஏட்டை அனைவரும் கவனமாகப் பயின்று, அங்கு கூறப்பட்டுள்ள கருத்துக்களை நடைமுறைப் படுத்துவதில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று திருத்தந்தை தன் இறுதி உரையில் மக்களைக் கேட்டுக் கொண்டார்.
ஆப்ரிக்கக் கண்டத்தையும், பெனின் நாட்டையும் அன்னை மரியாவின் பாதுகாவலில் ஒப்படைப்பதாகக் கூறியபின், திருத்தந்தை விமானம் ஏறி உரோம் நகர் நோக்கிப் புறப்பட்டார்.








All the contents on this site are copyrighted ©.