2011-11-21 15:44:47

கோவா கோவில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகப்படுத்த காவல்துறை கட்டளை


நவ.21,2011. கிறிஸ்மஸ் புத்தாண்டு ஆகிய முக்கிய விழாக்களின்போது மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் கோவில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகப்படுத்தப்பட வேண்டுமென்று கோவா மாநில காவல்துறை கோவில் நிர்வாகங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு கோவிலிலும் கண்காணிப்பு காமராக்கள் பொருத்தப்படவேண்டும் என்றும், 24 மணி நேரமும் கோவிலைச் சுற்றி கண்காணிப்பில் ஈடுபட காவலாளிகளை நியமிக்க வேண்டும் என்றும் காவல்துறை உயர் அதிகாரி Arvind Gawas கேட்டுக் கொண்டுள்ளார்.
டிசம்பர் 3ம் தேதி கோவாவின் மிகப் புகழ்பெற்ற புனித சேவியர் பசிலிக்கா பேராலய விழாவில் பங்கேற்க உலகெங்கும் இருந்து பயணிகள் வந்து சேருவர். இதைத் தொடர்ந்து கோவாவில் உள்ள 180க்கும் அதிகமான கிறிஸ்தவ கோவில்களில் கிறிஸ்மஸ், புத்தாண்டு என பல விழாக்களில் கலந்து கொள்ள மக்கள் கூட்டம் நிறையும் என்பதால், இக்கோவில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட வேண்டும் என்று காவல் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
புனித சேவியரின் உடல் வைக்கப்பட்டிருக்கும் Bom Jesus பசிலிக்காப் பேராலயமும், அதன் சுற்றுப்பகுதிகளும் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்ளும் இந்திய அரசின் மேற்பார்வையில் உள்ளது என்று கூறிய பசிலிக்கா அதிபர் அருள்தந்தை சாவியோ பரெட்டோ (Savio Barretto) இந்த அரசுத்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை தனியார் நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைத்துள்ளதால், பாதுகாப்பில் பல குறைபாடுகள் எழுந்துள்ளன என்று சுட்டிக் காட்டினார்.
கோவில் பாதுகாப்பை காவல் துறையினர் மேற்கொள்வதே பொருத்தம் என்றும், பாதுகாப்பு நடவைக்கைகளைக் கோவில் நிர்வாகமே மேற்கொள்ள வேண்டும் என்று காவல் துறை கூறுவது ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்து அல்ல என்றும் கோவா பேராயர் இல்லத்தின் சார்பில் பேசிய அருள்தந்தை Francis Caldeira கூறினார்.








All the contents on this site are copyrighted ©.