2011-11-20 13:50:49

நவம்பர் 21 வாழ்ந்தவர் வழியில்.... முகமது அப்துஸ் சலாம்


முகமது அப்துஸ் சலாம் (Mohammad Abdus Salam) என்பவர், பாகிஸ்தானிய இயற்பியலாளர் மற்றும் நொபெல் இயற்பியல் விருது பெற்றவர். முகமது அப்துஸ் சலாம், ஷெல்டன் கிளாஷோ, ஸ்டீவன் வெய்ன்பெர்க் (Sheldon Glashow, Steven Weinberg) ஆகிய மூவருக்கும் 1979ம் ஆண்டு இவ்விருது கிடைத்தது. அறிவியலில் நொபெல் விருது பெற்ற முதல் முஸ்லீம் மற்றும் முதல் பாகிஸ்தானியர் என்ற பெருமையைப் பெற்றவர் சலாம். மின்காந்த மற்றும் கதிரியக்கச் சக்திகளின் மின்கதிரியக்கப் பிணைப்பைக் கண்டுபிடித்ததற்காக இம்மூவருக்கும் இந்த நொபெல் விருது கிடைத்தது. பாகிஸ்தான், பஞ்சாப் மாநிலத்தில் Jhang என்ற நகரில் 1926ம் ஆண்டு சனவரி 29ம் தேதி பிறந்த சலாம், 1960ம் ஆண்டு முதல் 1974ம் ஆண்டு வரை பாகிஸ்தான் அரசின் அறிவியல் ஆலோசகராக இருந்தார். இப்பதவியானது, பாகிஸ்தான் அறிவியல் துறை உள்கட்டமைப்பில் பெரிய மற்றும் செல்வாக்கான நிலையைக் கொண்டது. இவர் இயற்பியல் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், பாகிஸ்தானில் உயரிய அறிவியல் ஆய்வுகளை வளர்ப்பதற்கும் பொறுப்பாளராக இருந்தார். பாகிஸ்தானில் SUPARCO என்ற வானயியல் மற்றும் வெளிமண்டல ஆய்வுக்குழுவை நிறுவிய இவர், கோட்பாட்டு இயற்பியல் குழு உருவாகவும் காரணமாய் இருந்தார். அணுசக்தியை அமைதியான வழியில் பயன்படுத்துவதில் அந்நாடு கண்ட வளர்ச்சியில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. 1972ம் ஆண்டில் ஆயுதங்களின் வளர்ச்சி குறித்த ஆய்வையும் சலாம் வழி நடத்தினார். அக்மதிய (Ahmadiyya) முஸ்லீம் சமூகம், முஸ்லீம்கள் அல்ல என்ற மசோதாவைப் பாகிஸ்தான் நாடாளுமன்றம் 1974ம் ஆண்டில் அங்கீகரித்ததையொட்டி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டை விட்டு வெளியேறினார் சலாம். இவர் ஆக்ஸ்ஃபோர்டில் 1996ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி காலமானார். ஆயினும் இவரது உடல் பாகிஸ்தானுக்குக் கொண்டு வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. சலாம் இறந்த பின்னும் பாகிஸ்தானில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்திய அறிவியலாளரில் ஒருவராக இவர் நோக்கப்படுகிறார். 1998ம் ஆண்டில் அந்நாடு அணுப் பரிசோதனைகளை நடத்தியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அரசு அந்நாட்டின் அறிவியலாளரைக் கவுரவிக்கும் விதமாக நினைவு தபால்தலைகளையும் 1998ம் ஆண்டில் வெளியிட்டது.
நொபெல் விருது தவிர, Copley பதக்கம் (1990), Smith விருது, Adams விருது, Nishan-e-Imtiaz (1979), Sitara-e-Pakistan (1959) ஆகிய விருதுகளையும் பெற்றிருப்பவர் சலாம்.








All the contents on this site are copyrighted ©.