2011-11-19 14:08:26

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 குழந்தைப்பேறு இல்லாமல் தவித்த அயர்லாந்து நாட்டு அரசர் ஒருவர், தனக்குப் பின் அரியணையில் ஏறும் தகுதியுடைய வாரிசு ஒருவரை தான் தேடுவதாக நாட்டு மக்களுக்கு அறிவித்தார். வாரிசாக விரும்புகிறவர்கள் ஒரு குறிப்பிட்ட நாளன்று அரண்மனைக்கு வர வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டார். தனது வாரிசாக விரும்புகிறவர் கடவுள் மீதும், அயலவர் மீதும் ஆழ்ந்த அன்பு கொண்டவராக இருக்க வேண்டும் என்பது மட்டுமே அரசர் விதித்திருந்த நிபந்தனை. பல இளையோர் அரசரின் இந்த அறிக்கையைக் கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். அரண்மனையை நோக்கிப் பயணம் மேற்கொண்டனர்.
அந்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் இருந்த ஒரு சிற்றூரில் ஏழ்மையில் வாழ்ந்து வந்த ஓர் இளைஞன், கடவுள் பக்தி மிக்கவர், அயலவர் மீதும் அதிக அன்பு கொண்டவர். ஊர் மக்கள் அனைவரும் அந்த இளைஞனை அரசரின் வாரிசாகும்படி தூண்டினர். ஊர்மக்களிடையே நிதி திரட்டி, அந்த இளைஞன் உடுத்திக் கொள்ள ஓர் அழகான மேலாடையை அவருக்குப் பரிசளித்தனர். அரண்மனைக்குச் செல்லும் நாள் வந்ததும், பயணத்திற்குத் தேவையான உணவையும் தந்து அவரை வழியனுப்பி வைத்தனர்.
இளைஞன் அரண்மனையை நெருங்கியபோது, அதிகக் குளிராக இருந்தது. பனி பெய்து கொண்டிருந்தது. அரண்மனைக்கு அருகில் வழியோரத்தில் கொட்டும் பனியில் ஒருவர் கிழிந்த ஆடைகளுடன் குளிரில் நடுங்கியவாறு பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். இளைஞன் உடனே தான் அணிந்திருந்த அந்த அழகிய மேலாடையை அவருக்கு அணிவித்தார். தன்னிடம் எஞ்சியிருந்த உணவையும் அவருக்குக் கொடுத்தார்.
அரண்மனையில் நுழைந்ததும் அங்கு ஆயிரக்கணக்கான இளையோர் அரசரின் வரவுக்காகக் காத்திருந்ததைப் பார்த்துவிட்டு, ஓர் ஓரத்தில் இவர் அமர்ந்தார். அப்போது அரசர் அவைக்குள் நுழைந்தார். அவரைக் கண்ட இளைஞனுக்கு அதிர்ச்சி. தான் வழியில் அந்தப் பிச்சைக் காரருக்கு கொடுத்திருந்த மேலாடையை அரசர் அணிந்திருந்தார். அரசர் நேரடியாக இளைஞனிடம் வந்து, அவரைக் கரம் பற்றி அழைத்துச் சென்றார். அவரைத் தன் அரியணையில் அமர வைத்து, "இவரே என் வாரிசு" என்று அறிவித்தார்.

மனதிற்கு நிறைவையும், மகிழ்வையும் தரும் பல கதைகளில் இதுவும் ஒன்று. எவ்விதப் பலனையும் எதிர்பாராமல் ஏழைகளுக்கு நாம் செய்யும் உதவிகள் ஏதோ ஒரு வகையில் நம்மை வந்தடையும் என்று சொல்லும் பல கதைகளை நாம் கேட்டிருக்கிறோம். அந்த ஏழைகளின் வடிவில் இறைவனையே நாம் சந்திக்கிறோம் என்பதையும் கதைகளாக கேட்டிருக்கிறோம். இக்கருத்துடன் சொல்லப்பட்டுள்ள பல கதைகளில் மிகவும் புகழ்பெற்றது லியோ டால்ஸ்டாய் எழுதிய 'Martin the Cobbler' 'காலணிகள் செய்யும் மார்ட்டின்' என்ற கதை.
இறைவன் மார்ட்டினைச் சந்திக்க வருவதாகச் சொல்லியிருந்ததால், அவர் வருவார் என்று நாள் முழுவதும் காத்திருக்கிறார் மார்ட்டின். அவர் காத்திருந்தபோது, தேவையில் இருந்த மூவருக்கு உதவிகள் செய்கிறார். மாலைவரை இறைவன் வராததால் மனமுடைந்த மார்ட்டின், 'கடவுளே, நீர் என் வரவில்லை?' என்று கேள்வி எழுப்புகிறார். கடவுளோ தான் அந்த மூவர் வழியாக அவரை அன்று மூன்று முறை சந்தித்ததாகச் சொல்கிறார்.
இன்றைய நற்செய்தியில் நமக்குச் சொல்லப்படும் பாடமும் இதேதான்: "பசியாக, தாகமாக, ஆடையின்றி, அன்னியராக இருக்கும் ‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன்’ " என்று இறைவன் நம்மிடம் சொல்கிறார்.

கடந்த இரு ஞாயிறன்றும் நமக்குத் தரப்பட்ட நற்செய்திப் பகுதிகள் நம் இறுதி நாட்கள் குறித்து சிந்திக்கும்படி நம்மை அழைத்தன. "விழிப்பாயிருங்கள், தலைவன் வரும் நேரமும், காலமும் உங்களுக்குத் தெரியாது" என்று இரு வாரங்களுக்கு முன் எச்சரிக்கை தரப்பட்டது.
தலைவன் வந்து கணக்கு கேட்கும்போது, உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள திறமைகளுக்கு ஏற்ற சரியான கணக்கைத் தர தயாராக இருங்கள் என்று சென்ற வாரம் எச்சரிக்கை தரப்பட்டது. நமது திறமைகளுக்கு ஏற்ற கணக்கு எவ்வகையில் அமைய வேண்டும் என்பதை இந்த வார நற்செய்தி தெளிவுபடுத்துகிறது.
எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள திறமைகளைக் கொண்டு என் சொந்த வாழ்வை நான் எவ்விதம் மேம்படுத்திக் கொண்டேன் என்று எண்ணிப் பார்ப்பது சரியான கணக்கு அல்ல. மாறாக, என் திறமைகளைக் கொண்டு அடுத்தவர் வாழ்வை நான் எவ்வகையில் மேம்படுத்தியுள்ளேன் என்று காட்டுவதே சரியான, உண்மையான கணக்கு.
இவ்வுலக வாழ்வு முடிந்து, இறுதித் தீர்வை நேரத்தில் நம் கணக்கு வழக்குகளைப் பார்க்கும் இறைவன் இந்த ஒரு கேள்வியை மட்டுமே நம்மிடம் கேட்பார்: உன் வாழ்வைக்கொண்டு... உனக்கு வழங்கப்பட்டச் செல்வங்களை, திறமைகளை, வாய்ப்புக்களைக்கொண்டு அடுத்தவருக்கு என்ன செய்தாய்? முக்கியமாக, செல்வம், திறமை, வாய்ப்புக்கள் இவை யாவும் மறுக்கப்பட்டுள்ள மக்களுக்கு என்ன செய்தாய்? என்பது ஒன்றே இறைவன் கேட்கும் கேள்வி.

இன்று கிறிஸ்து அரசர் பெருவிழா. இப்பெருவிழாவிற்கு ஏன் இப்படி ஒரு நற்செய்தி வழங்கப்பட்டுள்ளது என்று எனக்குள் கேள்வி எழுந்தது. இன்றைய நற்செய்தியின் ஆரம்ப வரிகள் கிறிஸ்துவை ஒரு அரசர் என்று நினைவுபடுத்தும் வரிகள். தொடர்ந்து வரும் வரிகள் அந்த அரசர் எவ்விதம் மற்ற அரசர்களிடம் இருந்து மாறுபட்டவர், இந்த அரசருக்கே உரிய ஒரு முக்கிய பண்பு என்ன என்பதையெல்லாம் விளக்குகின்றன.
அரசருக்கு உரிய பண்புகளில் ஒன்று... நன்மை, தீமை இவைகளைப் பிரித்து, நல்லவைகளை வாழ வைப்பது, தீமைகளை அழிப்பது. கிறிஸ்து அரசரைப் பொறுத்த வரை நன்மை, தீமை இரண்டையும் பிரிக்கும் ஒரே அளவுகோல்... அயலவர்.
பசியாய், தாகமாய், ஆடையின்றி இருக்கும் அயலவர்;
சொந்த நாட்டிலும், மற்ற நாடுகளிலும் உரிமைகள் மறுக்கப்பட்டிருக்கும் அன்னியர், கைம்பெண்கள், அனாதைகள்;
காரணத்தோடும், காரணமின்றியும் சிறைகளில் வாடும் அப்பாவி மக்கள்;
உடல் நலம் குன்றி, அடுத்தவரை அதிகம் நம்பியிருக்கும் நோயுற்றோர்;....
இப்படி கிறிஸ்து அரசரைப் பொறுத்தவரை இந்த அயலவர் பட்டியல் நீளமானது. தேவைகள் அதிகம் உள்ள இந்த அயலவர் பட்டியலில் முக்கியமாக இடம்பெற வேண்டியவர்கள் இன்றைய குழந்தைகள்.

இன்று, நவம்பர் 20, அகில உலகக் குழந்தைகள் நாள் (Universal Children's Day). நவம்பர் 14 கடந்த திங்களன்று இந்தியாவில் குழந்தைகள் நாள் கொண்டாடினோம். பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளைக் கொண்டாடுகிறோம் என்று சொல்லும்போது மனதுக்குள் ஆயிரம் நெருடல்கள்.
தேவையுள்ளவர்களுக்கு உதவிகள் செய்வது ஒன்றே நம்மை இறைவனின் இல்லத்தில் சேர்க்கும் என்று இன்றைய நற்செய்தி நமக்குச் சொல்கிறது. தேவையுள்ளவர்கள் என்ற பட்டியலில் குழந்தைகள் முதலிடம் பெறுபவர்கள். இவர்களது பல்வேறு தேவைகளை நாம் நிறைவேற்றியுள்ளோமா என்பதைச் சிறிது ஆழமாகச் சிந்திக்க இன்றைய நற்செய்தி நமக்கு மீண்டும் ஒரு வாய்ப்பைத் தந்துள்ளது.
கிறிஸ்து அரசரின் அரியணைக்கு முன் இன்று சிறிது நேரம் நிற்க முயல்வோம்.
இந்த அரசருக்கு முன் நிற்க, முக்கியமாக அவரது வலது பக்கம் நிற்பதற்கு நாம் தகுதியுள்ளவர்களாய் இருக்கிறோமா?
இந்த அரசனால் ஆசீர் பெறப் போகிறோமா? அல்லது விரட்டி அடிக்கப்படுவோமா?








All the contents on this site are copyrighted ©.