2011-11-19 15:06:07

குருக்கள், துறவியர், குருமட மாணவர்கள் மற்றும் விசுவாசிகளுக்கு திருத்தந்தை வழங்கிய உரை


நவ.19,2011. புனிதர்கள் Joan of Arc மற்றும் Gall ஆகியோரின் பாதுகாவலில் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த குருத்துவப் பயிற்சி இல்லத்தில் உங்கள் மத்தியில் இருப்பது எனக்குப் பெரும் மகிழ்வைத் தருகிறது. திருமுழுக்கின் வழியாக நமக்குத் தரப்பட்டுள்ள கிறிஸ்தவ வாழ்வும், குருத்துவ வாழ்வும் நம்மிடம் எதிர்பார்ப்பதெல்லாம் அமைதி, நீதி மற்றும் ஒப்புரவு ஆகிய உயரிய பண்புகள். இம்மூன்றையும் உலகில் நிலைநிறுத்துவது குருக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியப் பொறுப்பு. ஒளிப்படிகங்கள் ஒளியைத் தங்களிடமே வைத்துக் கொள்ளாமல், பிரதிபலிப்பதைப் போல், குருக்களும் தங்கள் வாழ்வின் மேலான பண்புகளை உலகோர் அனைவரும் காணும் வண்ணம் பிரதிபலிக்க வேண்டும். இப்படி வாழ்வதற்கு கிறிஸ்து ஒருவரே உங்கள் எடுத்துகாட்டாக இருக்க வேண்டும். இந்த உலகம் காட்டும் மற்ற எடுத்துக்காட்டுகள் உங்களைத் திசைத் திருப்பாமல் காத்துக்கொள்ளுங்கள்.
துறவற வாழ்வைத் தேர்ந்துள்ள சகோதர, சகோதரிகளே, நிபந்தனை ஏதுமின்றி நீங்கள் கிறிஸ்துவைத் தேர்ந்துள்ளதுபோல், அயலவர் அன்பிலும் நிபந்தனைகள் ஏதுமின்றி செயல்படுங்கள். உலகை விட்டு விலகி துறவு மடத்தில் செபத்தில் ஈடுபடுவது உங்கள் அழைப்பாக இருந்தாலும், மக்கள் பணியில் ஈடுபடுவது உங்கள் அழைப்பாக இருந்தாலும், புனிதமான வாழ்வுக்கு நீங்கள் அழைக்கப்பட்டிருப்பதை உணர்ந்து வாழுங்கள்.
குருத்துவ பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்களே, குருத்துவ அழைப்பும் வாழ்வும் புனிதத்திற்கு உங்களை நடத்திச் செல்லும் வழிகள். புனிதம் என்ற கொள்கை இல்லாமல் நீங்கள் மேற்கொள்ளும் குருத்துவப்பணி வெறும் சமுதாயச் சேவையாக மட்டும் மாறும் ஆபத்து உண்டு. உங்கள் பயிற்சி காலத்தில் நீங்கள் சேகரிக்கும் அறிவுத் திறன், ஆன்மீகப் பயிற்சி, மக்கள்பணி பயிற்சிகள் அனைத்துமே உங்களுக்கு கட்டாயம் உதவியாக இருக்கும். அறுபது ஆண்டுகள் குருத்துவ வாழ்வை முடித்தவன் என்ற முறையில் நான் இதை உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
இங்கு கூடியிருக்கும் விசுவாசிகளே, நீங்கள் அனைவருமே உலகின் உப்பாக, ஒளியாக வாழ அழைக்கப்பட்டுள்ளீர்கள். நீதி, அமைதி, ஒப்புரவு ஆகியவற்றை வளர்ப்பதற்கு மீண்டும் ஒரு முறை நீங்கள் உறுதி கொள்ளுங்கள்.








All the contents on this site are copyrighted ©.