2011-11-18 16:11:47

மியான்மாருக்கு ASEAN தலைமைத்துவம் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது – தலத்திருச்சபை


நவ.18,2011. ASEAN நாடுகள் கூட்டமைப்புத் தலைமைப் பதவியை 2014ம் ஆண்டில் மியான்மார் நாட்டிற்கு வழங்க முடிவு செய்திருப்பது அந்நாட்டின் சமய சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் பொருளாதாரம் முன்னேற உதவும் என்று தலத்திருச்சபை அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்தார்.
ASEAN அமைப்பின் இத்தீர்மானம் குறித்து கருத்து தெரிவித்த மியான்மார் கத்தோலிக்க ஆயர் பேரவைத் தலைவர் ஆயர் John Hsane Hgyi, ASEAN அமைப்பின் உறுப்பினர்கள் மியான்மாருக்குத் தலைமைப் பதவியை அளிப்பதற்குத் தீர்மானித்திருப்பதன் மூலம், அந்நாடு சனநாயகப் பாதையில் செல்வதற்குத் தூண்டியுள்ளார்கள் என்று கூறினார்.
ASEAN அமைப்பின் தலைமைப் பதவிக்கு மியான்மார் உண்மையிலேயே தகுதியானதா என்பதை நிரூபணம் செய்வதற்கு அந்நாடு பெருமளவில் முன்னேற்றங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று ஆயர் Hgyi மேலும் கூறினார்.
இந்நடவடிக்கை குறித்துப் பேசிய Yangon அரசியல் விமர்சகர், U Kyaw Khin, இது நாட்டின் முன்னேற்றத்தின் அடையாளமாக இருந்தாலும் எதிர்காலத்தைக் கட்டி எழுப்புவதற்கு அந்நாடு பெருமளவில் தன்னை அர்ப்பணிக்க வேண்டியுள்ளது என்று தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.