2011-11-18 16:11:35

திருத்தந்தையின் 22 வது வெளிநாட்டுத் திருப்பயணம் - திருத்தந்தையின் பெனின் நாட்டுக்கானத் திருப்பயணம்


நவ.18,2011. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் ஆப்ரிக்கக் கண்டத்திற்கான தனது இரண்டாவது திருப்பயணத்தை இவ்வெள்ளி உள்ளூர் நேரம் காலை 9 மணி, 13 நிமிடங்களுக்குத் தொடங்கினார். கத்தோலிக்கரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் ஆப்ரிக்காவின் அங்கோலாவுக்கும் காமரூனுக்கும் 2009ம் ஆண்டில் திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை, இவ்வெள்ளியன்று மேற்கு ஆப்ரிக்க நாடான பெனினுக்கு மூன்று நாட்கள் கொண்ட திருப்பயணத்தை ஆரம்பித்தார். voodoo மரபுவழி சமய வழிபாடுகளின் மையமாக இருக்கும் பெனின் நாட்டிலும் கடந்த பத்தாண்டுகளில் 5 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் கத்தோலிக்கத்திற்கு மாறியுள்ளார்கள். இந்நாட்டிற்குச் செல்வதற்கென வத்திக்கானிலிருந்து ஹெலிகாப்டரில் உரோம் Leonardo da Vinci பன்னாட்டு விமான நிலையத்திற்குச் சென்ற திருத்தந்தையை, இத்தாலியின் புதிய பிரதமர் Mario Monti உட்பட பல பிரமுகர்கள் வரவேற்றனர். இத்தாலி எதிர்நோக்கும் தற்போதைய கடன் நெருக்கடியிலிருந்து அந்நாட்டை மீட்டு வருவதற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவையின் தலைவராகிய Monti யும் திருத்தந்தையும் விமானம் வரைப் பேசிக் கொண்டே சென்றனர். இப்புதிய பிரதமரை வாழ்த்திய திருத்தந்தை, A330 என்ற ஆல் இத்தாலியா விமானத்தில் ஏறினார். புதிய தொழிற்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ள இவ்விமானத்தை ஓட்டும் பணியில் 4 விமான ஓட்டிகளும் 9 தொழிற்நுட்பக்கலைஞரும் இருந்தனர். மேலும், திருத்தந்தையுடன் திருப்பீட அதிகாரிகள் மற்றும் ஊடகத்துறையினரும் பயணம் செய்தனர். உரோமையிலிருந்து 4,073 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள பெனின் நாட்டுப் பொருளாதாரத் தலைநகர் கொட்டுன்னு (Cotonou) கர்தினால் Bernardin Gantin சர்வதேச விமானநிலையத்தை திருத்தந்தை சென்றடைந்த போது உள்ளூர் நேரம் மாலை 3 மணி அதாவது இந்திய நேரம் இரவு 7.30 மணியாகும். ஆறு மணி நேரங்கள் பயணம் செய்து பெனின் சென்றடைந்த திருத்தந்தைக்கு விமான நிலையத்தில் அமோக வரவேற்பு கொடுக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பெண்கள் விமான நிலையத்தில் ஆடிக்கொண்டும் பாடிக் கொண்டும் நின்றனர். அவர்கள் அணிந்திருந்த உடைகளில் திருத்தந்தையின் முகத்தைக் கொண்ட படங்கள் வரையப்பட்டிருந்தன. 32 டிகிரி செல்சியுஸ் வெப்பம் இருந்ததால் குடைகளைப் பிடித்துக் கொண்டும் மக்கள் நின்றனர். அக்குடைகளிலும் திருத்தந்தையின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. அண்டை நாடுகளிலிருந்தும் குருக்களும் மக்களும் வந்திருந்தனர்.
பெனின் அரசுத் தலைவர் Yayi Boni உட்பட பல அரசியல் மற்றும் திருச்சபைத் தலைவர்கள் அவரை வரவேற்றனர். அங்கு அமைக்கப்பட்டிருந்த சிவப்பு நிற சிரிய மேடையில் அரசுத் தலைவரும் அவரது மனைவியும் திருத்தந்தையும் அமர்ந்திருந்தனர். முதலில் அரசுத் தலைவர் வரவேற்புரையாற்றினார். பின்னர் திருத்தந்தையும் பெனின் நாட்டுக்கானத் தனது முதல் உரையை வழங்கினார்.
இந்த விமான நிலைய வரவேற்புக்குப் பின்னர் Cotonou இரக்கத்தின் அன்னை மரியா பேராலயம் சென்று விசுவாசிகளுக்கு உரையாற்றுவது பயணத்திட்டத்தில் குறிக்கப்பட்டுள்ளது. இந்த Cotonou நகரம் பெனின் நாட்டின் மிகப் பெரிய நகரமாகும். மேற்கு ஆப்ரிக்காவின் முக்கிய துறைமுக நகரங்களில் ஒன்றான இதன் வழியாக பிற மேற்கு ஆப்ரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி இறக்குமதி போக்குவரத்துக்கள் அதிகம் இடம் பெறுகின்றன. இதனால் இந்நகரம் சந்தை நகரம் எனவும் அழைக்கப்படுகின்றது. இந்நகரத்தில் 1960ம் ஆண்டில் எழுபதாயிரம் மக்களே இருந்தனர். ஆனால் இன்று சுமார் 12 இலட்சம் பேர் இருக்கின்றனர். Cotonou என்பதற்கு ஃபோன் மொழியில் மரண நதியின் வாய் என்று பொருள். 19ம் நூற்றாண்டில் ஒரு சிறிய மீன்பிடி கிராமமாக இருந்த இந்நகரத்தில் ஆப்ரிக்க அடிமை வியாபாரமும் பெருமளவில் நடைபெற்றது.
சகோதரத்துவம், நீதி, வேலை என்ற விருதுவாக்கைக் கொண்ட பெனின் நாட்டுக்குத் திருப்பயணத்தைத் தொடங்கிய போதே திருத்தந்தை தான் கடந்து சென்ற டூனிஸ், அல்ஜீரியா, மாலி, நைஜர், புர்க்கினா ஃபாசோ, கானா, இன்னும் இத்தாலி ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு வாழ்த்துத் தந்திகளையும் அனுப்பினார். இத்தாலிய அரசுத் தலைவர் Giorgio Napolitano திருத்தந்தையின் செய்திக்கு நன்றி தெரிவித்துப் பதில் செய்தி அனுப்பியுள்ளார். திருத்தந்தையின் இப்பயணம் நீதி மற்றும் அமைதியின் அடையாளமாக இருக்கின்றது. ஆப்ரிக்காவில் ஒப்புரவும் நீதியும் அமைதியும் ஏற்படுவதற்கு உழைக்கும் திருச்சபை மற்றும் சர்வதேச சமுதாயத்துடன் இத்தாலியும் சேர்ந்து உழைக்கின்றது என்று அதில் Napolitano குறிப்பிட்டுள்ளார்.
“திருத்தந்தையின் இப்பயணம் ஆப்ரிக்காவுக்கு ஓர் ஆசீர்வாதம்” என்ற உணர்வில் பெனின் மக்கள் திருத்தந்தையை வரவேற்கின்றனர். இப்பயணம் அக்கண்டத்தின் மக்களுக்கு நல்ல ஆசீர்வாதமாக அமையச் செபிப்போம்.








All the contents on this site are copyrighted ©.