2011-11-17 14:44:53

நவம்பர் 18 வாழ்ந்தவர் வழியில்.... நீல்ஸ் ஹென்ரிக் டேவிட் போர்


நீல்ஸ் ஹென்ரிக் டேவிட் போர் (Niels Henrik David Bohr) என்பவர் இயற்பியல் துறையில், குறிப்பாக அணுவியலில், அடிப்படை கருத்தாக்கங்கள் தந்த புகழ்மிக்க டென்மார்க் அறிவியலாளர். இவர் இயற்பியலுக்காக 1922 ம் ஆண்டில் நொபெல் விருது பெற்றார். இருபதாம் நூற்றாண்டின் புகழ்மிக்க பல இயற்பியல் அறிஞர்களுக்கு வழிகாட்டியாகவும், தான் வாழ்ந்த டென்மார்க்கின் கோப்பன்ஹாகனில் (Copenhagen) பல அறிஞர்களோடு அறிவியல் கூட்டாய்வாளராகவும் இருந்தார். ஐன்ஸ்டீனுடன் இவர் நிகழ்த்திய குவாண்டம் கருத்தியம் பற்றிய கருத்துப்போர் புகழ்பெற்றது. டென்மார்க் நாட்டு கோப்பன்ஹாகனில் 1885 ம் ஆண்டு அக்டோபர் 7ம் நாளன்று பிறந்த இவர், இருபதாம் நூற்றாண்டில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய மாபெரும் அறிவியலாளர்களில் ஒருவராக அறியப்படுகின்றார். நீல்ஸ் போரின் தந்தை கிறிஸ்டியன் போர், லூத்தரன் கிறித்தவ சபையின் போதகராக இருந்தார். இவரின் தாய் எல்லென் ஆட்லர் போர் செல்வாக்கு மிக்க செல்வந்த யூதக் குடும்பத்தில் பிறந்தவர். நீல்ஸ் போரின் தம்பி ஹெரால்டு போர் (Harald Bohr), கணிதவியளாலராகவும், டென்மார்க்கின் தேசிய கால்பந்தாட்ட வீரராகவும் இருந்தார். நீல்சு போரும் கால்பந்தாட்ட விளையாட்டுக்காரர் ஆவார். நீல்ஸ் போர் முதலில் 1903ம் ஆண்டில் கோப்பன்ஹாகன் பல்கலைக்கழகத்தில் மெய்யியல், கணிதவியல் பட்டப்படிப்பு படிக்க பதிவு செய்திருந்தார். ஆனால் 1905 ம் ஆண்டில் டென்மார்க் அறிவியல் உயர்கல்வி நிறுவனம் (Danish Academy of Sciences and Letters) அறிவித்திருந்த தங்கப்பதக்கப் போட்டியில் கலந்து கொள்வதற்காக, தன் தந்தையின் ஆய்வகத்தில், நீர்மப் பரப்பின் விசை பற்றிப் பல செய்முறை ஆய்வுகள் செய்தார். அதன் பயனாக நீல்ஸ் எழுதிய அறிவியல் கட்டுரை அப்பரிசைப் பெற்றது. இதுவே இவர் மெய்யியல் படிப்பை விட்டு இயற்பியல் துறையைத் தேர்ந்து எடுத்துக்கொள்ள வழி வகுத்தது. பிறகு புகழ்பெற்ற கிறிஸ்டியன் கிறிஸ்டியான்சென் (Christian Christiansen) அவர்களின் வழிகாட்டலில் 1911 ம் ஆண்டில் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்றார். பின்னர் மேல்முனைவர் ஆய்வுப் பயிற்சிக்கு கேம்பிரிட்சில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் இருந்த புகழ்பெற்ற ஜே.ஜே. தாம்சன் (J.J.Thomson) அவர்களின் வழிகாட்டலில் ஆய்வுகள் செய்தார். பின்னர் இங்கிலாந்தில் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் எர்னஸ்ட் ரூத்தர்ஃபோர்டு அவர்களிடம் பயின்றார். ரூத்தர்ஃபோர்டு அவர்களின் கருத்தியல் கொள்கைகளின் அடிப்படையில் அணுக்களின் உள்ளே இருக்கும் எலக்ட்ரான்கள் கருவைச் சுற்றிவரும் அமைப்பை நீல்ஸ் முதன்முதலாக 1913 ம் ஆண்டில் ஒப்புரு (போர் மாடல்)என்னும் கொள்கையாக முன்வைத்தார். நீல்ஸ் போர்தான் முதன் முதலாக ஓர் எதிர்மின்னி தன் உயர் ஆற்றல் வலயத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட ஆற்றலுடைய ஒளியன் ஒன்றை உமிழ்ந்துவிட்டுக் கீழ் ஆற்றல் வலையத்திற்குத் தாவ முடியும் என்று பகர்ந்தார். இது குவாண்ட்டம் கொள்கைக்கு அடிப்படையாக அமைந்த கருத்துருக்களில் ஒன்று.

நீல்ஸ் போர், 1962ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி காலமானார். நீல்ஸ் போர், மார்கரெட் நோர்லுண்ட் (Margrethe Nørlund) தம்பதியருக்கு ஆறு குழந்தைகள் பிறந்தனர். அவர்களில் ஒருவரான ஆகெ போர் (Aage Bohr), தனது தந்தையைப் போலவே 1975 ம் ஆண்டில் நொபெல் இயற்பியல் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.







All the contents on this site are copyrighted ©.