2011-11-17 15:12:15

திருத்தந்தையை அவமதிக்கும் வகையில் வெளியான விளம்பரத்திற்கு திருப்பீடத்தின் வன்மையான கண்டனம்


நவ.17,2011. வர்த்தகக் காரணங்களுக்காக திருத்தந்தையை அவமதிக்கும் வகையில் அவரது படத்தை விளம்பரம் ஒன்றில் பயன்படுத்தியுள்ள வர்த்தக நிறுவனத்தின் செயல்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை பெதெரிகோ லொம்பார்தி கூறினார்.
Benetton என்ற நிறுவனம் பல ஆண்டுகளாக சர்ச்சைகளை உருவாக்கும் வண்ணம் பல விளம்பரத் தொகுப்புக்களைப் பிரசுரித்து வருகின்றன. ஒவ்வொரு முறையும் இந்நிறுவனத்தின் விளம்பரங்கள் சர்ச்சைகளை எழுப்பி, பின்னர் அந்த விளம்பரங்களை இந்நிறுவனம் நீக்கியுள்ளது.
இப்புதனன்று இந்நிறுவனம் வெளியிட்ட ஒரு விளம்பரத் தொகுப்பில் பல்வேறு உலகத் தலைவர்களின் படங்கள் பிரச்சனைகளை எழுப்பும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்தொகுப்பில் திருத்தந்தையின் உருவமும் சர்ச்சைக்குரிய வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
திருத்தந்தையை இவ்வகையில் சித்தரித்திருப்பது முற்றிலும் கண்டனத்திற்குரியது என்று கூறிய திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை லொம்பார்தி, திருத்தந்தையையும் அவர்மீது மரியாதை கொண்டுள்ள கோடான கோடி மக்களையும் அவமதிக்கும் வண்ணம் அமைந்துள்ள இந்த விளம்பரம் மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்ற ஒரே வர்த்தக நோக்கத்தை மட்டும் கொண்டு செய்யப்பட்டுள்ளதென்பது கேவலமான ஒரு திட்டம் என்று கூறினார்.
மேலும் திருத்தந்தையின் உருவத்தைப் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு நிறுவனமும் தகுந்த முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற அளவில் சட்டப்பூர்வமான வழிகளை திருப்பீடச் செயலரான கர்தினால் தர்சிசியோ பெர்தோனே ஆராய்ந்து வருகிறார் என்றும் திருப்பீடப் பேச்சாளர் செய்தியாளர்களிடம் கூறினார்.
திருப்பீடம் வெளியிட்ட இந்த கண்டனத்தை அடுத்து, Benetton நிறுவனம் திருத்தந்தையைத் தவறாகச் சித்தரித்துள்ள படத்தை தங்கள் விளம்பரத் தொகுப்பிலிருந்து நீக்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.