2011-11-17 15:12:28

ஆப்ரிக்காவில் கடவுள் பக்தியை வளர்க்கும் வகையில் திருத்தந்தையின் திருப்பயணம் அமையும் - வத்திக்கான் அதிகாரி


நவ.17,2011. கடவுள் பக்தியற்ற ஒரு கலாச்சாரத்தை ஆப்ரிக்க மக்கள் மீது திணித்து வரும் மேற்கத்திய நாடுகளின் போக்கிற்கு ஒரு மாற்றாக மீண்டும் அந்நாட்டில் கடவுள் பக்தியை வளர்க்கும் வகையில் திருத்தந்தையின் திருப்பயணம் அமையும் என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
இவ்வெள்ளி முதல் ஞாயிறு முடிய ஆப்ரிக்காவின் பெனின் நாட்டில் திருத்தந்தை மேற்கொள்ளும் பயணம் குறித்து இப்புதனன்று பேசிய வத்திக்கான் பாப்பிறை கலாச்சாரக் கழகத்தின் செயலரான ஆயர் Barthélemy Adoukonou, மேற்கத்திய நாடுகள் காட்டும் தவறான பாதையை சீரமைக்கும் ஒரு வாய்ப்பை திருத்தந்தையின் திருப்பயணம் ஆப்ரிக்க மக்களுக்குத் தரும் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்டார்.
பெனின் நாட்டின் குடிமகன் என்ற முறையிலும், Rosenburg பல்கலைக்கழகத்தில் திருத்தந்தை பேராசிரியராகப் பணியாற்றியபோது அவரது மாணவர் என்ற முறையிலும் தான் இந்த நம்பிக்கையை வெளியிடுவதாக ஆயர் Adoukonou கூறினார்.
ஆப்ரிக்க நாட்டின் கலாச்சாரம், ஆன்மீகம் ஆகியவை உலகத்தின் ஆன்மீக மூச்சு என்று 2009ம் ஆண்டு உரோம் நகரில் நடைபெற்ற ஆப்ரிக்க ஆயர்களின் சிறப்பு மாமன்றத்தின்போது திருத்தந்தை கூறியதைச் சுட்டிக் காட்டிய ஆயர் Adoukonou, திருத்தந்தையின் இத்திருப்பயணம் இந்தக் கலாச்சாரத்தையும் ஆன்மீக பாரம்பரியத்தையும் மீண்டும் விழித்தெழச் செய்யும் என்ற தன் நம்பிக்கையை வெளியிட்டார்.
கர்தினால் Bernardin Gantinம், திருத்தந்தையும் 25 ஆண்டுகள் திருப்பீடத்தில் இணைந்து உழைத்தனர் என்பதைச் சுட்டிக் காட்டிய ஆயர் Adoukonou, கர்தினால் Gantinன் கல்லறைக்குத் திருத்தந்தை செல்வது அவர்கள் இருவருக்கும் இடையே உருவாகியிருந்த ஆழ்ந்த நட்பைக் காட்டுகிறது என்றார்.








All the contents on this site are copyrighted ©.