2011-11-16 15:36:54

பார்வைக் குறைவினால் படிக்கும் வாய்ப்புக்களை இழந்துள்ள 2 கோடியே 30 இலட்சம் குழந்தைகள்


நவ.16,2011. உலகில் குறைந்தது 2 கோடியே 30 இலட்சம் குழந்தைகள் பார்வைக் குறைவினால் படிக்கும் வாய்ப்புக்களை இழந்துள்ளனர் என்று Sightsavers என்ற ஒரு பிறரன்பு நிறுவனம் கூறியுள்ளது.
2015ம் ஆண்டுக்குள் உலகின் அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி என்ற மில்லேன்னிய இலக்கை அடைய பெரும் தடையாக உள்ளது பார்வை இழந்தோர் கல்வி பெறாமல் போவதே என்று பார்வை இழந்தோருக்கென உலகின் பல நாடுகளில் உழைத்து வரும் பிறரன்பு அமைப்பான Sightsavers கூறுகிறது.
உடல் அளவில் உள்ள இந்த குறைபாட்டை பல நாடுகளில் ஒரு அவமானமாகக் கருதுவதால், கலாச்சார வழியிலும் மக்கள் இந்த குறைபாட்டை நீக்கும் விழிப்புணர்வைப் பெற வேண்டும் என்று இந்நிறுவனம் வலியுறுத்துகிறது.
வளர்ந்து வரும் நாடுகள் பலவற்றில் பார்வை இழந்த குழந்தைகளில், 1 முதல் 3 விழுக்காடு குழந்தைகளே கல்வியறிவு பெறுகின்றனர் என்று இவ்வறிக்கையை தொகுத்த Sunit Bagree கூறினார்.
பல நாடுகளில் பார்வை இழந்தக் குழந்தையை கடவுள் தங்களுக்கு தந்த ஒரு தண்டனை என்று பெற்றோர் தீர்மானிப்பதால், அக்குழந்தையை கண்காணிக்காமல் விட்டுவிடும் ஆபத்தும் உள்ளது என்று Bagree சுட்டிக் காட்டினார்.
மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கென உருவாக்கப்படும் பள்ளிகளில் கல்வி கற்க அதிகச் செலவாகிறதென்பதும் இக்குழந்தைகள் கல்வி கற்க முடியாமல் போவதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.