2011-11-16 15:47:05

நவம்பர் 17. வாழ்ந்தவர் வழியில்........ கமில் சுவெலபில்


1927ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி செக் நாட்டின் பிராக் நகரில் பிறந்த கமில் வாக்லவ் சுவெலபில், தமிழுக்குச் சிறந்த தொண்டாற்றிய மொழியியல் வல்லுநர்களில் ஒருவர். தமிழ் மற்றும் தமிழர் பற்றிப் பிறமொழியினருக்குச் சிறப்பாக அறிமுகம் செய்துவைத்தவர்களில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு.
சமஸ்கிருதத்தில் 1952ம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் திராவிட மொழியியலில் 1959ம் ஆண்டில் இரண்டாவது முனைவர் பட்டத்தையும் பெற்றார். 1952 முதல் 1970 வரை செக்கோசுலவாக்கியாவில் அமைந்துள்ள கீழையியல் துறையில் தமிழ் திராவிட மொழியியல் பிரிவில் ஆய்வாளராகப் பணிபுரிந்தார். கிரேக்கம், இலத்தீன், செர்மானியம், ஆங்கிலம், உருசியன், சமஸ்கிருதம், தமிழ் முதலிய மொழிகள் நன்கு தெரியும். மலையாளம், இந்தி, பிரெஞ்சு, இத்தாலியம், போலந்து மொழி உள்ளிட்ட மொழிகளையும் அறிவார்.
செக் நாட்டில் தூதரகத்தில் பணிபுரிந்த தமிழ் அன்பர் ஒருவர் வழியாக தமிழ் கற்கத் தொடங்கிய கமில் வானொலி வழியாகவும் நூல்கள் வழியாகவும் தமிழ் படிக்கத் தொடங்கினார். தென்னிந்தியாவிற்குப் பலமுறை களப்பணி ஆய்வுக்காக வந்துள்ளார். திராவிட மொழியியல், சங்க இலக்கியம் பற்றி விரிவாக ஆங்கிலத்தில் எழுதியவர். தமிழ் வழக்குச் சொற்கள் பற்றியும் எழுதியுள்ளார்.
திராவிட மொழிகளின் ஒப்பீட்டு ஒலியியல் (Comparative Phonology), நீலகிரிப் பழங்குடி மக்கள் மொழி (இருளர் மொழி) உள்ளிட்ட நூல்கள் இவருக்கு நிலைத்த புகழைப் பெற்றுத் தந்தன.
தமிழ்மொழியை நன்கு படிக்கவும் எழுதவுமான ஆற்றல் பெற்றவர். தமிழின் மிகப்பெரும் இலக்கண நூலான தொல்காப்பியத்தை மொழிபெயர்க்கும் அளவிற்கு இவருக்குத் தமிழ்ப்புலமையும் ஆங்கிலப்புலமையும் இருந்தது.
தமிழ் நூல்கள் பலவற்றை ஆங்கிலத்திற்கும் செக்மொழிக்கும் பெயர்த்துள்ளார்.
நூல்கள்,கட்டுரைகள்,மொழிபெயர்ப்புகள் என இதுவரை 500க்கு மேற்பட்ட படைப்புகளை வழங்கியவர்.
இவர் 2009ம் ஆண்டு சனவரி 17ம் தேதி பிரான்சில் காலமானார்.








All the contents on this site are copyrighted ©.