2011-11-16 15:36:25

கிறிஸ்துவைத் தவறான வகையில் சித்தரித்துள்ள இந்தித் திரைப்படத்தின் சுவரொட்டிகள்


நவ.16,2011. இந்தியாவில் வருகிற வெள்ளியன்று வெளியாகும் என்ற ஓர் இந்தித் திரைப்படத்தின் சுவரொட்டிகள் கிறிஸ்துவைத் தவறான வகையில் சித்தரித்துள்ளதால், பிரச்சனைகளை எழுப்பியுள்ளன.
Kaun Hai Wahan? என்ற திரைப்படத்தின் சுவரொட்டியில் கிறிஸ்து தலைகீழாக சிலுவையில் தொங்குவதுபோலும், அவருக்குப் பின்பக்கம் கத்திகள் குத்தப்பட்டிருப்பது போலும் அமைந்துள்ள இந்தச் சுவரொட்டிகள் கிறிஸ்தவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளன என்று கிறிஸ்தவத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் இந்தச் சுவரொட்டிகள் குறித்து மன்னிப்பு கேட்டுள்ளனர் என்றாலும், இவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது என்று கத்தோலிக்கர் அவைப் பொதுச் செயலர் ஜோசப் டயஸ் கூறினார்.
வழக்கு தொடர்வதன் ஒரு முக்கிய நோக்கமே, எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நிகழாது தடுக்கப்பட வேண்டும் என்பதே என்று டயஸ் விளக்கினார்.
கிறிஸ்துவையும், கிறிஸ்தவ விசுவாசம், வாழ்வுமுறை ஆகியவற்றை கேலி செய்யும் போக்கு அண்மைக் காலங்களில் அதிகமாகியுள்ளது என்று கத்தோலிக்க ஆயர் பேரவையின் அதிகாரப்பூர்வப் பேச்சாளர் அருள்தந்தை பாபு ஜோசப் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.