2011-11-15 14:31:10

விவிலியத் தேடல் - திருப்பாடல் 91 பாகம் 2


RealAudioMP3 'தீங்கு உமக்கு நேரிடாது; வாதை உம் கூடாரத்தை நெருங்காது' இது தான் பழைய ஏற்பாட்டிலிருந்து நான் எண்ணற்ற முறையில் பயன்படுத்தியச் சொற்றொடர். வீடுகளைச் சந்தித்துச் செபிக்க வாய்ப்பு கிடைத்த பொழுதெல்லாம், மறவாமல் பயன்படுத்திய விவிலியச் சொற்றொடர். என்னை அறியாமல் பயன்படுத்தியதல்ல. மாறாக பல்வேறு நேரங்களில் எனக்கு வரவிருந்த தீமைகளிலிருந்து இறைவன் என்னைக் காப்பாற்றினார் என்ற ஆழமான வாழ்வு அனுபவத்திலிருந்து பயன்படுத்தப்பட்டச் சொற்றொடர். இறைவன் எப்போதும் என்னோடு இருக்கிறார், அவரது கரம் என்மேல் உள்ளது என உணர்ந்ததின் வெளிப்பாடுதான் இச்சொற்றொடரை எண்ணற்ற முறையில் நான் பயன்படுத்தக் காரணம்.

அன்பு நேயர்களே! இன்றும் நாம் சிந்திப்பது திருப்பாடல் 91. இத்திருப்பாடல் இஸ்ரயேல் மக்களால் உறங்கச்செல்வதற்கு முன் பயன்படுத்தப்பட்டது. இரவு முழுவதும் தங்களைப் பாதுகாக்க வேண்டுமென மன்றாடி செபிக்கப்பட்டத் திருப்பாடல். இறைவன் கைகளில் தங்களை முழுவதுமாக ஒப்படைத்து அவரிடம் புகலிடம் தேடி செபிக்கின்ற திருப்பாடல். கத்தோலிக்கத் திருச்சபையில் தவக்காலத்தைத் துவங்கும் போதும் அல்லது தியானத்தைத் துவங்கும்போதும் இறைபராமரிப்பு நம்மை வழிநடத்த வேண்டுமென செபிக்க இத்திருப்பாடலைப் பயன்படுத்துகிறோம். யாவே இறைவனில் அடைக்கலம் புகுவது பற்றி கடந்த வாரம் சிந்தித்தோம். இன்று அடுத்த கட்டத்திற்குச் செல்வோம்.
இத்திருப்பாடல் யாருக்கு எழுதப்பட்டது, எதற்கு எழுதப்பட்டது, எழுதப்பட்டதற்கான நோக்கம் என்ன? என சிந்திக்கின்றபோது எழுந்த சிந்தனையைத்தான் இன்று பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். யாவே இறைவன் தங்களுக்குச் செய்த அதிசயங்களையும், வல்லச்செயல்களையும், அதனால் தாங்கள் அடைந்த நன்மைகளையும் பிறருக்கு எடுத்துச் சொல்லி, “நீங்களும் அவரை நம்புங்கள், அவரனைத்தையும் பார்த்துக்கொள்வார்” என அறிவுறுத்தி, யாவே இறைவனில் பிறரையும் நம்பிக்கைப் பெறச்செய்வதுதான் இத்திருப்பாடலின் நோக்கம் எனக் கருதுகிறேன்.

பிறருக்கு நம்பிக்கை ஊட்ட இத்திருப்பாடலில் இருவேறு வழிகள் கையாளப்பட்டிருக்கின்றன. அவற்றில் முதலில் நான் சொல்ல நினைப்பது: “யாவே இறைவன் எங்களுக்கு இவ்வாறெல்லாம் செய்தார்” என தங்களது அனுபவங்களையெல்லாம் எடுத்துச் சொல்லி நம்பிக்கை தருவது. தன்னையே முழுமையாக நம்பி அடைக்கலம் புகுந்த இஸ்ரயேல் மக்களை, இருளில் உலவும் கொள்ளை நோயிலிருந்து விடுவித்தார், நண்பகலில் தாக்கும் கொடிய வாதைகளிலிருந்து விடுவித்தார், 16,000 பேர் தாக்கிய சமயத்திலும் பாதுகாத்தார். பல்வேறு தீமைகளிலிருந்து காப்பாற்றினார். இவற்றையெல்லாம் யாவே இறைவன் ஒருமுறை மட்டுமே செய்திருந்தால், இஸ்ரயேல் மக்களை பெரிதளவு பாதித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இறைவன் வாழ்நாள் முழுவதும் அவர்களோடு இருந்து, கோழி தன் குஞ்சுகளை அதன் சிறகுகளில் வைத்து காப்பது போல பாதுகாத்து வந்தார். எனவே யாவே இறைவன் தங்களை உள்ளங்கையில் வைத்து தாங்குகிறார் என்பதை இஸ்ரயேல் மக்கள் நன்கு உணர்ந்திருந்தனர். உம் கால் கல்லின்மேல் மோதாதபடி, அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக்கொள்வர். (திருப்பாடல் 91:12)

இது ஒர் அனுபவப்பகிர்வு என்று வெறுமனே சொல்லிவிடமுடியாது. அதற்கும் ஒருபடி மேலே சென்று, நம்பிக்கைப் பகிர்வு எனவும், நற்செய்தி அறிவிப்பு எனவும் சொல்வதுதான் சரியெனக் கருதுகிறேன்.
“இறைவனை நம்பினேன். அவரில் அடைக்கலம் புகுந்தேன். அவர் எனக்கு எல்லாம் செய்தார்” என்று சொல்வது அனுபவப்பகிர்வு. “எனக்கு இப்படியெல்லாம் செய்த அவரை நீங்களும் நம்புங்கள், அவரிடம் புகலிடம் தேடுங்கள், உங்களுக்குத் தேவையானதைச் செய்வார்” எனச் சொல்வது, இறைவன் மீது அவர்கள் வைத்த அசைக்கமுடியாத நம்பிக்கையைப் பறைச்சாற்றுகிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்பு தொண்டையிலிருக்கும் குரல் வளைகள் (Vocal Chords) இரண்டிற்குமிடையே ஏற்பட்ட சிறிய இடைவெளி காரணமாக ஒரு வார்த்தை பேசினால் கூட எனக்கு தாங்கமுடியாத வலி ஏற்பட்டது. நான்கு மாதங்களாக பல மருத்துவர்களிடம் சென்றேன். ஒரு அருட்ப்பணியாளருக்கு மூலதனமே பேச்சுதான். முதலுக்கே மோசம் என்பதுபோல ஆகிவிட்டதே என கவலைப்பட்ட சமயங்களிலே, உறவினர்கள், நண்பர்கள் ஆறுதல் சொன்னார்கள், நம்பிக்கை தந்தார்கள். சிலர் பேசும்போது, “எனக்கும் இப்படித்தான் தொண்டையிலே தீராத வலி இருந்தது. வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா எண்ணெய் எடுத்து தினமும் உறங்கச் செல்வதற்கு முன் தொண்டையில் தேய்த்துவிட்டு படுத்தேன். சில நாட்களில் வலி இருந்த இடம் தெரியாமல் போனது. எனவே, நீயும் மாதா எண்ணெய் எடுத்து தினமும் உறங்கச் செல்வதற்கு முன் தொண்டையில் தேய்த்துவிட்டு படு, கண்டிப்பாக மாதா குணப்படுத்துவார்கள்” என்று நம்பிக்கை தந்தார்கள். அவர்கள் சொன்னதெல்லாம் சாதாரண அனுபவப் பகிர்வு மட்டுமல்ல. மாறாக, ஆரோக்கிய அன்னை மீது அவர்கள் வைத்திருந்த நம்பிக்கையைப் பகிர்ந்து கொண்டனர். அதைக் கேட்ட எனக்கும் அவர்கள் சொன்னது நம்பிக்கை தருவதாக இருந்தது.

இதைப்போன்று பிறருக்கு நம்பிக்கைத் தரக்கூடிய நம்பிக்கைப் பகிர்வின் தொகுப்புத்தான் இத்திருப்பாடல். இதைத்தான் இத்திருப்பாடலின் 3, 4, 6, 7, 10வது சொற்றொடர்கள் பிரதிபலிக்கின்றன.
ஏனெனில், ஆண்டவர் உம்மை வேடரின் கண்ணியினின்றும் கொன்றழிக்கும் கொள்ளை நோயினின்றும் தப்புவிப்பார்.
அவர் தம் சிறகுகளால் உம்மை அரவணைப்பார்; அவர்தம் இறக்கைகளின்கீழ் நீர் புகலிடம் காண்பீர்; அவரது உண்மையே கேடயமும் கவசமும் ஆகும்.
இருளில் உலவும் கொள்ளை நோய்க்கும் நண்பகலில் தாக்கும் கொடிய வாதைக்கும் நீர் அஞ்சமாட்டீர்.
உம் பக்கம் ஆயிரம்போர் வீழ்ந்தாலும், உம் வலப்புறம் பதினாயிரம் பேர் தாக்கினாலும், எதுவும் உம்மை அணுகாது.
ஆகவே, தீங்கு உமக்கு நேரிடாது; வாதை உம் கூடாரத்தை நெருங்காது.

தங்களுக்குச் செய்த இறைவன், தன்னை நம்பிவரும் பிறருக்கும் செய்வார் என்ற நம்பிக்கையைப் பிறரில் வளர்ப்பது இஸ்ரயேல் மக்களுக்கு இருந்த மிகச்சிறந்த குணம்.
பிறருக்கு நம்பிக்கை ஊட்டுவதற்கான இரண்டாவது வழிமுறை என்னவெனில், “என்னிடம் அடைக்கலம் புகுந்தவர்களை நான் காப்பேன்” என இறைவனே உறுதியளிப்பதாகச் சொல்வது. அவரே சொல்லி விட்டார். எனவே கண்டிப்பாக நம்மைக் காப்பார் என்ற நம்பிக்கையைக் கேட்பவர் மனதில் ஏற்படுத்துவது. 14, 15 மற்றும் 16ம் சொற்றொடர்கள்:
அவர்கள் என்மீது அன்புகூர்ந்ததால், அவர்களை விடுவிப்பேன்; அவர்கள் என் பெயரை அறிந்துள்ளதால், அவர்களைப் பாதுகாப்பேன்;
அவர்கள் என்னை நோக்கி மன்றாடும்போது, அவர்களுக்குப் பதிலளிப்பேன்; அவர்களது துன்பத்தில் அவர்களோடு இருப்பேன்; அவர்களைத் தப்புவித்து அவர்களைப் பெருமைப்படுத்துவேன்;
நீடிய ஆயுளால் அவர்களுக்கு நிறைவளிப்பேன்; என் மீட்பை அவர்களுக்கு வெளிப்படுத்துவேன்.

இச்சொற்றொடர்கள் சொல்வதெல்லாம் என்னை நம்பி அடைக்கலம் புகுகின்றவர்களை நான் காப்பேன் என இறைவனே பொறுப்பேற்கிறார். இறைவனே பொறுப்பபேற்கிறார் என்பது கேட்பவரின் நம்பிக்கையை அதிகரிக்கிறது. இறைவனில் நம்பிக்கைப் பெறத் தூண்டுகிறது.

எனது 5 வருட குருத்துவ வாழ்விலே சிலர் என்னிடம் வந்து, “கடந்த சில மாதங்களாக அல்லது வாரங்களாக ஒரு கருத்துக்காக செபித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் என்னுடைய செபத்தை இறைவன் இன்னும் கேட்கவில்லை. எனக்குக் கோபமாக வருகிறது” என்றும், இன்னும் சிலர் “என் வாழ்வு முழுவதுமே கஷ்டம் தான். எனக்கு மட்டும் கடவுள் ஏன் இப்படி செய்கிறார்? இதனால் கடவுளின் மேல் வெறுப்பாக இருக்கிறது சில சமயங்களில் கடவுளின் திருநாமத்தை வீணாகச் சொல்லியிருக்கிறேன்” என்றும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்போது நான் அவர்களிடம், “உங்களுக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து இறைவன் உங்களுக்கு எவ்வளவு நன்மைகள் செய்திருப்பார்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நிறைய செய்திருக்கிறார்” எனச் சொல்லி அடுக்கிக் கொண்டே சென்றார்கள். பிறகு நான் சொன்னேன்: “இதே போன்று சிறுவயதிலிருந்து இறைவன் உங்களுக்கு செய்த எல்லாவற்றையும் நினைவுபடுத்திப் பட்டியலிடுங்கள். அப்போது இறைவன் மீது கோபம் வராது. மாறாக நன்றி சொல்லத்தான் தோன்றும். இப்போதும் இறைவன் உங்களுக்கு செவிசாய்க்கத் தாமதிருக்கிறார் என்றால் அதுவும் உங்கள் நலனுக்காகவே” எனச்சொல்லி அனுப்பியிருக்கிறேன்.

அன்பார்ந்தவர்களே! நம்முடைய சிறு வயதிலிருந்து இறைவன் நமக்குச் செய்த நன்மைகளையெல்லாம் நினைத்துப் பார்ப்போம். நாமும் பட்டியலிடுவோம். நம் இறைவனை நினைத்துப் பெருமைப்படுவோம். தந்தையாம் இறைவனுக்கு நன்றி கூறுவோம். இந்த அனுபவங்களையெல்லாம் வெறுமனே அனுபவப் பகிர்வாக மட்டுமல்லாமல் நம்பிக்கைப் பகிர்வாக எடுத்துரைப்போம். நம்முடைய நம்பிக்கைப் பகிர்வானது பிறருக்கும் நம்பிக்கை தரட்டும்.








All the contents on this site are copyrighted ©.