2011-11-14 15:21:17

வாரம் ஓர் அலசல் – அனைத்துலக சகிப்புத்தன்மை தினம்


நவ.14,2011. 11.11.11 அதாவது 2011ம் ஆண்டு 11ம் மாதம் 11ம் தேதி. இந்த அபூர்வ நாளன்று உலகில் பரவலாக பலரும் பல நல்ல முயற்சிகளை மேற்கொண்டனர். ஐக்கிய நாடுகள் நிறுவனமும் 120க்கு மேற்பட்ட நாடுகளில் இருபதாயிரத்துக்கு அதிகமான ஒளிப்பதிவாளர்களைக் கொண்டு அன்றைய ஒரு நாளின் நிகழ்வுகளைப் படமாக்கி ஓர் ஆவணப்படம் தயாரித்துள்ளது. உலகில் ஒரு பகுதியில் வாழும் மக்கள் அடுத்த பகுதியில் வாழும் மக்களைப் பற்றி அறிந்து கொள்வதற்கு உதவியாக 2008ம் ஆண்டிலிருந்து இத்தகைய ஒரு முயற்சி தொடங்கப்பட்டுள்ளதாக ஐ.நா.அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த 11.11.11 என்ற அபூர்வ நாளான கடந்த வெள்ளிக்கிழமை உலக சாதனை படைக்கும் விதமாக சீனாவில் மட்டும் ஆயிரக்கணக்கானத் திருமணங்கள் நடைபெற்றன. கோலாலம்பூரில் உள்ள சீனர்களின் மிகப்பெரிய கோவிலில் ஒரே நேரத்தில் 400 திருமணங்கள் நடைபெற்றன. இதில் திருமணம் செய்தவர்களின் வயது வரம்பு 18 முதல் 47 வரை இருந்தது. இந்தக் கோவிலில் புதிதாகத் திருமணம் செய்தவர்களுக்கு இரண்டு கார்களும், தேனிலவுப் பயணத்திற்கானத் தொகுப்புகள் மற்றும் பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட்டன என்று இணையதளத்தில் வாசித்தோம்.
இப்படி உலகமே கொண்டாடிய இந்த நாளில் மனதுக்கு வருத்தம் தரும் செய்திகளையும் நாம் வாசிக்க நேர்ந்தது. கடந்த வியாழனன்று ஆப்கானிஸ்தானில் பலரும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, பொதுவில் ஒரு விதவைத் தாயும் அவளது மகளும் கல்லால் எறியப்பட்டு பின்னர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் மத்தியில் உள்ள கஸ்னி பகுதியில் இளம் விதவை ஒருவரும் அவரது மகளும் வாழ்ந்து வந்த வீட்டுக்குள் ஆயுதங்களுடன் தடாலடியாக நுழைந்தவர்கள் அப்பெண்களை வீட்டை விட்டு வெளியில் இழுத்துப் போட்டு கல்லால் அடித்தும், பின்னர் துப்பாக்கியால் சுட்டும் சாகடித்துள்ளனர். இந்தப் பெண்கள் வேறு ஆண்களுடன் உறவு வைத்துள்ளதாக அவர்கள் மீது குற்றம் சாட்டியதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்பெண்களின் வீட்டுக்கு அருகில் இருந்தவர்கள் எவரும் ஆயுததாரிகளைத் தடுத்து நிறுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அப்பகுதியின் காவல்துறை தலைமை அதிகாரி அலுவலகத்துக்கும், ஆளுநரின் அலுவலகத்துக்கும், ஆப்கானிய உளவுத்துறையின் முக்கிய அலுவலகம் ஒன்றுக்கும் சில நூறு மீட்டர் தூரத்திலே இப்படி ஒரு கோரச் சம்பவம் நடந்துள்ளதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. திருமணத்துக்கு வெளியில் உறவு வைத்திருப்பவர்கள் பற்றித் தகவல் தரும்படி கஸ்னியின் மதத்தலைவர்கள் அண்மையில் சமயம் சார்ந்த ஆணைகளைப் பிறப்பித்திருந்தனர் என்றும் ஓர் ஊடகச் செய்தி கூறுகின்றது.
ஆப்ரிக்க நாடான தென் சூடானுக்கு அருகிலுள்ள அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட குண்டுவீச்சு தாக்குதல் பற்றிய செய்திகளும் இதே 11.11.11 என்ற அந்த அபூர்வ நாளில் வெளியாகின. இது “கடுமையானச் சர்வதேச அளவிலான குற்றமாகும்”. இது குறித்து உடனடியாக விசாரணைகள் இடம் பெற வேண்டுமென்று ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மனித உரிமைகள் ஆணையத்தின் உயர் அதிகாரி Hervé Ladsous வலியுறுத்தியுள்ளார். Yida அகதிகள் முகாமில் இருபதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இந்த மக்கள் வன்முறைக்குப் பயந்து இம்முகாமில் இருப்பவர்கள். இந்த முகாமுக்கு அருகில் குறைந்தது இரண்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டன என்று ஐ.நா.அதிகாரிகள் கூறுகின்றனர்.
RealAudioMP3 உலகில் சில இடங்களில் இவ்வாறான நிகழ்ச்சிகள் நடப்பது நமக்குப் புதிது இல்லை என்றாலும் இவை பல கேள்விகளை நம்முள் எழுப்புகின்றன. இந்த வன்முறைச் செயல்களைச் செய்பவர்களை மனிதர் என்று அழைக்கலாமா? என்று மனம் கேட்கிறது. மனிதர் என்றாலே அவர்கல் அன்பு, கருணை, பாசம், மன்னிப்பு, ஒப்புரவு, பொறுமை, சகிப்பு போன்ற பண்புகளைக் கொண்டிருக்க வேண்டியவர்கள். உலகின் அனைத்து மதங்களுமே இதைத்தான் போதிக்கின்றன. திருத்தந்தை 16ம் பெனடிக்டும், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில், “நமது இவ்வுலக வாழ்வு நிலையற்றது, எனவே இதனை ஒரு பயணமாக நினைத்து வாழ வேண்டும். நம் ஆண்டவர் ஒவ்வொருவருக்கும் தமது அன்பையும், பிறரன்பையும் கொடையாகக் கொடுத்திருக்கிறார். எனவே நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் இந்தப் பிறரன்பை வெளிப்படுத்த வேண்டும். உண்மையான பிறரன்பானது, நண்பர்களையும் பகைவர்களையும் ஒரேமாதிரி அன்பு செய்வதாகும் என்று புனித பெரிய கிரகரி சொல்லியிருக்கிறார்” என்றும் திருத்தந்தை கூறினார்.
RealAudioMP3 ஆனால் இன்று அன்பும் அதற்கு அடிப்படையாக இருக்கும் சகிப்புத்தன்மையும் குறைந்து வருவதைக் கடந்த வாரத்தில் தென் சூடான் யீடா முகாமிலும் ஆப்கானிஸ்தானிலும் இடம் பெற்ற சம்பவங்கள் காட்டுகின்றன. உலகில் இந்தச் சகிப்புத்தன்மையை ஊக்குவிக்கும் நோக்கத்தில் ஐக்கிய நாடுகள் நிறுவனமும் நவம்பர் 16ம் தேதியை அனைத்துலக சகிப்புத்தன்மை தினமாகக் கடைபிடிக்கிறது. இந்தப் புதனன்று நிகழும் இந்நாளுக்கென செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், “ஒருவர் சகிப்புத்தன்மையைத் தனது வாழ்வில் கடைப்பிடிப்பது, முற்சார்பு எண்ணத்தையும் வெறுப்புணர்வையும் அகற்றுவதற்கு உதவும் என்று கூறியுள்ளார். இந்த நல்ல பண்பானது நம் ஒவ்வொருவரிலும் ஒவ்வொரு நாளும் வெளிப்பட வேண்டும்” எனவும் அவர் கேட்டுள்ளார்.
பொதுவாக ஒரு காரியம் நமது விருப்பத்திற்கு மாறாக நடக்கும்போது அதனைப் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை, சகித்துக் கொள்ள முடிவதில்லை. உடனே அந்தக் காரியத்தைச் செய்தவர் மீது கோபம் வருகிறது. அந்த ஆளுக்கு எதிராக எதிர்மறைச் சிந்தனைகள் உருவாகின்றன. அவை வன்முறைகளாக சிறிய, பெரிய அளவில் வெடிக்கின்றன. அந்த வன்முறை, சுடு சொல்லாகவும் இருக்கலாம், வன்செயலாகவும் இருக்கலாம். அதனால் இருதரப்பினரின் மனநிம்மதியும் அமைதியும் தொலைந்து விடுகின்றன. உடலையும் நோய்கள் தொற்றிக் கொள்கின்றன.
இன்று உலக அளவில் சுமார் 34 கோடியே 60 இலட்சம் பேர் சர்க்கரை நோய் என்று சொல்லப்படும் நீரழிவு நோயினால் தாக்கப்பட்டுள்ளார்கள். இதனைத் தடுக்கத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லையெனில் 2030ம் ஆண்டுக்குள் இவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரித்துள்ளது. மேலும், தமிழகத்தில் 8.2 விழுக்காடு நகர்ப்புறங்களிலும், 5.4 விழுக்காடு கிராமப்புறங்களிலும் இந்தச் சர்க்கரை நோயின் பாதிப்பு உள்ளது. சர்க்கரை நோயால் 70 விழுக்காடு இதயமும், 30 விழுக்காடு சிறுநீரகமும், 20 விழுக்காடு கை,கால்களும், 20 முதல் 60 விழுக்காடு நரம்பு மண்டலமும், 10 விழுக்காடு கண்களும் பாதிக்கப்படுகின்றன என ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. இஞ்ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்ட அனைத்துலக நீரழிவு நோய் தினத்திற்கென ஐ.நா.பொதுச் செயலர் வெளியிட்ட செய்தியிலும், வளரும் நாடுகளில் சுமார் 27 கோடியே 70 இலட்சம் பேர் நீரழிவு நோயுடன் வாழ்கின்றனர். இந்நோய், மாரடைப்பு, பக்கவாதங்கள், கண்பார்வையிழப்பு, சிறுநீரகக் கோளாறு, இறப்பு போன்ற பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றன. இந்நோயாளிகளுக்குப் போதுமான சிகிச்சை கிடைப்பதற்கு அரசுகள் உதவுமாறு அவர் கேட்டுள்ளார். திருத்தந்தை 16ம் பெனடிக்டும், இஞ்ஞாயிறு மூவேளை செபத்திற்குப் பின்னர் இவ்வுலக தினத்தை நினைவுகூர்ந்தார். இந்நோய் இளையோர் உட்பட பலரைப் பாதிக்கின்றது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நலவாழ்வுப் பணியில் வேலைசெய்வோர் மற்றும் தன்னார்வப் பணியாளர்க்காகத் தான் செபிப்பதாகக் கூறினார்.
RealAudioMP3 அன்பர்களே, மனதில் வன்முறை எண்ணங்களை விலக்கி அன்பையும் சகிப்புத்தன்மையையும் வளர்த்தால் நமது குடும்பங்களும் வேலை செய்யும் இடங்களும் நாடும் நலமடையும். நாம் சகித்துக் கொள்ளும் தன்மையை இழப்பதால் கோபமும் எரிச்சலும் வருகின்றன. மனத்தில் தேக்கி வைக்கப்படும் இந்த உணர்வுகள் தேவையில்லாத நேரங்களில் பீறிட்டு எழுகின்றன. நாற்காலியைப் பரபரவென இழுப்பது, சுவரில் எச்சில் துப்புவது, செருப்பை வேகமாகக் கழற்றி வீசுவது போன்ற சிறிய செயல்களில்கூட இவை வெளிப்படலாம். எனவே இவ்வகையான எதிர்மறை உணர்வுகளுக்குத் தீர்வு என்பது பிற எதிர்மறை உணர்வுகளாக இருக்க முடியாது. எப்படி நெருப்பை நெருப்பால் அணைக்க முடியும்?
புகழ் பெற்ற இத்தாலிய ஓவியர் லெயோனார்தோ த வின்ச்சி, இறுதி இரவுணவு ஓவியத்தை வரைந்து கொண்டிருந்த போது ஒருவர் மீது மிகுந்த கோபம் கொள்கிற சூழல் ஏற்பட்டதாம். அந்த ஆளை மிகக் கடுமையாகத் திட்டி விட்டு மீண்டும் வந்து கையில் தூரிகையை எடுத்தாராம். இயேசு கிறிஸ்துவை வரைகின்ற போது அவர் எவ்வளவு முயற்சி செய்தும் தனது ஓவியத் திறமையையெல்லாம் செலுத்தியும் அவரால் திருப்திகரமாக வரையவே முடியவில்லையாம். பலமுறை முயன்றும் தோல்வி கண்டாராம். அதனால் மிகவும் சோர்ந்து போன லெயோனார்தோ த வின்ச்சி, தான் திட்டிய ஆளைக் கூப்பிட்டுப் பழங்களையும் இனிப்புக்களையும் கொடுத்து அவரிடம் மன்னிப்புக் கேட்டாராம். அப்போது அந்த ஆளின் முகத்தில் சிரிப்பைப் பார்த்தாராம். அதனால் அந்த ஆளுக்குத் தன்மீது இருந்த கோபம் நீங்கியதையும் அவரது முகம் மலர்ந்து இருந்ததையும் கண்ட லெயோனார்தோ த வின்ச்சி, மீண்டும் தூரிகையை எடுத்து ஓவியத்தைத் தொடர்ந்தாராம். இயேசுவின் கருணையே உருவான முகம் அந்த ஓவியத்தில் அழகாக வெளிவந்ததாம். ஆம். அந்த இறுதி இரவு உணவு ஓவியம் இன்றும் உலகப் புகழ் பெற்ற ஓவியமாக திகழ்ந்து வருகிறது.
எனவே வாழ்க்கையில் அன்பையும் சகிப்புத்தன்மையையும் வளர்ப்போம். அப்போது நம்மைச் சுற்றியுள்ள இடங்களும் நம்மைச் சார்ந்த நபர்களும் அதே நல்ல உணர்வுகளில் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். ஒரு பெரியவர் சொன்னார் : “நல்ல மனநிலையுடன் தனது விருப்பங்களை அடைய விரும்புவனை எதுவும் தடுக்க முடியாது” என்று.








All the contents on this site are copyrighted ©.