2011-11-14 15:44:52

அரபு உலக அரசியல் நெருக்கடியில் மாம்பழக் கூழ் வியாபாரம் பாதிப்பு


நவ.14,2011. பல மத்தியகிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் மற்றும் நிலையற்றத் தன்மை காரணமாக தமிழகத்தில் மாம்பழம் சாகுபடி செய்யும் விவசாயிகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாக தமிழக விவசாயிகள் சங்கம் கூறுகிறது.
இந்தியாவிலேயே அதிகப்படியாக மாம்பழ உற்பத்தி மற்றும் ஏற்றுமதி செய்யும் மையங்களான கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி போன்ற பகுதிகளில் இதன் காரணமாக சுமார் ஒரு லட்சம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலர் இராம கவுண்டர் தெரிவித்ததாக BBC செய்தியொன்று கூறுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் 56 மாம்பழக் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளதாகவும், அவை ஆண்டு தோறும் 500 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் செய்யும் எனவும், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக தொழில் நொடித்து போகும் நிலை ஏற்படக்கூடும் என்கிறஅச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
தமிழகத்தின் தொழிற்சாலைகளில் தயாராகவுள்ள மாம்பழக் கூழை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவோ, அல்லது பிரச்சினைகளில் சிக்கியுள்ள அரசுகளிடம் பேசி ஏற்றுமதிகளுக்கு வழிசெய்து பிரச்சினைகளை தீர்க்கவோ அரச தரப்பில் போதிய ஆதரவு இல்லை எனவும, இது விவாசயிகளை மிகவும் கலக்கமடையச் செய்துள்ளது எனவும் தமிழநாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலர் சுட்டிக்காட்டுகிறார்.








All the contents on this site are copyrighted ©.