2011-11-12 15:34:20

ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் செய்தித் தாள்கள் பல குட்டி விளம்பரங்களைத் தாங்கி வரும். வேலைக்கு ஆட்கள் தேவை, மணமகன் அல்லது மணமகள் தேவை, வீட்டு மனை வாங்க விற்க என்று பல வகையில் இந்த விளம்பரங்கள் இருக்கும். 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் வெளியான ஒரு குட்டி விளம்பரத்தில் இவ்வரிகள் காணப்பட்டன:
"நீங்கள் தனிமையில் இருந்தாலோ, அல்லது உங்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் என்றாலோ தொலைபேசியில் என்னைக் கூப்பிடுங்கள். நான் ஒரு சக்கர நாற்காலியில் இருக்கிறேன். அதனால், நான் எங்கும் வெளியில் செல்வதில்லை. நாம் தேவைப்பட்ட நேரம் தொலைபேசியில் பேசலாம். கூப்பிடுங்கள்." என்று அந்த விளம்பர வரிகள் இருந்தன. இந்த வரிகளை விளம்பரப்படுத்தியவர் நான்சி என்ற இளவயது பெண். இந்த விளம்பரம் பலரின் கவனத்தை ஈர்த்தது. நான்சியுடன் ஒவ்வொரு நாளும் குறைந்தது ஆறு அல்லது ஏழு பேர் தொலைபேசியில் பேசி தங்கள் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இவர் செய்து வந்த இந்த அற்புத பணியைக் குறித்து கேள்விப்பட்ட இவாஞ்செலிக்கல் சபையின் சிறந்த போதகரும், புகழ்பெற்ற எழுத்தாளருமான, Tony Campolo நான்சியைத் தேடிச் சென்றார். அவர் நான்சியிடம், "உங்களைச் சக்கர நாற்காலியில் முடக்கிப் போட்டது எது?" என்று கேட்டார். நான்சி சொன்ன பதில் அவரை அதிர்ச்சியடையச் செய்தது. "நான் தற்கொலை முயற்சி செய்தேன். அதனால் இப்போது சக்கர நாற்காலியில் வாழ்கிறேன்." என்று கூறினார். நான்சி தொடர்ந்து தன்னைப் பற்றி கூறினார்: "என் சிறுவயது முதல் நான் தனிமையில் துன்புற்றேன். எனக்கென்று நண்பர்கள் இல்லை. நான் செய்து வந்த வேலை எனக்குப் பிடிக்கவில்லை. ஒரு நாள் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுடன், நான் வாழ்ந்து வந்த அடுக்கு மாடி கட்டிடத்திலிருந்து கீழே குதித்தேன். என் உயிர் போகவில்லை, ஆனால், அந்த விபத்தால் என் இடுப்புக்குக் கீழ் உணர்விழந்து போனேன். நான் மருத்துவ மனையில் இருந்தபோது, இயேசு எனக்குத் தோன்றி, 'நான்சி, இதுவரை நீ முழு உடலோடும், முடமான மனதோடும் வாழ்ந்து வந்தாய். இனிமேல் நீ முடமான உடலோடு வாழப் போகிறாய். ஆனால், உன் மனம் இனி முழுமையடைந்துள்ளது' என்று சொல்லிச் சென்றதை நான் உணர்ந்தேன்." என்று அவர் கூறினார்.
தன்னைப் போல் தனிமையில் வாடும் பலருக்கு தான் எவ்வகையில் உதவிகள் செய்ய முடியும் என்பதைச் சிந்தித்த நான்சி, இந்த விளம்பரத்தை வெளியிட்டார். இன்றும் அவர் தனிமையில் துன்புறும் பலருக்கு ஒவ்வொரு நாளும் ஆலோசனைகள் வழங்கி வருகிறார். வழக்கமாக சக்கர நாற்காலியில் இருப்பவர்கள் பிறரது உதவிகளைத் தேட வேண்டியிருக்கும். தன்னைக் கவனித்துக் கொள்ள ஆட்கள் தேவை என்று அவர்கள் விளம்பரங்கள் கொடுக்க வாய்ப்புண்டு. ஆனால், நான்சியைப் பொறுத்தவரை, உதவிகள் பெறுவதிலும் தருவதையே அவர் தன் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.
சக்கர நாற்காலியில் இருந்தபடியே சரித்திரம் படைத்துள்ள, சாதனைகள் புரிந்துள்ள பலரைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அவர்களுக்கு சக்கர நாற்காலி ஒரு சிறையோ, அல்லது குறையோ அல்ல. மாறாக, மற்றவர் குறை தீர்க்கும் ஒரு வழியாக அமைந்துள்ளது.
குறைகள், நிறைகள் இரண்டும் ஒவ்வொரு மனிதருக்கும் தரப்பட்டுள்ள கொடைகள். குறைகள்...கொடைகளா? என்ற கேள்வி எழலாம். ஆம், குறைகளும் கொடைகள்தாம். குறைகளையும் நிறைகளாக மாற்றும் சக்தி நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது. நமக்குள்ள குறையைப் பெரிதுபடுத்தி, நம்மிடம் உள்ள மற்ற கொடைகளையும் பயன்படுத்தாமல் புதைத்து விடுகிறோமா என்ற கேள்வியை நம் மனதில் எழுப்புகிறது இன்றைய நற்செய்தி. நமக்குத் தரப்பட்டுள்ள கொடைகள் அனைத்திற்கும் நாம் கணக்கு கொடுக்க வேண்டியிருக்கும் என்று இன்றைய நற்செய்தி நமக்கு இடித்துரைக்கிறது.

ஒவ்வோர் ஆண்டின் இறுதியில் நாம் மேற்கொள்ளும் ஒரு முயற்சி கணக்கு வழக்குகளை முடித்து ஒப்படைப்பது. வழிபாட்டு ஆண்டின் இறுதியில் இருக்கும் நாம் கணக்கு வழக்குகளை முடித்து, கடவுளிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை நினைவுறுத்த இன்றைய நற்செய்தியில் தாலந்து உவமை நமக்குத் தரப்பட்டுள்ளது.
கணக்கு-வழக்கு என்பது நாம் பயன்படுத்தும் ஒரு பொதுவான சொற்றொடர். நமது வரவு செலவு கணக்கு சரியாக இருந்தால், அங்கு வழக்கு தேவையில்லை. எப்போது கணக்கு சரிவர அமையாமல் இருக்கிறதோ, அங்கு கணக்கை விட வழக்கு அதிகமாகி விடும். இன்றைய நற்செய்தி கணக்கையும் சொல்கிறது, அதற்கு மேல் வழக்கையும் நடத்துகிறது.

தாலந்து உவமை மத்தேயு நற்செய்தியிலும், லூக்கா நற்செய்தியிலும் சொல்லப்பட்டுள்ளது. இவ்விரு நற்செய்தி பகுதிகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, 'தாலந்துகள்' அல்லது 'திறமைகள்' என்பதைப் பற்றி இருவேறு கண்ணோட்டங்களைப் பார்க்க முடியும்.
மத்தேயு நற்செய்தியில் மூவரிடம் தாலந்துகள் தரப்படுகின்றன. ஒருவருக்கு ஐந்து, மற்றொருவருக்கு இரண்டு மூன்றாம் ஆளுக்கு ஒன்று என்று 'அவரவர் திறமைகளுக்கு ஏற்ப' (மத். 25:15) பிரித்துத் தரப்படுகின்றன. லூக்கா நற்செய்தியில் பத்து பேருக்கு ஆளுக்கு ஒரு 'மினா' நாணயம் சமமாக வழங்கப்படுகிறது. (லூக். 19:13) ஒவ்வொருவருக்கும் சமமான வாய்ப்புக்கள், திறமைகள் வழங்கப்படுவதை லூக்கா நற்செய்தியில் கேட்கும்போது மனதுக்குத் திருப்தியாக உள்ளது. ஆனால், இது நடைமுறை வாழ்வில் நாம் காணும் எதார்த்தம் அல்ல என்றும் நம் மனம் சொல்கிறது. வாழ்வில் நாம் அடிக்கடி சந்திக்கும் ஒரு எதார்த்தத்தை மத்தேயு நற்செய்தி சொல்வதுபோல் தெரிகிறது. ஒரே குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும், அவர்கள் மத்தியில் பலதரப்பட்ட, பல அளவில் திறமைகள் உள்ளன. நம்மில் பலர் மற்றவர்களிடம் இருக்கும் திறமைகளை, அவர்கள் பெறும் கூடுதலான வாய்ப்புக்களை எண்ணி, எண்ணி, மனம் வெந்து வாழ்கிறோம். நம்மிடம் உள்ளத் திறமைகளை விட அடுத்தவர்களிடம் அதிகமாக உள்ள திறமைகளே நம் கண்ணையும், கருத்தையும் நிறைக்கின்றன.
ஆனால், இன்னும் சிறிது ஆழமாகச் சிந்தித்தால், லூக்கா நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளதும் உண்மையென்பதை உணர முடியும். அதாவது, அனைவருக்கும் திறமைகள் சமமாகப் பிரித்துத் தரப்பட்டுள்ளன என்ற உண்மையை நாம் உணர முடியும். 'திறமைகள்' என்ற சொல்லை வெறும் அறிவுத் திறமை, கலைத் திறமை, விளையாட்டுத் திறமை என்ற ஒரு குறுகிய வட்டத்திற்குள் பார்க்காமல், திறமை என்பதை ஒரு பரந்துபட்ட கோணத்தில் பார்த்தால், நம் அனைவருக்குமே பலவகைத் திறமைகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்வோம்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழலில் ஒவ்வொரு வகையில் திறமை பெற்றவர்கள் என்பதை எடுத்துச் சொல்ல நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு கதையை மீண்டும் ஒரு முறை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.
இலக்கியங்களைக் கரைத்துக் குடித்திருந்த ஒரு அறிவியல் மேதை ஒருநாள் படகிலேறி ஆற்றைக் கடந்து கொண்டிருந்தார். படகோட்டியிடம், "உனக்குக் கம்பராமாயணம் தெரியுமா?" என்று கேட்க, படகோட்டி "தெரியாது, ஐயா" என்றார். "சே! உன் வாழ்வில் பாதியை நீ இழந்துவிட்டாயே!" என்று அறிவாளி வருத்தப்பட்டார். ஆற்றில் சிறிது தூரம் சென்றபின், மீண்டும் அந்த மேதை படகோட்டியிடம், "சரி, உனக்கு ஏதாவது ஒரு திருக்குறள் சொல்லத் தெரியுமா?" என்று கேட்டார். படகோட்டி, தலை குனிந்து, "தெரியாது" என்று முணுமுணுத்தார். அறிவாளி அவரிடம், "உன் வாழ்வின் பெரும்பகுதியை நீ இழந்து விட்டாய்!" என்று கூறினார். அந்த வேளையில் படகு நடு ஆற்றில் ஒரு சுழலில் சிக்கியது. அப்போது படகோட்டி அறிவாளியிடம், "ஐயா! உங்களுக்கு நீச்சல் தெரியுமா?" என்று கேட்க, அறிவாளி, "தெரியாது!" என்று சொன்னார். "அப்படியானால், நீங்கள் உங்கள் இப்போது உங்கள் முழு வாழ்வையும் இழந்து விட்டீர்கள்" என்று சொல்லிவிட்டு, தண்ணீரில் குதித்து நீந்திச் சென்றார் என்று கதை முடிகிறது. ஒருவேளை அந்தப் படகோட்டி அறிவாளியையும் தன் முதுகில் சுமந்து நீந்திச் சென்று அவரைக் காப்பாற்றியிருப்பார் என்று நான் நினைக்கிறேன்.

திறமைகள் பலவகை. வெளிப்படையாக, பலரையும் பிரமிக்க வைக்கும் வண்ணம் காட்டப்படும் திறமைகளையே நாம் பெரும்பாலும் 'திறமைகள்' என்று முத்திரை குத்துவதால், நம்மில் பலர் துன்புறுகிறோம்.
இந்தத் திறமைகள் நம்மிடம் இல்லையே என்ற ஏக்கத்தில்,
நம்மிடம் உள்ளவை திறமைகள்தானா என்ற தயக்கத்தில்,
மற்றவர்களுக்கு இந்தத் திறமைகள் அதிகம் உள்ளனவே என்ற பொறாமையில்,
நம்மிடம் உள்ளத் திறமைகளை, நமக்கென்று இறைவன் சிறப்பாக வழங்கியுள்ள கொடைகளை நாம் சரிவர பயன்படுத்தாமல் புதைத்து விடுகிறோம். இன்றைய நற்செய்தியை வாசிக்கும்போது, புதைக்கப்பட்ட தாலந்தைப் பற்றியே அதிகமான எண்ணங்கள் எழுகின்றன.

தாலந்தைப் பெற்றவர்கள் கணக்கு கொடுக்க வரும்போது, அவர்கள் சொல்லும் கூற்றுகள் நம் சிந்தனையைத் தூண்டுகின்றன. 5 தாலந்துகளையும், 2 தாலந்துகளையும் பெற்றவர்கள் தங்களுக்குத் தரப்பட்ட கொடைகளைப் பற்றிப் பேசுகின்றனர். அக்கொடைகளைப் பலுகச் செய்ததால் தங்களுக்கு உண்டான மகிழ்வைக் கூறுகின்றனர். ஒரு தாலந்தைப் பெற்றவரோ, தனக்கு அளிக்கப்பட்ட கொடையைப் பற்றி பேசவில்லை. மாறாக, அந்தக் கொடையைத் தந்தவரைப் பற்றி குறை கூறுகிறார்:
ஐயா, நீர் கடின உள்ளத்தினர்; நீர் விதைக்காத இடத்திலும் போய் அறுவடை செய்பவர்; நீர் தூவாத இடத்திலும் விளைச்சலைச் சேகரிப்பவர் என்பதை அறிவேன். உமக்கு அஞ்சியதால் நான் போய் உம்முடைய தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன். இதோ, பாரும், உம்முடையது.” மத்தேயு நற்செய்தி 25: 24-25
வாழ்வில் நாம் பெற்றுள்ள பல கொடைகளை மறந்துவிட்டு, அல்லது, மறுத்துவிட்டு, கடவுளை எத்தனை முறை குறை கூறியிருக்கிறோம்?

இன்றைய நற்செய்தியின் இறுதியில் வரும் வரிகள் மிகவும் சவாலானவை. என்னைப் பொறுத்தவரை, நற்செய்தியில் நான் சந்தித்துள்ள மிகப்பெரிய சவால் இது என்றே சொல்ல வேண்டும். சவாலான அந்த வரிகள் இவைதாம்: அந்தத் தாலந்தை அவனிடமிருந்து எடுத்துப் பத்துத் தாலந்து உடையவரிடம் கொடுங்கள். ஏனெனில் உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும். அவர்கள் நிறைவாகப் பெறுவர். இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும். மத்தேயு 25: 28-29
சமூகநீதி என்ற கண்ணோட்டத்திலிருந்து பார்த்தால், உள்ளவர்களிடமிருந்து செல்வங்களைப் பறித்து, இல்லாதவர்களுக்கு கொடுக்க வேண்டும். ஆனால், நற்செய்தியின் இக்கூற்று உள்ளவர்-இல்லாதோருக்கு இடையே உள்ள இந்த அநீதியை இன்னும் அதிகரிப்பதைப் போல் ஒலிக்கிறது. இயேசுவின் இந்த உவமை சமூக நீதியை நிலைநாட்ட சொல்லப்பட்ட உவமை அல்ல. சமூகநீதி பற்றி இயேசு வேறு பல இடங்களில் உவமைகளும், பாடங்களும் தந்துள்ளார். இந்த உவமையில் இயேசு நமக்குக் கூற விழையும் ஒரே பாடம்... நம் ஒவ்வொருவருக்கும் தரப்பட்டுள்ள கொடைகளை எவ்விதம் பயன்படுத்துகிறோம் என்பதற்கு நாம் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும், வேறு சாக்கு போக்குகள் சொல்லக் கூடாது என்ற ஒரே பாடம். இந்தக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது உவமையின் இறுதி வரிகள் எனக்குச் சொல்லித்தந்த விளக்கம் இதுதான்:
கொடைகளில் கவனம் செலுத்தி, அவைகளில் மகிழ்வும், நிறைவும் அடைவோர் அந்தக் கொடைகளைப் பலுகிப் பெருகச் செய்து மேலும் மேலும் நிறைவடைவர். இதைத்தான் "உள்ளவர் எவருக்கும் கொடுக்கப்படும்" என்ற இந்த வார்த்தைகள் சொல்வதாக நான் உணர்கிறேன். மனித வாழ்வே ஒரு பெரும் கொடை. அந்தக் கொடையை சரிவர பயன்படுத்துவதே தெய்வீகத்தை வெளிப்படுத்தும் என்ற பொருளில் புனித Irenaeus கூறியுள்ள வார்த்தைகள் இவை: "மனிதப் பிறவியொன்று முழுமையாக வாழ்வதே இறைவனின் மாட்சி." (“The glory of God is a human being fully alive; and to be alive consists in beholding God.” - Saint Irenaeus)
இதற்கு எதிர் துருவமாக இருப்பவர்கள் தங்கள் கொடைகளைப் பற்றி சிந்திக்காமல், தங்கள் குறைகளைப் பெரிதுபடுத்துபவர்கள். அந்தக் குறைகளை இறைவனே தந்தார் என்று குற்றம் சாட்டுபவர்கள். நிறைகளை மறந்துவிட்டு, குறைகளிலேயே கவனம் அனைத்தையும் செலவிடுவதால், இவர்களது நிறைகளும் கொடைகளும் புதையுண்டு போகின்றன. இதைத்தான், "இல்லாதோரிடமிருந்து அவரிடமுள்ளதும் எடுக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

தாலந்து உவமையில் சவால்கள் நிறைந்த பகுதிகள் இருந்தாலும், நமக்குப் பாடமாக அமையும் பகுதிகளில் நாம் கவனம் செலுத்துவோம். பாகுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த இந்த மனித சமுதாயத்தில் நாம் ஒவ்வொருவரும் தனித் திறமை உடையவர்கள். நமது குறைகளையும் திறமைகளாக மாற்றும் வழிகள் உண்டு. குறைகளைத் திறமைகளாக மாற்றி தங்களையும், பிறரையும் வளர்த்தவர்கள் இன்றும் உலகில் பல ஆயிரம் பேர் உள்ளனர்.
நம் திறமைகள், கொடைகளில் நம் கவனத்தைத் திருப்பி, அவைகளைப் புதைத்து விடாமல், பலருக்கும் பல மடங்காகப் பயன்தரும் வகையில் நம் திறமைகளுக்குச் செயல்வடிவம் கொடுக்கவே நாம் அழைக்கப்பட்டுள்ளோம். பயன்படுத்தாமல், புதைத்துவிடும் நம் கொடைகளுக்கு நாம் வாழ்வின் இறுதியில் கணக்கு கொடுக்க வேண்டும்.








All the contents on this site are copyrighted ©.