2011-11-12 14:59:37

அருள்தந்தை லொம்பார்தி : பலனை எதிர்பார்க்காத அன்பு உலகை உய்விக்க உதவும்


நவ.12,2011. ஒருவர் ஒருவர் மீதான நம்பிக்கையும், கைம்மாறு கருதாமல் ஒருவர் மீது காட்டப்படும் அன்பும் இவ்வுலகை மேம்படுத்துவதற்கு அவசியமானவை என்று திருப்பீடப் பேச்சாளரான இயேசு சபை அருள்தந்தை பெதெரிகோ லொம்பார்தி கூறினார்.
“Octava Dies” என்ற வத்திக்கான் தொலைக்காட்சியின் வார நிகழ்ச்சியில், “இக்காலத்திய நெருக்கடியும் கைம்மாறு கருதாதப் பிறரன்புச் செயலும்” என்ற தலைப்பில் பேசிய அருள்தந்தை லொம்பார்தி இவ்வாறு கூறினார்.
தற்போது ஐரோப்பியக் கண்டத்தைத் தாக்கியிருக்கும் பொருளாதார நெருக்கடியினால் உலகின் பல பாகங்களில் ஏற்பட்டுள்ள பதட்டநிலைகள், கவலைகள் மற்றும் வேதனைகள், அரசியல்வாதிகள் மற்றும் பொருளாதார நிபுணர்களின் திறமைகளுக்குச் சவாலாக இருக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐரோப்பியத் தன்னார்வ ஆண்டையொட்டி உரோமில் கூட்டம் நடத்திய இளையோர்க்குத் திருத்தந்தை ஆற்றிய உரையின் மூலம் இப்பிரச்சனைகளுக்கு ஒரு சிறு தீர்வைக் கொடுக்கும் நம்பிக்கையைப் பெற முடியும் என்றும் அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.
“இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள்” என்ற இயேசுவின் திருச்சொற்களின் அடிப்படையில் செயல்பட வேண்டும், அத்துடன் “மனிதன் அப்பத்தினால் மட்டும் வாழ்வதில்லை”, ஒருவர் ஒருவரை மதித்து, பிரதிபலனை எதிர்பார்க்காமல் அன்பு செய்து ஒருவர் ஒருவரை நம்பி வாழ்வதன் மூலம் உலகை மேம்படுத்த உதவ முடியும் என்று அருள்தந்தை லொம்பார்தி கூறினார்.








All the contents on this site are copyrighted ©.