2011-11-11 15:31:14

கணனியுலக கொள்ளைக்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை


நவ.11,2011. நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் நாற்பது இலட்சத்துக்கும் மேற்பட்ட கணனிகளில் சட்டவிரோத மென்பொருட்களை பதியச் செய்தார்கள் என ஏழு பேர் மீது நியூயார்க் நகர சட்டநடவடிக்கை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
அமேசான் இணைய விற்பனை நிறுவனம், நாஸா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், அமெரிக்க அரசின் வரித்துறை சேவைகள் அலுவலகமான ஐ.ஆர்.எஸ். போன்றவற்றின் இணையதளங்களையும் இலக்குவைத்து சட்டவிரோத மென்பொருட்களை இவர்கள் அனுப்பியிருந்தனர்.
எஸ்டோனியர்கள் ஆறு பேர், இரஷ்யர் ஒருவர் அடங்கிய இந்தக் கும்பலை "சைபர் பண்டிட்ஸ்" அதாவது "கணினியுலக கொள்ளைக்காரர்கள்" என்று சட்ட நடவடிக்கை அதிகாரிகள் வருணித்துள்ளனர்.
இணையதளங்களில் தெரியும் வேறொரு பொருளுக்கான விளம்பரங்களை பாவனையாளர்கள் சொடுக்கும்போது அது அவர்களை குறிப்பிட்ட அந்தப் பொருளுக்கான இணையதளத்துக்கு இட்டுச் செல்லாமல், இவர்களுடைய சட்டவிரோத கணனி சர்வர்களினால் விளம்பரம் செய்யப்படும் பொருட்களுக்கு கொண்டு சென்று விட்டிருந்தன.
இவர்கள் வழியாக எத்தனை பேர் தமது விளம்பரங்களைப் பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்து அந்த பொருளின் விற்பனையாளர்கள் இவர்களுக்கு பணம் கொடுத்து வந்துள்ளார்கள் என்றும் தெரிகிறது.
இந்த ஏமாற்று வேலையின் மூலம் இந்தக் கும்பல் 14 மில்லியன் டாலர்களை ஈட்டியுள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.