2011-11-11 15:28:22

இந்தியாவில் கல்வி பெறும் உரிமை விழிப்புணர்வு, திருச்சபை நடவடிக்கை


நவ.11,2011. இந்தியாவில் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை உறுதிப்படுத்தும் சட்டத்தின்கீழ் தங்களது பிள்ளைகள் பெறும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் இவ்வெள்ளிக்கிழமை இறங்கியுள்ளது இந்தியக் கத்தோலிக்கத் திருச்சபை.
இந்நடவடிக்கை குறித்துப் பேசிய இந்திய ஆயர் பேரவையின் கல்வி ஆணைக்குழுச் செயலர் அருட்பணி Kuriala Chittattukalam, பெற்றோரும் பிள்ளைகளும் தங்களது உரிமைகளை அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்று கூறினார்.
6க்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட சிறாருக்குக் கட்டாய மற்றும் இலவசக் கல்வி வழங்க, இந்தியச் சட்டம் அனுமதிக்கின்றது. இந்தச் சட்டம் 2013ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்பட வேண்டும்.
கல்வி பெறும் உரிமை குறித்தத் திருச்சபையின் விழிப்புணர்வுச் செயல்பாடுகளை நாடு முழுவதும் 13 இலட்சம் பள்ளிகளில் ஓராண்டுக்கு நடத்தத் திட்டமிட்டுள்ளது திருச்சபை.
நகரச் சேரிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் அதிகம் இல்லாத ஒதுக்குப்புறப் பகுதிகளில் வாழும் குடும்பங்களுக்கு சிறார் கல்வி குறித்த உரிமைகளை எடுத்துச் செல்லும் முக்கிய நோக்கத்துடன் திருச்சபை இதில் ஈடுபட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.