2011-11-10 16:16:46

பெண் குழந்தைகளை அழித்து விடும் முயற்சிகளில் சீனா ஈடுபட்டுள்ளது - கர்தினால் Martino


நவ.10,2011. சீனாவில் வலியுறுத்தப்படும் ஒரு குழந்தை விதிமுறையால், அங்குள்ள பெற்றோர் தங்களுக்குப் பிறக்கும் குழந்தை ஆண் மகவாக இருக்க வேண்டும் என்றும், பெண் மகவாக இருந்தால், அதை அழித்து விடும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கர்தினால் Renato Raffaele Martino கூறினார்.
Dignitatis Humanae என்று அழைக்கப்படும் மனித மாண்பு நிறுவனத்தின் கவுரவத் தலைவராக இருக்கும் கர்தினால் Martino, ‘அனைத்து பெண்களுக்கும் அனுமதி’ என்று பொருள்படும் All Girls Allowed என்ற பிறரன்பு நிறுவனத்தின் தலைவர் Chai Lingஐ இப்புதனன்று உரோமையில் சந்தித்துப் பேசியபோது இவ்வாறு கூறினார்.
1989ம் ஆண்டு சீனத் தலைநகரில், Tiananmen சதுக்கத்தில் போராட்டங்களில் ஈடுபட்ட மாணவத் தலைவர்களில் ஒருவரான Chai Ling இருமுறை நொபெல் அமைதி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர்.
Chai Lingஐச் சந்தித்தது தனக்குக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு என்று எடுத்துரைத்த கர்தினால் Martino, இவர் உலகெங்கும் சென்று, பெண் குழந்தைகளை அழிப்பதற்கு பல்வேறு நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை உலகறியச் செய்கிறார் என்றும், இதனால் இந்த அநீதி உலக மக்களின் மனசாட்சியைத் தட்டியெழுப்புகிறது என்றும் கூறினார்.
இன்று சீனாவில் பிறக்கும் ஒவ்வொரு 120 ஆண் குழந்தைகளுக்கு 100 பெண் குழந்தைகளே பிறக்கும்படியான நிலை உருவாகியுள்ளது என்பதைச் சுட்டிக் காட்டிய Chai Ling, இந்நிலை சீனாவிலும் இன்னும் உலகின் பிற நாடுகளிலும் நீடித்தால், ஆண் பெண் இருபால் நீதி மிகவும் குறைந்து, இதனால் பல பிரச்சனைகள் உருவாகும் என்று கூறினார்.







All the contents on this site are copyrighted ©.