2011-11-10 16:11:51

நவம்பர் 11 வாழ்ந்தவர் வழியில்.... ஆல்ஃப்ரட் ஹெர்மான் ஃப்ரைய்ட்


“போர் தன்னிலே, ஒழுங்கின்மையின் அடையாளம் இல்லை. நீதியினால் காணப்பட்ட ஒரு தீர்வை போருக்குப் பதிலாக நாம் வைக்க விரும்பினால் முதலில் சர்வதேச அளவிலான அமைதியின்மைக்கு சர்வதேச ஒழுங்குமுறையை ஒரு வரையறையாக வைக்க வேண்டும்”. இவ்வாறு சொன்னவர் ஆல்ஃப்ரட் ஹெர்மான் ஃப்ரைய்ட் (Alfred Hermann Fried). இவர் Tobias Asser என்பவருடன் சேர்ந்து 1911ம் ஆண்டில் நொபெல் அமைதி விருதைப் பெற்றார். 1864ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி ஆஸ்ட்ரியாவின் வியன்னாவில் பிறந்த யூதரான Fried, தனது 15வது வயதில் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு, புத்தகக் கடையில் வேலை செய்யத் தொடங்கினார். 1883ம் ஆண்டில் பெர்லின் சென்று, 1887ம் ஆண்டில் சொந்தமாகப் புத்தகக் கடை ஒன்றை ஆரம்பித்தார். 1889ம் ஆண்டில் Bertha von Suttner என்பவர் எழுதிய Die Waffen nieder அதாவது உங்கள் ஆயுதங்களைக் கைவிடுங்கள் என்ற புத்தகத்தை இவர் வெளியிட்டார். அதன்பின்னர் Fried ம், von Suttner ம் சேர்ந்து இதே பெயரில் இதழ் ஒன்றை ஆரம்பித்தனர். இதில் இவர் அமைதி குறித்த தனது மெய்யியல் கருத்துக்களை வெளியிட்டு வந்தார். 1892ம் ஆண்டில் ஜெர்மன் அமைதிக் கழகம் ஆரம்பிக்க உதவினார் ஃப்ரைய்ட். உலக அளவில் அமைதியை உறுதிப்படுத்துவதற்கு நவீன நிறுவனங்களுக்குக் கருத்துக்களை வழங்கிய ஆன்றோருள் ஒருவராகவும் இவர் கருதப்படுகிறார். இவரின் முக்கிய கோட்பாடு, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. Esperanto இயக்கத்திலும் முக்கிய உறுப்பினராக இருந்த ஃப்ரைய்ட், 1903ம் ஆண்டில் சர்வதேச Esperanto மொழி என்ற நூலையும் வெளியிட்டார். 1911ம் ஆண்டில் நொபெல் அமைதி விருதையும் பெற்றார் ஆல்ஃப்ரட் ஹெர்மான் ஃப்ரைய்ட். முதல் உலகப் போரின் போது சுவலிட்சர்லாந்தில் வாழ்ந்த இவர், 1921ம் ஆண்டு மே 5ம் தேதி வியன்னாவில் இறந்தார்.







All the contents on this site are copyrighted ©.