2011-11-10 16:14:32

திருத்தந்தை : மனிதன், கடவுளோடு சரியான உறவு கொண்டு வாழ்வதே அமைதிக்குச் சிறந்த வழி


நவ.10,2011. பிரச்சனைகள் நிறைந்த இக்காலத்தில், பல்வேறு மதங்கள் மத்தியில் ஒருவர் ஒருவரைப் புரிதல் மற்றும் மதிக்கும் சூழலை உருவாக்கும் உரையாடல் மிகவும் முக்கியமானது என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
இத்தகைய உரையாடலானது பல்வேறு மதங்கள் மத்தியில் ஒருவர் ஒருவர் மீது திடமான நம்பிக்கையும் நட்புறவும் உருவாக வழி அமைக்கும் என்றும் திருத்தந்தை கூறினார்.
நமது மரபுகளின் தூய நினைவுகள் நிறைந்த புனித பூமியில் வாழும் சமயத் தலைவர்களுக்கு இவ்வுரையாடல் அவசியமானது எனவும், இவர்கள் நல்லிணக்கத்தில் ஒன்று சேர்ந்து வாழ்வதன் இன்னல்களால் தினமும் சோதிக்கப்படுகிறார்கள் எனவும் அவர் கூறினார்.
இஸ்ரேல் சமய அவையின் 27 உறுப்பினர்களை இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய போது இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
புனித பூமியில் மறைப்பணியாற்றும் அனைத்து மதத் தலைவர்கள் மற்றும் பாரம்பரியங்கள் மத்தியில் நம்பிக்கையும் உரையாடலும் நிறைந்த சூழலைப் பேணி வளர்க்குமாறு இஸ்ரேல் சமய அவை உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார் பாப்பிறை.
இக்காலத்தில் சமயத் தலைவர்கள் எதிர்கொள்ளும் இரண்டு விதமான வன்முறைகளைத் தான் அண்மை அசிசிக் கூட்டத்தில் கூறியதை மீண்டும் குறிப்பிட விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒருபுறம் மதத்தின் பெயரால் வன்முறை பயன்படுத்தப்படுகின்றது, மறுபுறம் கடவுளை மறுப்பதால் ஏற்படும் வன்முறை எனவும் குறிப்பிட்ட திருத்தந்தை, மனிதன், கடவுளோடு சரியான உறவு கொண்டு வாழ்வதே அமைதிக்குச் சிறந்த வழியாகும் என்று தெரிவித்தார்.
புனித பூமியில் அமைதி ஏற்பட இடைவிடாமல் செபிக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார் திருத்தந்தை.
இந்த இஸ்ரேல் சமய அவையில் யூதம், கிறிஸ்தவம், இசுலாம் ஆகிய மதங்கள் உறுப்பினர்களாக உள்ளன.







All the contents on this site are copyrighted ©.